டி.வி. பார்த்துக்கொண்டே `ஸ்நாக்ஸ்' சாப்பிடும் குழந்தைகளுக்கு இதயப்பிரச்னை - எச்சரிக்கும் ஆய்வு! | Warning for teenagers, Sitting for hours watching TV while snacking ups heart disease, diabetes

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (26/03/2019)

கடைசி தொடர்பு:19:32 (26/03/2019)

டி.வி. பார்த்துக்கொண்டே `ஸ்நாக்ஸ்' சாப்பிடும் குழந்தைகளுக்கு இதயப்பிரச்னை - எச்சரிக்கும் ஆய்வு!

வேறொரு விஷயத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் டி.வி.பார்ப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து கணினி உபயோகித்துக்கொண்டே இருப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற பழக்கம் இருக்கும் டீனேஜ் பருவத்தினர் அனைவருக்கும், அந்தச் சமயத்தில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் பழக்கமும் கட்டாயம் இருக்கும். இப்படி வேறொரு விஷயத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

டீன் ஏஜ் இதயப் பாதிப்புகள்

பிரேசிலில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் இதயப் பிரச்னைகளை (ERICA) கண்டறிய செய்யப்பட்ட இந்த ஆய்வில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 33,900 டீனேஜ் மாணவர்கள் பங்குபெற்றுள்ளனர். அவர்களின் அன்றாட செயல்கள், டிஜிட்டல் திரை பார்க்கும் சமயம், ரத்த அழுத்த அளவு, இடுப்புச் சதையின் அளவு, ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு போன்றவை தொடர்ச்சியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வில் பங்குபெற்றவர்களில் 85 சதவிகிதம் பேர் டி.வி. பார்க்கும்போது நொறுக்குத்தீனிகள் சாப்பிடுபவர்களாகவும், 64 சதவிகிதம் பேர் வீடியோ கேம்ஸ் அல்லது கணினி உபயோகத்தின்போது நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்களாகவும் இருந்துள்ளனர். 

நொறுக்குத்தீனிகள் - ஸ்நாக்ஸ்

ஆய்வு முடிவில், ஒரு நாளில் ஆறு மணி நேரத்துக்கு மேல் டி.வி., கணினி பார்ப்பவர்களில் 71 சதவிகிதம் பேருக்கு வளர்சிதை தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் முன் அமர்ந்திருக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னையின் தீவிரத்தன்மை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது. இளம்வயதிலேயே இதயப் பிரச்னை, மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வளர்சிதை மாற்றங்கள் காரணமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களில் ஒருவரான பீட்ரிச், ``நொறுக்குத் தீனியின் அளவைக் குறைப்பதற்கான சிறந்த வழி, கணினி, டிவி, வீடியோ கேம்ஸ் போன்ற டிஜிட்டல் திரைகளோடு செலவிடும் நேரத்தை, டைமிங்கை குறைத்துக்கொள்வதுதான். டீனேஜ் குழந்தைகள் விஷயத்தில், பெற்றோர்தான் கூடுதல் கவனத்தோடும் கண்காணிப்போடும் செயல்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க