உலகில் 210 கோடி பேர் குடிநீரின்றி தவிப்பு! - அதிரவைக்கும் உலக சுகாதார நிறுவன ரிப்போர்ட் | Water scarcity in world

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:45 (22/03/2019)

உலகில் 210 கோடி பேர் குடிநீரின்றி தவிப்பு! - அதிரவைக்கும் உலக சுகாதார நிறுவன ரிப்போர்ட்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22-ம் தேதி, 'உலக தண்ணீர் தினம்' (world water day) அனுசரிக்கப்படுகிறது.

ன்று, உலக தண்ணீர் தினம். ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி, 'உலக தண்ணீர் தினம்' (World Water Day) அனுசரிக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டு  நடைபெற்ற ஐ.நா சபையின் 47-வது கூட்டத்தொடரில்தான் இதுபற்றிய அறிவிப்பு வெளியானது. நீர்வளத்தை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. 

water

உலக அளவில் 70 சதவிகிதம் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீராக இருக்கிறது. அதேநேரத்தில், உலகம் முழுதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, ஆலைகள் இயங்குவதற்குப் பெருமளவு நீர் தேவைப்படுகிறது. 

இயற்கை அழிக்கப்பட்டுவருவதே தண்ணீர் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.  மழை இல்லாத காரணத்தால், அதிக அளவில் வறட்சி காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால், கிணறுகளில் நீர் வறண்டு காணப்படுகிறது. அதேபோல கடல்நீரில் அதிகமாக கழிவுகள் சேர்வதால் மாசுபட்டுவருகிறது.

water

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ''உலக அளவில் 210 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றித் தவிக்கின்றனர். நான்கில் ஒரு ஆரம்பப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள சுமார் 700 குழந்தைகள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் 'டயரியா'வால் (Diarrhoea) உயிரிழக்கின்றனர். வரும் 2030-ம் ஆண்டு, உலகம் முழுவதும் 70 கோடி பேர் தண்ணீர் கிடைக்காமல் வேறு பகுதிகளுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படும். 19.5 கோடி பேர் குளம், நீர்நிலைகள், கிணறு மற்றும் மழை நீரைக் குடிநீருக்காகப் பயன்படுத்திவருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

மாறிவரும் பருவநிலையால் உலகம் முழுவதும் வெப்பமயமாகிவருகிறது. இதேநிலை நீடித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துவருகின்றனர். தற்போது, நமக்குக் கிடைக்கும்  நிலத்தடி நீரின் அளவு 2.5 சதவிகிதம் மட்டுமே. இதில், பனிப்பாறைகள் போக நமக்கு கிடைக்கும் நல்ல நீர் 0.26 சதவிகிதமே.  இந்த நீரை மட்டுமே நமது  தேவைகளுக்குப்  பயன்படுத்திவருகிறோம். இந்நிலையில், இந்தியாவில் கிராமங்களில் வசிப்போருக்கு  சுத்தமான நீர் கிடைப்பதில்லை. மழை பெய்யும் நேரங்களில், அந்த நீரைச் சேமித்துவைக்க போதிய வசதிகள் செய்யப்படாதது தண்ணீர் பஞ்சம் அதிகரிக்க முக்கியக்  காரணமாக அமைகிறது. எனவே, தண்ணீர் தினம் என்பதை வெறும் சடங்காக மட்டும் அனுசரிக்காமல்,  தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டியது நமது கடமை.