காலை உணவைத் தவிர்ப்பதால் சர்க்கரைநோய் வரலாம்! - ஆய்வில் தகவல் | skipping breakfast increases chances of diabetes

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (05/03/2019)

காலை உணவைத் தவிர்ப்பதால் சர்க்கரைநோய் வரலாம்! - ஆய்வில் தகவல்

டல் எடையைக் குறைக்க பலரும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, அதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, உணவுக் கட்டுப்பாடு என ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்கள். சிலர், காலை உணவைத் தவிர்த்தாலே உடல் எடை அதிகரிப்பது குறைந்துவிடும் என்று கருதி அதைத் தவிர்த்துவிடுவார்கள். உண்மையில், ஒருவர் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். 

காலை உணவைத் தவிர்த்தால் சர்க்கரை நோய்

`காலை உணவைத் தவிர்ப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்’ என்று ஏற்கெனவே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், `ஒருவர் வாரத்தில் 4 நாள்களுக்குமேல் காலை உணவைத் தவிர்த்தால், அவருக்கு `டைப் 2' சர்க்கரைநோய் வர வாய்ப்புகள் அதிகம்' என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. 

சுமார் ஒரு லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காலை உணவைத் தவிர்த்த 55 சதவிகிதம் பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 33 சதவிகிதம்பேர் காலை உணவைத் தவிர்த்து, அதற்கு ஈடாக நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, `ஜர்னல் ஆப் நியூட்ரீஷியன்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

உணவு

``வழக்கமாக மூன்று வேளை உணவில் எதைத் தவிர்த்தாலும் இன்சுலின் அதிகரிக்கும். இதுவே மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கும். காலை உணவு என்பது உடல்நலனில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்து, உடல் நலனைப் பாதுகாக்கிறது. எனவே, காலை உணவை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது” என்கிறார் மருத்துவர் அனூப் மிஸ்ரா.

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மொத்த மக்கள்தொகையில் 8.7 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 20 முதல் 70 வயது வரை அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் கிராமங்களைவிட நகரங்களில் வசிப்பவர்களே காலை உணவை அதிகமாகத் தவிர்க்கின்றனர். இதில் முதியவர்களைக் காட்டிலும் இளைஞர்களே முன்னணியில் இருக்கின்றனர். வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பது மற்றும் தொடர்ந்து வேலை காரணமாக ஏற்படும் மனஅழுத்தம் போன்றவற்றாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர். 

சர்க்கரை நோய்

சர்க்கரைநோய் என்பது ஒரு பரம்பரை நோய் என்று கருதப்பட்டுவந்த நிலையில், உணவுப் பழக்க வழக்கமும் அதற்கு ஒரு காரணமாக அமையலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காலை உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைப்போம்.


[X] Close

[X] Close