ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம்! உலகின் முதல் நிகழ்வு | Surgeons Perform First HIV-to-HIV Kidney Transplant

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (29/03/2019)

ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம்! உலகின் முதல் நிகழ்வு

லக அளவில் ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முற்றிலும் குணப்படுத்தமுடியாத நோயாக ஹெச்.ஐ.வி இருக்கிறது. ஹெச்.ஐ.வி பாதித்தவர்களின் ரத்தம் மூலம் எளிதில் மற்றவர்களுக்கும் நோய் தொற்றும் என்பதால் அவர்களைப் புறக்கணித்து வருகிறோம். இந்த நிலையில்,உலகில் முதல்முறையாக ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளி ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் அதே நோய் பாதிப்புள்ள மற்றொருவருக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

 சிறுநீரகம்

அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள பல்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இந்தச் சாதனையை செய்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள ஒருவர் சிறுநீரகக் கோளாறு பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தநிலையில், வேறு யாரிடமிருந்தாவது தானமாகப் பெற்று அவருக்குப் பொருத்தலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். 

 சிறுநீரகம்

இதுபற்றி கேள்விப்பட்டதும் அட்லான்டாவைச் சேர்ந்த நினா மார்ட்டினெஸ் என்ற 35 வயதுப் பெண் தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, நினா மார்ட்டினெஸ்ஸின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் டாரி செஜிவ் கூறும்போது, ``உலகிலேயே முதல்முறையாக ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு நோயாளியின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு அது இன்னொருவருக்குப் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சுமார் 40,000 ஹெச்.ஐ.வி நோயாளிகளின் சிறுநீரகங்கள் நல்ல நிலையில் உள்ளன" என்றார்.

சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய நினா மார்ட்டினெஸ் கூறும்போது, ``சிறு வயதிலேயே ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டேன். நான் ஒருமுறை தொலைக்காட்சி நாடகம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவர், சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு சிறுநீரகத்தைத் தானமாக வழங்குவார். அதைப் பார்த்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன்'' என்றார். சிறுநீரகத்தை தானமாகப் பெற்றவரின் பெயரை மருத்துவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர்.