மலேசியாவிலிருந்து `மனிதக் கரு' கடத்தியவர் கைது! | Human embryo smuggling man arrested in mumbai

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (19/03/2019)

கடைசி தொடர்பு:20:17 (19/03/2019)

மலேசியாவிலிருந்து `மனிதக் கரு' கடத்தியவர் கைது!

மனித கரு

லேசியாவிலிருந்து மும்பை வந்த விமானத்தில் மனிதக் கருவை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல பயணிகளிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒருவரை பரிசோதித்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் கடத்தி வந்த பொருள் விநோதமாகக் காணப்பட்டது. அவரிடம் இருந்த சிறிய பார்சலில் ஒரு குப்பி இருந்தது. அதில் பதப்படுத்தப்பட்டநிலையில் அந்தப் பொருள் இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவரது பெயர் பார்த்திபன் துரை என்பது தெரியவந்தது. மலேசியாவிலிருந்து மும்பையில் உள்ள ஒரு பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைக்குச் சட்டவிரோதமாக அந்தக் கருவைக் கடத்தி வந்துள்ளார். இதற்காகக் குறிப்பிட்ட தொகையை மருத்துவமனையிலிருந்து கமிஷனாகப் பெற்றுக்கொண்டு இந்தச் செயலில் இறங்கியது தெரியவந்தது. கடந்த 18 மாதங்களில் மட்டும் இதுபோன்று 10 முறை கருவைக் கடத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனையின் இணை நிறுவனர் கோரல் காந்தி என்ற பெண்மணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், `கோரல் காந்தி புகழ்பெற்ற மருத்துவர். அவருக்குச் சொந்தமான இந்த மருத்துவமனையில் இதுபோன்ற முறைகேடான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, சட்டரீதியாக வழக்கைச் சந்திப்போம்' என்று அவரது வழக்கறிஞர் சுஜய் கண்டவ்லா தெரிவித்துள்ளார்.

மனிதக் கரு

இந்தச் சம்பவம் குறித்து கருத்துதெரிவித்த வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், `மலேசியாவில்  `ஹார்ட் ஏ ஆர் டி'  என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை நடத்தி வருபவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர்கள் தங்களது நிறுவனம் மூலம் வாடகைத்தாய், கரு தானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்தான் இந்த பார்த்திபன் துரை. `ஹார்ட் ஏ ஆர் டி'  நிறுவனத்தார் இதுபோன்று சட்டவிரோதமாக பல மருத்துவமனைகளுக்கு மனிதக் கருவைக் கடத்தி விற்பனை செய்து பெருமளவில் பணம் பெற்று வந்திருப்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது. 

 

மனிதக்கரு

இந்நிலையில் மும்பை வந்த பார்த்திபன் துரை, விமானத்திலிருந்து கீழே இறங்கியதும் `ஐ வி எப்' க்ளினிக் இணை நிறுவனர் கோரல் காந்தியைத் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து பார்த்திபன் துரை கொண்டுவந்த பார்சலை கோரல் காந்தி பெற்றதற்கான ஆதாரங்கள்  எங்களிடம் உள்ளன. வாடகைத்தாய், குழந்தைப்பேறு, செயற்கைமுறை கருத்தரித்தல் போன்றவற்றுக்கு வெளிநாடுகளை விட இந்தியாவில் செலவு மிகவும் குறைவு என்பதால் பல தம்பதிகள் இங்கு வருவது அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி `கரு' விற்பனை நடந்து வருகிறது. கரு தானம் செய்பவர்களிடமிருந்து கருவைப் பெறும் சில மருத்துவமனைகள் இதை வர்த்தகமாக்கி பணம் சம்பாதித்து வருகின்றன''  என்றனர்.