'விஜய், சூர்யா நடிக்கத் தயார்' - போலியோ முகாம் வழக்கில் நடிகர் சங்கம் பதில் மனு | Actors ready to act in polio awareness short films

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (21/03/2019)

கடைசி தொடர்பு:19:05 (21/03/2019)

'விஜய், சூர்யா நடிக்கத் தயார்' - போலியோ முகாம் வழக்கில் நடிகர் சங்கம் பதில் மனு

போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வுக் குறும்படங்களில் நடிக்க, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் தயாராக இருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

போலியோ

ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்படும். இரண்டு தவணைகளாக நடத்தப்பட்டுவந்த இந்த முகாம், இந்த ஆண்டில் ஒரே தவணையாக நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்து, கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. பின்னர், நிர்வாகக் காரணங்களால் முகாம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே தவணையில் முகாம் நடத்தப்படுவதற்கும், தள்ளிவைக்கப்படுவதற்கும்  கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.  

அப்போது, நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த 7- ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர் ஆனந்தமுருகன் ஆஜராகி, ''போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்படுவது இல்லை'' என்று வாதாடினார்.

குழந்தை

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 'மக்களிடம் ஏற்கெனவே நன்கு அறிமுகமாகியுள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால், மக்களை எளிதாகச் சென்றடையும்'' என கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

சூர்யா - விஜய் - அஜித்

இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'போலியோ சொட்டுமருந்து தொடர்பான விழிப்புணர்வுப் படங்களில் நடிக்க, நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள். விருப்பமுள்ள நடிகர்களின் பட்டியலை அடுத்த விசாரணையின்போது அளிக்கிறோம்' எனவும் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் அதே கருத்தைத் தெரிவித்தனர். 

இந்த வழக்கின் விசாரணையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க