சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருந்தால் அதிக கவனம்! #WorldTBDay | Tuberculosis and diabetes are interlinked

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (24/03/2019)

கடைசி தொடர்பு:13:05 (24/03/2019)

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருந்தால் அதிக கவனம்! #WorldTBDay

காசநோய் அல்லது சர்க்கரைநோய், இதில் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மற்ற பாதிப்பு ஏற்பட 15 முதல் 20 சதவிகிதம் வாய்ப்புகள் அதிகம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருந்தால் அதிக கவனம்!  #WorldTBDay

லக அளவில் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் காரணங்களில் காசநோய்க்கு பத்தாவது இடம். காசநோய்க்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் மூன்றில் இரண்டுபேர் உயிரிழக்க நேரிடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 2017-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு காசநோய் பாதித்துள்ளது.  அவர்களில் 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2018-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 1,04,123 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

காசநோய்

காசநோய்  என்பது பாக்டீரியாவால் காற்றில் பரவும் ஒரு தொற்றுநோய். இருமல், தும்மல், எச்சில் ஆகியவற்றின் மூலம் காசநோயைப் பரப்பும் பாக்டீரியா பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்தக் கிருமி எளிதாகக் தாக்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்படும் காசநோயாளிகளுக்கு  ஏற்படும் பொதுவான நோய்த்தொற்று ஹெச்.ஐ.வி. அதற்கு அடுத்தபடியாக சர்க்கரைநோயே காசநோயாளிகளை அதிக அளவில் பாதிக்கிறது. 

காசநோயும் சர்க்கரை நோயும் எந்த வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று நுரையீரல் நிபுணர் பிரசன்னகுமார் தாமஸிடம் கேட்டோம்,விரிவாகப் பேசினார்.

"காசநோயாளிகளை சர்க்கரைநோய் பாதிப்பதும், சர்க்கரைநோயாளிகளை காசநோய் பாதிப்பதும் மிக மிகப் பொதுவானது. ரத்தத்தில் டாக்டர் பிரசன்னகுமார் தாமஸ்சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படுவது இதற்கு முக்கியக் காரணமாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் உடலில் எந்தக் கிருமியும் வேகமாக வளரும்; அதுதான் காசநோயிலும் நடக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது இயல்பு. மேலும், இந்தியாவில் காசநோய் என்பது பொதுவான ஒரு நோய்த்தொற்று என்பதால் அது ஏற்படுகிறது.

காசநோய் அல்லது சர்க்கரைநோய், இதில் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மற்ற பாதிப்பு ஏற்பட 15 முதல் 20 சதவிகிதம் வாய்ப்புகள் அதிகம். இதனால் இரண்டில் ஏதாவது ஒரு நோய் இருந்தால் மற்றொன்றுக்கான பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். இருமல், காய்ச்சல், சோர்வு, எடை  குறைதல், பலவீனமாக உணர்தல் போன்றவை காசநோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால்  உடனடியாக எக்ஸ்ரே மூலம் காசநோய்ப் பரிசோதனை செய்யவேண்டும்.

புகைப்பழக்கம், போதைப்பொருள்களின் பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவை காசநோய் மாத்திரைகள் உடலில் செயலாற்றுவதைத் தடுக்கக்கூடியவை. எனவே, இத்தகைய பழக்கங்களைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைக்கும். காசநோய் மற்றும் சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவு ரத்தத்தில் சர்க்கரை இருந்தால், அது காசநோயைத் தீவிரப்படுத்தும்.

காசநோய்

காசநோய்  மாத்திரையை பாதியிலேயே நிறுத்தினால் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒருமுறை காசநோய் பாதித்து முழுமையாக குணமானாலும், மீண்டும் காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை அளவை சரியாக நிர்வகித்தால் காசநோயிலிருந்து காப்பாற்றலாம். இரண்டு நோய்களும் ரயில் தண்டவாளங்கள்போன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் இரண்டையும் சரியாக நிர்வகிக்கவேண்டும். 

