`பிரசாரத்தில் அந்த மூன்று வார்த்தைகளைப் பேச தடை விதியுங்கள்!'- தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற கடிதம் | Politicians should not use the terms mental, mad

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:45 (26/03/2019)

`பிரசாரத்தில் அந்த மூன்று வார்த்தைகளைப் பேச தடை விதியுங்கள்!'- தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற கடிதம்

2019 நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் அரசியல் தலைவர்களின்  பிரசாரங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. பிரசாரங்களில் தங்கள் கட்சியின் சிறப்பம்சங்களைப் பேசுவதைவிட, எதிர்க்கட்சியினர் மீது விமர்சனங்களை வாரி  வீசுவதுதான் பிரசாரம் என்ற கருத்தாக்கம் உருவெடுத்துள்ளது. இதனால் பிரசாரத்தின்போது ஒருவருக்கொருவர் மாறி மாறி வசைபாடுவதைத்தான்  கேட்கமுடிகிறது. சிலர் கொஞ்சம் கூடுதலாகப் போய் எதிர்க்கட்சியில் இருக்கும் நபரை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதையும் கேட்டிருப்போம். 

பிரசாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற வார்த்தையப் பயன்படுத்தக்கூடாது

பிரசாரத்தின்போது அரசியல்வாதிகள் இதுபோன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகள் பேசுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு இந்திய மனநல மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மனநலம்

அந்தக் கடிதத்தில், `சில அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியில் இருக்கும் நபர்களை `மனநலம் பாதிக்கப்பட்டவர்', `பைத்தியம்', `அவரை  மனநல மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும்' என்றெல்லாம் மானாவாரியாகப் பேசி வருகின்றனர். அவர்கள் பேசுவது நாளிதழ்கள், தொலைக்காட்சி,  சமூக வலைதளங்கள் என அனைத்திலும் வெளிவருகின்றன. 

மருத்துவர்கள் கடிதம்

இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பதால் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் புண்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் கருத்தில்கொண்டு மனிதத்தன்மையற்ற இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பைத்தியம் என்ற வார்த்தைகளை உபயோகிப்பதற்குத் தடை விதித்து, அதை தேர்தல் நடத்தை விதிமுறைகளாக  அமல்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளும் சமூக பொறுப்புணர்வு உடையவர்களாக நடந்துகொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.