" 'மேத்ஸ்'னாலே பயம் ஏன்?" - காரணத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் | Why Maths anxiety occurs?

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:55 (19/03/2019)

" 'மேத்ஸ்'னாலே பயம் ஏன்?" - காரணத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்

ள்ளி மாணவர்களிடம், ' இருப்பதிலேயே மிகவும் கடினமான பாடம் எது?' என்று கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில் 'கணிதம்!' என்பதாகத்தான் இருக்கும்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான். கணிதத் தேர்வு அல்லது கணக்குகளைப் போடும்போது, மாணவர்கள் மட்டுமின்றி  பெரியவர்கள்கூட பதற்றமாகவும், அசௌகரியமாகவும், பீதியாகவும் உணர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கணிதம்

'கணிதப் பாடத்தை 'டீல்' செய்யும்போது மட்டும் ஏன் பதற்றம் (Maths Anxiety) ஏற்படுகிறது?' என்பதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். முதற்கட்டமாக, இத்தாலியைச் சேர்ந்த 1000 தொடக்கநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட  ஆய்வில், மாணவர்களைவிட மாணவிகள் கணக்குப் பாடம் தொடர்பாக அதிகமாகப் பதற்றத்துக்குள்ளாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து,  இங்கிலாந்தைச் சேர்ந்த 1,700 பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுவாக எல்லாரிடமும் கணிதம் என்பது ஒரு கடினமான பாடம் என்ற மனநிலை  இருக்கிறது. கணிதப் பயிற்சியின்போதும், தேர்வு நேரத்திலும் பதற்றம் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள்

கணிதத் தேர்வில் ஏற்கெனவே எடுத்த குறைவான மதிப்பெண், கணிதப் பாடத்தைப் படிப்பது தொடர்பாக உடன் படிக்கும் மாணவர்கள் அல்லது உடன்  பிறந்தவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது ஆகிய இரண்டும்தான் பதற்றம் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'கணிதத் தேர்வுகள்,  வீட்டுப்பாடங்கள் ஆகியவையும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுப்பதாக' ஆய்வின்போது மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதற்றத்துக்கு நேரடியான  காரணங்கள் இருப்பதைப்போன்று, மறைமுகக் காரணங்களாக பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். 

வீட்டுப்பாடம்

"கணிதப் பாடம் குறித்து பதற்றம்கொள்ளுமாறு ஒரு குழந்தையின் மனநிலையை வடிவமைப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மறைமுகக் காரணமாக  இருக்கின்றனர். கணிதம் மிகவும் கடினமான பாடம் என்ற தங்களது தவறான நம்பிக்கையையும் பதற்றத்தையும் முதலில் ஆசிரியர்கள், பெற்றோர் சரியாகக்  கையாள வேண்டும். அப்போதுதான், அது குழந்தைகளிடம் எதிரொலிக்காது" என்று பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ரோஸ்  மெக்லெல்லன் கூறியுள்ளார்.

'ரெண்டு நாள்ல கணக்குப் பரீட்சையை வச்சுக்கிட்டு விளையாடுறதப் பாரு!' என்று இனி குழந்தைகளிடம் கடுகடுக்காதீர்கள். எல்லாப் பாடங்களையும் போன்றுதான் கணிதமும் என்ற மனநிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள் என்பதுதான் இந்த ஆய்வு சொல்லும் செய்தி.