`அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்! -போலியோ முகாம் வழக்கில் நீதிபதி உத்தரவு | Madurai hc bench issues notice to actors ajith, vijay and surya in case related to pulse polio camp

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (08/03/2019)

கடைசி தொடர்பு:15:42 (08/03/2019)

`அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்! -போலியோ முகாம் வழக்கில் நீதிபதி உத்தரவு

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

போலியோ

நம் நாட்டில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணைகளாக நடத்தப்பட்டு வந்த இந்த முகாம் இந்த ஆண்டில் ஒரே தவணையாக நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்து கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. பின்னர், நிர்வாகக் காரணங்களால் முகாம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே தவணையில் முகாம் நடத்தப்படுவதற்கும், தள்ளி வைக்கப்படுவதற்கும் எதிராகக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.  

முகாம்

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த குழந்தைசாமிஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 10-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளது என்றார். அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் ஆனந்தமுருகன் ஆஜராகி, போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்படுவது இல்லை என்று வாதாடினார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், மக்களிடம் ஏற்கெனவே நன்கு அறிமுகமாகி உள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால் மக்களை எளிதாகச் சென்றடையும் என கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

சூர்யா - விஜய் - அஜீத்

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் நீதிபதிகளின் இந்த உத்தரவு குறித்துப் பேசினோம்,

``போலியோ முகாம்களைப் பொறுத்தவரை மக்களிடையே நூறு சதவிகித விழிப்புணர்வு ஏற்கெனவே இருக்கிறது. அதுதவிர, ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு பரப்புரைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, இருந்தபோதும் நீதிபதிகளின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அப்படி போலியோ உட்பட தடுப்பு மருந்துகள் தொடர்பான படங்களில் நடிக்க, முன்னணி நடிகர்கள் முன்வந்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.'' என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close