'75 வயது முதியவரின் சிறுநீரகத்தில் 552 கற்கள்!'- லேசர் சிகிச்சைமூலம் அகற்றம் | 552 Kidney stones Removal of laser therapy

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (14/03/2019)

கடைசி தொடர்பு:20:50 (14/03/2019)

'75 வயது முதியவரின் சிறுநீரகத்தில் 552 கற்கள்!'- லேசர் சிகிச்சைமூலம் அகற்றம்

மும்பையைச் சேர்ந்த முதியவரின் சிறுநீரகத்திலிருந்து 552 கற்கள் அகற்றப்பட்டன. 

மும்பையைச் சேர்ந்த முதியவரின் சிறுநீரகத்திலிருந்து 552 கற்கள் அகற்றப்பட்டன. மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு, கடந்த சில மாதங்களாக அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர், தானே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.

 

சிறுநீரக கற்கள்

 

மருத்துவர்கள்  அவரை பரிசோதித்துப் பார்த்ததில், முதியவரின் வலதுபக்க சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு லேசர் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது சிறுநீரகத்திலிருந்து  552 சிறிய கற்கள் அகற்றப்பட்டன. அவற்றில் இரண்டு கற்கள் மட்டும் 2 செ.மீ அளவுக்குப் பெரிதாக இருந்தன. மற்றவை  மிகச்சிறியவை.  

 

சிறுநீரக கற்கள்

முதியவருக்கு அறுவைசிகிச்சை செய்த டாக்டர் லோகேஷ் சின் கூறும்போது,''முதியவரின் சிறுநீரகத்தின் அருகே சிறிய துளையிட்டு லேசர் மூலம் முதலில் பெரிய கற்கள் உடைக்கப்பட்டு, சிறிய கருவிமூலம் அகற்றப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்'' என்றார். 

இதேபோல, கடந்த 2009 டிசம்பர் மாதம் 8-ம் தேதி, மும்பை துலேவில் உள்ள 'யூராலஜி இன்ஸ்டிட்யூட்'டில் அறுவைசிகிச்சை ஒன்று நடத்தப்பட்டது. அப்போது,  தன்ராஜ் வாடில் என்ற நோயாளியின் இடது சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை எண்டாஸ்கோப்பி கருவி உதவியுடன் டாக்டர் ஆசிஷ் ரவண்டேல் என்பவர் அகற்றினார். இது, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

kidney

இது தவிர, 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் நகரைச் சேர்ந்த அப்துல் அபு அல் ஹஜார் என்பவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது, 5,704 சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டது.


[X] Close

[X] Close