`முதலில் ஒரு குழந்தை... 26 நாள்கள் கழித்து இரட்டைக் குழந்தைகள்..!'- வங்கதேசப் பெண்ணுக்கு நடந்த அதிசயம் | Bangladesh woman ‘with two wombs’ gives birth to twins 26 days after her first baby

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/03/2019)

கடைசி தொடர்பு:19:32 (29/03/2019)

`முதலில் ஒரு குழந்தை... 26 நாள்கள் கழித்து இரட்டைக் குழந்தைகள்..!'- வங்கதேசப் பெண்ணுக்கு நடந்த அதிசயம்

யற்கையில் ஏதாவதொரு அதிசயம் எப்போதும், எங்கேயாவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், தாய் ஒருவருக்கு முதல் குழந்தை பிறந்து 26 நாள்கள் கழிந்த பிறகு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அதிசயம் அரங்கேறியிருக்கிறது, வங்கதேசத்தில். தற்போது மூன்று குழந்தைகளுடன் தாய் நலமுடன் இருக்கிறார். 

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் அரிஃபா சுல்தானா, இவருக்கு வயது 20. இவர் கடந்த மாதம் சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் சில தினங்களில் வீடு திரும்பினர். தனது முதல் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தபோது மீண்டும் அரிஃபா சுல்தானாவுக்கு பனிக்குடம் உடைந்தது போன்ற அறிகுறியோடு நீர் வெளியேறியது. இதையடுத்து அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுல்தானா.

குழந்தைகள்

PC : bdnews24.com

அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர் சுல்தானாவுக்கு இரண்டாவது கர்ப்பப்பை இருப்பதைக் கண்டறிந்தார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டாவது கர்ப்பப்பையில் இரட்டைக் குழந்தைகள் உருவாகியிருந்தன. அந்த இரண்டு குழந்தைகளும் சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்பட்டன. இரண்டாவது பிரசவத்தில் வெளியே எடுக்கப்பட்ட குழந்தைகளுள் ஒன்று ஆண் குழந்தை, மற்றொன்று பெண் குழந்தை. முதல் பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை மற்றும் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்த பிறகு சுல்தானா வீடு திரும்பினார்.

இந்த அதிசய பிரசவத்தை மேற்கொண்ட மருத்துவர், ``என் 30 வருட அனுபவத்தில் இந்த மாதிரியான அதிசயத்தைப் பார்த்ததில்லை” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அரிஃபா சுல்தானாவோ, ``மூன்று குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கூலித் தொழிலாளியான என் கணவரின் வருமானம் மாதத்துக்கு வெறும் 6,000 ரூபாய்தான். இந்தக் குறைந்த வருவாயைக் கொண்டு மூன்று குழந்தைகளையும் எப்படி கவனித்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க