5 ஜி தொழில்நுட்பத்தில் 3,000 கி.மீ தூரத்திலிருந்து அறுவை சிகிச்சை! | China conducts world's 1st remote surgery using 5G!

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (20/03/2019)

கடைசி தொடர்பு:20:45 (20/03/2019)

5 ஜி தொழில்நுட்பத்தில் 3,000 கி.மீ தூரத்திலிருந்து அறுவை சிகிச்சை!

லகில் முதல்முறையாக சீனாவில், 5 ஜி தொழில்நுட்ப உதவியுடன் ஒரு நோயாளிக்கு 3000 கி.மீ தொலைவிலிருந்து மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 5 ஜி தொழில்நுட்பம் தற்போது முன்னணியில் உள்ளது. சீனாவில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகள், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  அங்குள்ள ஹுவெய் நிறுவனத்துடன் இணைந்து பிஎல்ஏ மருத்துவமனையில் `தொலைதூர அறுவை சிகிச்சை' ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.  

surgery

நரம்புமண்டலப் பிரச்னை காரணமாக வரக்கூடிய `பார்க்கின்சன்' நோயால் அவதிப்பட்ட ஒரு நோயாளி, சீனாவின் பெய்ஜிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மூளையில் `பேஸ்மேக்கர்' போன்று ஒரு கருவியைப் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை, தெற்கு சீனாவைச் சேர்ந்த லிங்க் ஜிபெய் என்ற மருத்துவர் மேற்கொண்டார்.

அதன்படி, பெய்ஜிங் மருத்துவமனையில் இருந்த அந்த நோயாளிக்கு 3,000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வீடியோ மூலம் அறுவைசிகிச்சை செய்தார். 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சையை அடுத்து, தற்போது அந்த நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அறுவைசிகிச்சை மேற்கொண்ட டாக்டர் லிங்க் ஜிபெய் கூறும்போது, `இந்த அறுவை சிகிச்சை நேரில் இருந்து செய்வதுபோன்றே இருந்தது. தொலைவில் இருந்த உணர்வே இல்லை' என்றார்.

சிகிச்சை

கடந்த ஆண்டு இதே தொழில்நுட்பத்தில் ஒரு பன்றிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிழக்கு சீனாவின் பியூஜியன் மாகாணத்தின் தலைநகரான ப்யுஷோயு நகரில் உள்ள மருத்துவமனையில் ஈரல் பாதிக்கப்பட்ட பன்றி அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பெய்ஜிங் மருத்துவமனையிலிருந்து ரோபோ மூலம் பாதிக்கப்பட்ட ஈரல் பகுதியை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.