கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 பெண்கள் இறந்தார்களா? நடந்தது என்ன? | What is the reason behind the death of 15 pregnant women?

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (27/03/2019)

கடைசி தொடர்பு:18:45 (27/03/2019)

கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 பெண்கள் இறந்தார்களா? நடந்தது என்ன?

``நோயாளியின் ரத்தவகையைச் சேர்ந்த ரத்தம்தானா என்பதும், ரத்தம் காலாவதி அடையாமல் இருக்கிறதா என்பதும் பரிசோதிக்கப்படும். அந்தச் சோதனையைக் கடந்து கர்ப்பிணிகள் ரத்தம் ஏற்றப்பட்டது எப்படி என்பதுதான் கேள்வியாக இருக்கிறது."

கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 பெண்கள் இறந்தார்களா? நடந்தது என்ன?

ர்ப்ப காலத்தில் பெண்களைப் பாதிக்கும் பிரச்னை, ரத்தசோகை. ரத்தசோகையைக் குணப்படுத்த மாத்திரைகள் தரப்படும். ஊசியும் இருக்கிறது. ஆனால், ஊசி, மருந்துக்கு ரத்தசோகை குணமாகவில்லை என்றால், ரத்தம் ஏற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். சில மாதங்களாகக் கர்ப்பிணிகளுக்கு ஏற்றப்படும் ரத்தம், அவர்களது உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு விபரீதமாகி வருகிறது. கடந்த மாதம், சாத்தூர் மற்றும் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, ஹெச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கின. இந்த நிலையில் தற்போது, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் பகுதிகளைச் சேர்ந்த 15 கர்ப்பிணிகள் கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டதால் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

கர்ப்பிணி பெண்கள் - ரத்தசோகை

கர்ப்பிணிகளுக்கு ஏன் ரத்தம் ஏற்ற நேர்கிறது? கிருமித் தொற்றுள்ள, கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றும் நிலை ஏன் ஏற்படுகிறது?  

``கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றும் சிகிச்சை இரண்டு சூழல்களில் பரிந்துரைக்கப்படும். பிரசவம் நெருங்கும் நேரத்தில் உடனடியாக ஹீமோகுளோபினை அதிகரிக்க புது ரத்தம் ஏற்றப்படும். கர்ப்பமான முதல் ஆறு மாதங்களுக்குள் ரத்தசோகை உறுதிசெய்யப்பட்டால் ஊசி, மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அவற்றை முறையாகப் பின்பற்றினாலே ரத்தம் ஏற்றும் சூழலைத் தவிர்க்கலாம்..." என்கிறார் மகப்பேறு மருத்துவர் சுபஶ்ரீ. 

``பிரசவத்துக்குப் பிறகு சிலருக்கு அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு (Post Partom Hemmorage) ஏற்படக்கூடும். அப்போது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ரத்தம் ஏற்றப்படும். இந்த ரத்தப்போக்குப் பிரச்னையை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் மருத்துவர்கள் எல்லா பிரசவ நேரங்களிலும் ரத்த ஏற்ற சிகிச்சைக்குத் தயார் நிலையிலேயே இருப்பார்கள்.  

ரத்தம் - பெண்கள்

கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது ஹீமோகுளோபின் அளவு 10 கிராமாவது இருக்கவேண்டும். கர்ப்ப காலத்தின் முதல் நிலையிலேயே ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். சிலருக்குக் குழந்தை பிறந்த பிறகு திடீரென ரத்தப்போக்கு ஏற்படும். அந்தச் சூழலில், ரத்தம் ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.மகப்பேறு மருத்துவர் சுபஶ்ரீ

ரத்தசோகை உள்ள கர்ப்பிணிகள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் உடலில் ரத்தம் உற்பத்தியாக இரண்டு முதல் மூன்று வாரங்களாவது ஆகும். எனவே பிரசவத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, ஹீமோகுளோபின் அளவைச் சரிசெய்து சீராக வைத்துக்கொள்ளவேண்டும். 

ரத்தம் ஏற்றுவதில் மருத்துவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற சம்பவங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அலட்சியமே காரணமாக இருக்கிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், ரத்தம் ஏற்றும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து நிறைய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதில், ரத்த வங்கியில் என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும், அலுவலர்களுக்கான தகுதிகள் என்னென்ன, ரத்த தானம் அளிப்பவரிடம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன, ரத்தத்தில் என்னென்ன பரிசோதனைகளைச் செய்ய வேண்டும், ரத்தத்தை எப்படியான வெப்பநிலையில் வைக்கவேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதை மருத்துவர்கள் உறுதி செய்யவேண்டும்.   பிரசவம் செய்யப்படும் இடம் சுகாதாரமாக இருக்கிறதா, போதிய வசதிகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பிரசவத்துக்கு முன்னரே மருத்துவர்கள் பார்த்து, அப்படி இல்லாதபட்சத்தில் சரி செய்ய வேண்டும். 15 கர்ப்பிணிகள் மரணமடைந்திருப்பதாக வரும் செய்திகள் உண்மையில் அதிர்ச்சியடைய வைக்கின்றன. மரணத்துக்கான காரணம், விரிவாக ஆராயப்பட வேண்டும்" என்கிறார் அவர். 

