தொடர்ந்து சூடாகக் காபி, டீ அருந்துபவரா நீங்கள்... புற்றுநோய் அலர்ட்! | Drinking hot beverages may lead to esophageal cancer!

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (25/03/2019)

கடைசி தொடர்பு:19:18 (25/03/2019)

தொடர்ந்து சூடாகக் காபி, டீ அருந்துபவரா நீங்கள்... புற்றுநோய் அலர்ட்!

65 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்குக் கூடுதலாகச் சூடான பானங்களைப் பருகுவோருக்கு புற்றுநோய் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் 2016-ம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆய்வு முடிவு வெளிந்துள்ளது.

தொடர்ந்து சூடாகக் காபி, டீ அருந்துபவரா நீங்கள்... புற்றுநோய் அலர்ட்!

பெரும்பாலானோருக்குக் காலையில் எழுந்ததும் சுடச்சுட காபி அல்லது டீ குடித்தால்தான் அன்றைய தினம் சுறுசுறுப்பாக இருக்கும்.  அலுவலகத்தில் வேலை செய்யும்போது அரைமணி நேர இடைவெளியில் சிலருக்கு சூடாக டீயோ காபியோ அருந்த வேண்டும். இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும். சிலருக்கு ஸ்ட்ராங்க், சிலருக்கு மீடியம்... இன்னும் சிலருக்கு சர்க்கரைத் தூக்கலாக, இன்னும் சிலருக்கு சர்க்கரை இல்லாமல். 

சூடான டீ, காபி அருந்தினால் புற்றுநோய் வரவாய்ப்பு

இன்னொரு வகையினர் உண்டு. டீயோ, காபியோ கொதிக்கக் கொதிக்க இருக்க வேண்டும்; சூடு பறக்க வேண்டும். சற்று சூடு குறைந்தாலும் சண்டைக்குப் போய்விடுவார்கள். `கொதிக்கக் கொதிக்க குடிச்சாத்தான் குடிச்ச மாதிரி இருக்கும்’ என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுப்பார்கள். இதுபோன்றவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு  ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது.

அதிக சூடான டீ, காபி போன்ற பானங்களைத் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சூடான பானங்கள்

உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், நெஞ்செரிச்சல் காரணமாக உணவுக்குழாயில் அமிலம் சுரப்பு உள்ளவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் எடுத்துக்கொண்டு, காய்கறி, பழங்களைக் குறைவாகச் சாப்பிடுபவர்கள், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான  வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது தொடர்ந்து அதிக சூடான பானங்களைப் பருகுவோருக்கும் உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் உணவுக்குழாய் புற்றுநோய் 6 வது இடத்தில் உள்ளது. பெண்களைக் காட்டிலும் ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்குக் கூடுதலாகச் சூடான பானங்களைப் பருகுவோருக்கு புற்றுநோய் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் 2016-ம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆய்வு முடிவு வெளி வந்துள்ளது. 

உணவுக்குழாய் புற்றுநோய்

இந்த ஆய்வில் 40-லிருந்து 75 வயதுக்குட்பட்ட 50,000 பேர் பங்கேற்றனர். அதில் 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிக சூடான பானங்கள் அருந்துவோர், 60 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் குறைந்த சூட்டில் பானங்கள் அருந்துவோர் என இரண்டாகப் பிரித்தனர். மேலும், அவர்கள் அந்தப் பானங்களைப் பருக எடுத்துக்கொள்ளும் நேரமும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, அதில் 317 பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

அதனடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள முடிவில், `குறைந்த சூட்டில் அல்லது வெதுவெதுப்பான சூட்டில் பருகுவோரைக் காட்டிலும், 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கும் அதிகமாக நாள்தோறும் 700 மில்லி அளவு டீ, காபி போன்ற பானங்களைப் பருகுவோருக்கு  உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்

இந்த ஆய்வு முடிவுகள்  இந்தியா போன்ற வெப்பமண்டல நாடான நமக்குப் பொருந்துமா என்று இரைப்பைக் குடல் சிகிச்சை நிபுணர் மகாதேவனிடம்  கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``சூடான பானங்களைக் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படுமா என்பது தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. டாக்டர் மகாதேவன்தற்போதுதான் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அதிக சூடாக டீ, காபி போன்ற பானங்களைத் தொடர்ந்து பருகுவதால் மட்டுமே உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவுதான். டீ, காபி போன்ற பானங்கள் மட்டுமல்லாமல், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் புற்றுநோய்க்குக் காரணமாக அமையலாம். அதிக சூடான பானங்களைப் பருகுபவர்கள், அதனுடன் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை இருந்தால் உணவுக்குழாயில் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. 65 டிகிரி செல்சியஸ் சூட்டில், வெறும் 3 நிமிடத்தில் டீயைப் பருகும் பழக்கம் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் வரும் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 

உடலின் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள செல்கள் சேதமடையும்போது அதை உடல் தானாகவே சரிசெய்துகொள்ளும். மீண்டும் சேதமடையும்போது மீண்டும் சரிசெய்யும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும்போது, ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் அசாதாரணமான அளவு செல்கள் உற்பத்தியாகி புற்றுநோயாக மாறும். அதிக சூடாகப் பானங்களைப் பருகும் விஷயத்திலும் இதுதான் நடக்கும். அதிக வெப்பத்தில் நீண்ட நாள்களாக பானங்களைப் பருகும் பழக்கமுள்ளவர்களுக்குத்தான் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்குமே தவிர, என்றைக்காவது ஒருநாள் அதிக சூட்டில் டீயைப் பருகினால், உடனே புற்றுநோய் வந்துவிடும் என்பது இல்லை.

பொதுவாகவே, அதிக சூடான பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரையும்கூட அதிக சூட்டில் குடிக்கக் கூடாது. நமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ற வெப்பத்தில்தான் பானங்களைக் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆகியவை எந்தப் புற்றுநோயையும் தடுக்கும்’’ என்றார் அவர்.

என்றோ ஒருநாள் அவசரத்தில் டீயை அதிக சூட்டில் குடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அதையே பழக்கமாக்கிவிட்டால், எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் என்பதைத்தான் இந்த ஆய்வு முடிவு விளக்குகிறது.


டிரெண்டிங் @ விகடன்