காசநோய், சர்க்கரைநோய் என இரண்டையும் சரியாக நிர்வகிப்பது குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராஜ்மாதங்கி விக்ரமிடம் கேட்டோம். 

"இந்தியாவைப் பொறுத்தவரை காசநோய்க் கிருமிகள் இல்லாத இடமே கிடையாது என்ற அளவில் இருக்கிறது. சுகாதாரமற்ற சூழலில்தான் டாக்டர் ராஜ்மாதங்கி விக்ரம்காசநோயைப் பரப்பும் பாக்டீரியாக்கள் அதிகமாகக் காணப்படும். இதனால் ஒரு நபரின் சுவாசத்துக்குள் தினமும் ஒரு காசநோய்க் கிருமியாவது சென்றுவிடும் நிலை காணப்படுகிறது. நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோய்களை எதிர்த்துப் போராடும்வரை காசநோய் நம்மைப் பாதிக்காது. சுவாசத்தின் வழியாக காசநோய்க் கிருமி உடலுக்குள் சென்றாலும் அதனால் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் காசநோய் பாதிப்பு ஏற்படும்.

பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி, இரண்டு ஆண்டுகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். அதன்பிறகு குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும். `டைப் 1' சர்க்கரை நோயுடன் பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு நோய் இருப்பது கண்டறியப்படாமல் இருக்கும். சர்க்கரைநோய் கண்டறியப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதுபோன்ற குழந்தைகளுக்கு காசநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. காசநோய் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளில் சிலருக்கு அதற்கான காரணத்தைக் கண்டறியும்போது சர்க்கரைநோய் இருப்பது தெரியவரும்.

ஒருவருக்கு சர்க்கரைநோய் பாதித்திருக்கிறது என்பதைக் கண்டறியாமல், காசநோய்க்கு மட்டும் சிகிச்சை அளித்தால் மீண்டும் காசநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கு  இடைப்பட்ட காலத்தில்தான் சர்க்கரைநோய் ஏற்பட்டிருக்கிறது என்றால் உடனடியாக காசநோய் தாக்காது. ஆனால் கட்டுப்பாடு இல்லாத அளவு சர்க்கரைநோய்  இருந்தால் காசநோய் எளிதாகப் பாதித்துவிடும். நீண்ட நாள்கள் சர்க்கரைநோய் இருந்தும், அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் காசநோய் ஏற்படாது.  கட்டுப்பாடில்லாத சர்க்கரைநோய்தான் காசநோய்க்கான வழியை ஏற்படுத்தும்.

காசநோய் - சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் வந்தால், மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசியைப் பரிந்துரைப்போம். காரணம், காசநோய் மாத்திரை உடலில் செயலாற்றுவதை சர்க்கரைநோய் மாத்திரைகள் தடுக்கும். சில நேரங்களில்  காசநோய் மாத்திரைகளும் சர்க்கரைநோய் மாத்திரைகளும் சேர்ந்து கூடுதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். காசநோய் மாத்திரைகளைச் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளைப் பரிந்துரைப்போம்.

காசநோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொண்டு புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒருநாளைக்கு  இரண்டு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு கப் கொண்டைக் கடலை, பட்டாணி போன்றவற்றை வேகவைத்துச் சாப்பிடவேண்டும். புரத உணவுகள் சர்க்கரை நோய்க்கு உகந்தது. இரண்டு நோய்களுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டு சரியான அளவில் நிர்வகித்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சரியாக சிகிச்சை  எடுக்காவிட்டால் நோய் முற்றி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்கிறார் ராஜ்மாதங்கி விக்ரம்.

காசநோய், சர்க்கரைநோயை நிர்வகிக்க மருந்துகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை எனப் பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை சரியாகப்  பின்பற்றி நடப்பது நமது கைகளில்தான் உள்ளது.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்