ரத்த தானம்

ரத்தங்களைச் சேகரிப்பதில் ஏராளமான அலட்சியம் நிலவுகிறது. தனியார் நிறுவனங்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ரத்ததான முகாம் நடத்துகிறார்கள். அங்கே சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் எல்லாம் சரியாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதற்கு முறையான தகவல்கள் எதுவும் இல்லை. பல இடங்களில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள், தூக்கி எறியப்படும் அவலமும் நடந்துகொண்டிருக்கிறது. 

ரத்த வங்கியில் ரத்தத்தைப் பாதுகாக்க என்னென்ன ஏற்பாடுகள் இருக்க வேண்டும்? கெட்டுப்போன ரத்தம் எப்படிக் கையாளப்படுகிறது? மூத்த ரத்தவியல் நிபுணர் இளஞ்சேரலிடம் கேட்டோம்.

``நோயாளிக்கும் தானமளிப்பவருக்கும் ரத்தவகை பொருந்திப்போகிறதா என்ற சோதனையை தகுதிவாய்ந்த செவிலியர்கள்தான் செய்யவேண்டும். அவர்கள் சோதித்துவிட்டு அதன் முடிவை மருத்துவர்களிடம் கொண்டு செல்வார்கள். பெரும்பாலும் இங்குச் சிக்கல் வருவதில்லை. ரத்தம் சேமித்து வைக்கும் இடத்தில், `கோல்ட் செயின் மெயின்டெனன்ஸ்'  (Cold chain maintenance) என்ற வெப்பநிலை அளவு பராமரிக்கப்படவேண்டும். இதில் மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ரத்தம் சேமித்து வைக்கும் அறையில் வெப்பநிலை 4 டிகிரி முதல் மைனஸ் 2 டிகிரி வரை இருக்கலாம். வெப்பநிலை மாறும்போது ரத்தத்திலுள்ள தட்டணுக்கள் மாற்றமடையத் தொடங்கும். ரத்தத்தின் தன்மை மாறும். தடுப்பூசிகள், ரத்தமாதிரிகள் என அனைத்துமே இந்த வெப்பநிலையில்தான் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு ஏற்பட்ட தவறே, பதினைந்து கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

நோயாளிக்கு ஏற்ற, ரத்த வங்கியிலிருந்து ரத்தம் அனுப்பப்படுவதற்கு முன் குறைந்தது மூன்று முதல் நான்கு இடங்களில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் அதன் தன்மையை கிராஸ் செக் செய்வார்கள். நோயாளியின் ரத்தவகையைச் சேர்ந்த ரத்தம்தானா என்பதும், ரத்தம் காலாவதி அடையாமல் இருக்கிறதா என்பதும் பரிசோதிக்கப்படும். அந்தச் சோதனையைக் கடந்து கர்ப்பிணிகள் ரத்தம் ஏற்றப்பட்டது எப்படி என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. 

ரத்தசோகை - பெண்கள்

ரத்த வங்கி குறித்து எந்த ஞானமும் இல்லாதவர்களைப் பணியமர்த்தி இருந்தால் மட்டும்தான் கெட்டுப்போன ரத்தத்தை விநியோகிக்கும் சூழல் ஏற்படும். 15 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர் என்பது மட்டும்தான் பதிவாகியுள்ளதே தவிர, அவர்கள் குறித்த விவரங்கள், `கேஸ் ஹிஸ்டரி'  எதுவும் வெளியிடப்படவில்லை. இந்திய அளவில், மற்ற மாநிலங்களைவிடவும் தமிழகத்தில் கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் இறப்பு விகிதம் குறைவு. அதற்கு முக்கியமான காரணம், இங்கு இருக்கும் மேம்பட்ட மருத்துவ வசதிகள். ஒரு பெண் கர்ப்பமாகியுள்ளார் என்பதை அறிந்த நாள் முதல், அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து அவர்மீது கவனம் கொள்ளப்படும். கர்ப்பமடைந்த பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து மருத்துவரை அணுகவில்லை என்றாலும்கூட, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை கர்ப்பிணியின் வீட்டுக்கு வந்து ஹீமோகுளோபின் அளவு என்ன, உடல்நலனில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, என்னென்ன மாற்றங்கள் தெரிகின்றன, கர்ப்பத்தால் வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா போன்ற அனைத்தையும் தொடர்ச்சியாக கண்காணித்துப் பதிவு செய்வார். 

ஒருவேளை கர்ப்பகாலத்தில் இறப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், ஆரம்ப சுகாதார அலுவலர், கிராம செவிலியர் என அனைவரும் பதில் சொல்லவேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணின் மரணத்துக்கான காரணம் என்ன, இதுநாள் வரையிலான அவரின் மருத்துவ நிலை என்ன, தடுப்பூசிகள் அவருக்குப் போடப்பட்டனவா, சத்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டனவா, உடல் உபாதைகள் கவனத்தில் கொள்ளப்பட்டனவா என்பதையெல்லாம் விளக்கி அறிக்கை அளிக்க வேண்டும். 15 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்றால் அவை நிச்சயமாக மருத்துவர்கள் கண்காணிப்புக்கு வந்திருக்கவேண்டும். அவை குறித்த உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும். நான்கு மாதங்களில் பதினைந்து இறப்பு, அதுவும் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றியே நிகழ்ந்திருக்கிறது என்றால் அப்போதே இந்தப் பிரச்னை பெரிதாகியிருக்கும். எனவே, இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்