மூளைச்சாவு அடைந்த விளையாட்டு வீராங்கனைக்கு ஆண் குழந்தை!  | Brain dead Portuguese athlete had a child

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (30/03/2019)

கடைசி தொடர்பு:21:46 (30/03/2019)

மூளைச்சாவு அடைந்த விளையாட்டு வீராங்கனைக்கு ஆண் குழந்தை! 

மூளைச்சாவு அடைந்த போர்ச்சுகல் விளையாட்டு வீராங்கனைக்கு ஆண் குழந்தை பிறந்தது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர் கேத்தரீனா சீக்கிரா. 26 வயதான இவர் அந்நாட்டின் பிரபல தடகள விளையாட்டு வீராங்கனை ஆவார். சர்வதேச அளவில் பல்வேறுபோட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

 மூளைச் சாவு

Photo courtesy:The Sun

சிறுவயது முதல் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே அவருக்குத் திருமணமானது. 19 வார கர்ப்பிணியான அவர் உடல்நலமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இந்நிலையில் வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேத்தரீனாவின் கணவர் வேண்டுகோள் விடுத்தார். இதனால் ஐந்து மாதங்கள் வரை கேத்தரீனாவை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். மேலும், அவருக்கு செயற்கைச் சுவாசம் பொருத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன் குழந்தை நன்றாக வளர்ச்சி பெற்றிருந்தது. இதனால் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். 

women

ஆரோக்கியமான நிலையில் பிறந்த அந்த ஆண் குழந்தையின் எடை 1.7 கிலோ ஆக இருந்தது. `அந்தக் குழந்தைக்கு 'சால்வடார்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அதிசயமானது' என்று போர்ச்சுக்கல் சா ஜோவா மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கர்சில்லா க்யூமரியாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேத்தரீனாவின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.