புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சூயிங்கம் - மக்கள் மருந்தகங்களில் விற்பனைக்கு அனுமதி | Story about nicotine chewing gum

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (12/03/2019)

கடைசி தொடர்பு:16:10 (12/03/2019)

புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சூயிங்கம் - மக்கள் மருந்தகங்களில் விற்பனைக்கு அனுமதி

புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சூயிங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் வேண்டாமே

நாடு முழுவதும் நாளுக்குநாள் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறுவிதமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் மருந்தகங்களில் புகையிலைக்கு மாற்றாகக் கருதப்படும் சூயிங்கம்களை விற்பனை செய்ய அனுமதித்துள்ளது. 

மருந்தகம்

`இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் பின்தங்கிய 80 சதவிகிதம் பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களைக் காக்கும்விதமாக நிக்கோட்டின் சூயிங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `நிர்மல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூயிங்கம், நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்பது சூயிங்கங்களைக் கொண்ட ஒரு அட்டை 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சூயிங்கம்

புகையிலைப் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் அதற்கு மாற்றாகக் குறைந்த அளவே நிக்கோட்டின் உள்ள சூயிங்கம்களைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இரண்டு வாரங்கள் பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. 

விலை அதிகமுள்ள மருந்துப் பொருள்களை எளிய மக்களும் வாங்கிப் பயன்பெறவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே மக்கள் மருந்தகங்கள். இந்த மருந்தகங்கள் நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த மருந்தகங்களில் பல்வேறு அத்தியாவசிய மருந்துகள் குறைந்தவிலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close