`மருத்துவரின் ஆலோசனையோடுதான் பிரசவம் பார்க்கப்பட்டதா’ - கூவத்தூர் விவகாரத்தில் நடந்தது என்ன? | This article narrates koovathur delivery issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (22/03/2019)

கடைசி தொடர்பு:12:55 (22/03/2019)

`மருத்துவரின் ஆலோசனையோடுதான் பிரசவம் பார்க்கப்பட்டதா’ - கூவத்தூர் விவகாரத்தில் நடந்தது என்ன?

`மருத்துவரின் ஆலோசனையோடுதான் பிரசவம் பார்க்கப்பட்டதா’ - கூவத்தூர் விவகாரத்தில் நடந்தது என்ன?

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலைமட்டும் தனியே வந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் - கூவத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகே கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி. இவருக்கும் தியாகராஜன் என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பொம்மிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் தாய் வீட்டில் வளைகாப்பு கோலாகலமாக நடத்தப்பட்டது. தாய் வீட்டில் இருந்தபோது புதன்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து காலை 6 மணி அளவில் அவரின் உறவினர்கள் அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர்கள் பொம்மிக்குப் பிரசவம் பார்த்துள்ளனர். தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வரும்போது சிக்கல் ஏற்பட்டதால், போதிய பயிற்சி இல்லாத அந்தச் செவிலியர்கள் இடுக்கியை வைத்து குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். அப்போது இடுக்கியில் அதிக அழுத்தம் கொடுத்து தலையை வெளியே எடுக்க முயன்றதால், குழந்தையின் தலை மட்டும் தனியாக வெளியே வந்தது. இதனால் செய்வதறியாத திகைத்த செவிலியர்கள் உண்மையை மறைத்து 108 ஆம்புலன்ஸில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொம்மியை அனுப்பி வைத்தனர்.

அருண் பாண்டியன்செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. ஆனாலும், பொம்மி ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார். விஷயமறிந்து பொம்மியின் உறவினர்கள் கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள்  திரண்டதால் அந்தப் பகுதியிலும் சில மணிநேரம் பரபரப்பு நீடித்தது.

செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்த பொம்மியின் தம்பி அருண்பாண்டியன், “தலைப்பிரசவம் என்பதால் அக்கா கடலூர் கிராமத்துக்கு வந்திருந்தாங்க. பெரிய ஹாஸ்பிட்டல்ல பிரசவம் பார்க்குற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. அதனால அரசு ஆரம்ப சுகாதார மையத்துல சேர்த்தோம். நாங்க அக்காவ கூட்டிட்டுப் போகும்போது அங்கே டாக்டர் இல்லை. அங்கிருந்த நர்ஸ் ஒருவர், `நாங்களே பிரசவம் பார்க்கிறோம்'னு சொல்லி காலையில 6 மணிக்கு அக்காவை உள்ளே கூட்டிட்டுப் போனாங்க. ரொம்ப நேரமாகியும் எதுவும் சொல்லல. 

பிரசவ வலியால துடிச்சிக்கிட்டிருந்த அக்காவை `வாயை மூடு’ன்னு சொல்லி அடிச்சிருக்காங்க. பிரசவத்தின்போது தலை வெளியே தெரிஞ்சதும் அழுத்தி  இழுத்திருக்காங்க. அப்ப தலை மட்டும் தனியா வெளியே வந்திருச்சு. இதைப் பார்த்ததும் பிரசவம் பார்த்த ஒரு நர்ஸ் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிட்டாங்க. இன்னொரு நர்ஸ் மட்டும் உள்ள இருந்திருக்காங்க. வெளியே இருந்தவங்க என்ன ஆச்சுன்னு கேட்டதுக்க, `ஒண்ணுமில்லை’ன்னு சொல்லி 108 ஆம்புலன்ஸ்ல ஏற்றி அனுப்பிட்டாங்க. செங்கல்பட்டு மருத்துவமனையில குழந்தையோட உடலை மட்டும்தான் வெளியே எடுத்தாங்க. 

இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடியே வயித்திலேயே குழந்தை இறந்ததாகப் பிரசவம் பார்த்த செவிலியர்கள் சொல்றாங்க. குழந்தை வயிற்றிலேயே இறந்திட்டதா சொல்றவங்க ஒரு மணிநேரமா எதுக்கு பிரசவம் பார்த்தாங்க. அப்பவே செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே. வயிற்றிலேயே இறந்திருந்தா எப்படி பிரசவமாகும்?” என்றார் ஆதங்கமாக.

