15 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை தேவை! - செவிலியர்கள் சங்கம் | Nurses association urges proper inquiry in pregnant women issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (27/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (27/03/2019)

15 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை தேவை! - செவிலியர்கள் சங்கம்

ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் கடந்த 4 மாதங்களில் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. 

கெட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்

இந்த நிலையில், கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால்தான் கர்ப்பிணிகள் உயிரிழந்தார்களா என்று ஆராய்ந்து முழுமையயான அறிக்கையை தமிழக அரசு  வெளியிடவேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ``தமிழகத்தில் ஓராண்டில் சுமார் 8 லட்சம் யூனிட் ரத்தம் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. ரத்தம் செலுத்திய பின் சாதாரண விளைவுகள் 1 சதவிகிதம்,  தீவிர பின்விளைவுகள் 0.1 சதவிகிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உலகளவில் நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு சுமார் 1,800 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதுதவிர, சுமார் 1000 உயர் அறுவை சிகிச்சைகள், 2,000 விபத்து  சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்த சிகிச்சைகளுக்குப் பெரும்பாலும் ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம் ஏற்படும். 

கெட்ட ரத்தம் ஏற்றியதால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு

கர்ப்பிணிகள் உயிரிழப்பு நிகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அப்படி இருக்கையில் அத்தனை உயிரிழப்புகளும் ரத்தம் ஏற்றுவதால்தான் ஏற்படுகிறது  என்று கூறுவது மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் அவசர காலங்களில் நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தும்போது அதீத பயத்தையும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து, கர்ப்பிணிகள் மரணத்துக்கு ரத்தம் செலுத்தப்பட்டதுதான் காரணமா என்பதையும், இந்த மரணங்கள் தவிர்க்கக்கூடியவையா என்பதையும் ஆராய்ந்து முழுமையான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். உண்மையான  காரணங்களை அறிந்தபின் மருத்துவ அலுவலர்கள், செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க எங்கள் சங்கம் துணை நிற்கும்..." என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.செந்தில், தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வளர்மதி ஆகியோர் கூறியுள்ளார்கள்.