வளர்மதிபொம்மியின் அண்ணி வளர்மதி, “அதிகாலையில பொம்மிக்கு பிரசவ வலி எடுத்ததால ஷேர் ஆட்டோவுல அவசர அவசரமா கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைச்சிட்டுப் போனோம். அங்க இருந்த நர்ஸ் செக் பண்ணிப்பார்த்துட்டு, குழந்தை நார்மலா இருக்கு. நார்மல் டெலிவரிதான் ஆகும். ஆனாலும் செங்கல்பட்டு ஹாஸ்பிட்டலுக்குத்தான் கொண்டு போகணும். அதனால கையெழுத்துப் போடுங்கன்னு சொன்னாங்க.

ஒரு மணி நேரமா வெளியே இருந்தோம். தலை வெளியே வந்திருச்சுன்னு சொன்னாங்க. உங்களால முடிஞ்சா பிரசவம் பாருங்க. இல்லைன்னா செங்கல்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிடுங்கன்னு சொன்னோம். அதுக்கு  `இல்லை... நாங்களே பார்க்குறோம்’னு சொன்னாங்க. அப்புறம் என்னை உதவிக்கு கூப்பிட்டாங்க. நானும் பிரசவ அறையில இருந்தேன். ரெண்டு நர்ஸ், எங்க சின்ன மாமியார் எல்லோரும் உள்ளேதான் இருந்தோம். நான் பொம்மியோட தலைப்பக்கம் இருந்தேன். அவங்க பிரசவம் பார்க்கும்போது தலை மட்டும் தனியா துண்டாகி வெளியே வந்துவிட்டது.

உடனே அங்க இருந்த நர்ஸ் விட்டுட்டு ஓடிட்டாங்க. எங்க சின்ன மாமியார் `பெரிய உசுரயாவது காப்பாத்துங்க’ன்னு வெளியவந்து  தரையில புரண்டு அழுதாங்க. துண்டான குழந்தையோட தலையை அங்கேயே மறைச்சு வெச்சுட்டு செங்கல்பட்டுக்கு ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பிட்டாங்க” எனத்  தேம்பி அழுதார்.

குமுதா, இணை இயக்குநர்இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்ட இணை இயக்குநர் டாக்டர் குமுதாவிடம் கேட்டபோது, “பொம்மிக்கு ஏற்கெனவே ஒருமுறை அபார்ஷன் ஆகியிருக்கு. இது இரண்டாவது குழந்தை. அபார்ஷன் ஆன 3 மாதத்திலேயே அடுத்த குழந்தை வயிற்றில் தங்கிவிட்டது. சென்னை அயப்பாக்கம்  மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்திருக்கிறார்கள். பொம்மியின் எடையும் ரத்த அழுத்தமும் வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. 

36 வாரத்தில் பிறக்க வேண்டிய குழந்தை 2.6 கிலோ இருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழந்தைக்கு கர்ப்பத்திலேயே போதுமான வளர்ச்சி இல்லை. கூவத்தூர்  மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது இதயத்துடிப்பும் இல்லை. இதைத் தாயால் உணர முடியவில்லை. செவ்வாய்க்கிழமை இரவே பொம்மிக்கு  பனிக்குடம் உடைந்துவிட்டது.

ஆனால், புதன்கிழமை காலையில்தான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். குழந்தை உள்ளுக்குள்ளேயே இறந்துவிட்டால் லட்சத்தில் மாவட்ட இணை இயக்குநர் பழனி, சுகாதாரத்துறைஒருவருக்கு இதுபோல பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யாமலே குழந்தையின் உடலை வெளியே எடுத்துவிட்டோம். இப்போது தாய்க்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்த கர்ப்பத்தை உடனே தங்கவிடாமல் சில மாதங்கள் தள்ளிப்போட வேண்டும்’’ என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி கூறும்போது, “கூவத்தூர் மருத்துவமனையில் காலை 9 மணியிலிருந்து 5 மணிவரைதான் மருத்துவர்கள் இருப்பார்கள். இவர்கள் பிரசவத்துக்கு வந்தபோது அங்கிருந்த செவிலியர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையால் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடனே அனுப்பி இருக்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

தமிழக சுகாதாரத்துறையில் தொடரும் இந்த மருத்துவ அலட்சியங்கள் ஒவ்வொன்றும் விளிம்புநிலை மக்களிடம் ஆறாத வடுவாக மாறிவருகிறது என்பதற்கு கூவத்தூர் சம்பவம்  ஓர் உதாரணம்!


டிரெண்டிங் @ விகடன்