மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள், பழங்கள்! | this story about healthy foods that can help mental health problems

வெளியிடப்பட்ட நேரம்: 05:43 (02/04/2019)

கடைசி தொடர்பு:05:43 (02/04/2019)

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள், பழங்கள்!

வெங்காயம், முட்டைகோஸ், இஞ்சி, பூண்டு, ஊறவைக்கப்பட்ட உணவுகள், புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், பீன்ஸ் வகைகள் ஆகிய உணவுகளின் மூலம் வயிற்றில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க முடியும். மூளையின் செயல்பாடுகளையும் அதிகரிக்க முடியும்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள், பழங்கள்!

த்தான உணவுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலருக்கும் தெரியும். மன ஆரோக்கியமும் சத்தான உணவுகளைச் சார்ந்தே இருக்கிறது என்பது பலர் அறியாயது. `சரியான ஊட்டச்சத்துமிக்க உணவுகளைத் தவிர்ப்பது உடல்நலத்தை மட்டுமல்ல மனநலத்தையும் பாதிக்கும்'  என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 

ஆரோக்கிய உணவுகள்

`வயிறு நல்லாயிருந்தால் மனசு நல்லாயிருக்கும்' என்ற சொலவடை உண்டு. சத்தான உணவுகளை உட்கொள்ளும்போது மூளையின் செயல்திறன் நன்றாக இருக்கும். மூளையில் பாதிப்பு இல்லையென்றால் மனநலப் பிரச்னைகளின்றி ஆரோக்கியமாக வாழலாம்'' என்கிறார் உணவியல் நிபுணர் மேனகா.

உணவுக்கும் மனநலனுக்கும் இடையேவுள்ள தொடர்பு குறித்து விரிவாக விளக்குகிறார்.

``இன்றைய சூழலில் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர். பல உணவகங்களில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வயிற்றுக்கோளாறுகள், அஜீரணம், மனநலப் பிரச்னைகள், தூக்கமின்மை போன்ற பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

மன ஆரோக்கியம்

அரிசியை எடுத்துக்கொண்டால், அதைப் பலமுறை பாலீஷ் செய்து வெள்ளை நிறத்தில் மாற்றுவதால் அதிலுள்ள நுண்ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் அழிந்துவிடுகின்றன. உணவுப்பொருள்களை அதிகமுறை சுழற்சிக்கு உட்படுத்தும்போது அதில் காணப்படும் துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற சத்துகள் அழிந்துவிடும். சத்துகள் இல்லாத உணவுகளைச் சாப்பிடும்போது அவை `சைக்யாட்ரிக் டிஸார்டர்' (Psychiatric disorder),`பைபோலார் டிஸார்டர்'  (Bipolar disorder), `மூட் ஸ்விங்' (Mood swing), மனச்சோர்வு, மனப்பதற்றம் உள்ளிட்ட மனநலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. 

2018- ம் ஆண்டில் பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில், நலமுடன் உள்ளவர்கள் மற்றும் மூளையில் பாதிப்புள்ள சுமார் 300 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மூளை பாதிப்புள்ளவர்களுக்கு வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. நலமுடன் உள்ளவர்களின் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.
என்ன வகை உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெங்காயம், முட்டைகோஸ், இஞ்சி, பூண்டு, ஊறவைக்கப்பட்ட உணவுகள், புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், பீன்ஸ் வகைகள் ஆகிய உணவுகளின் மூலம் வயிற்றில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க முடியும். மூளையின் செயல்பாடுகளையும் அதிகரிக்க முடியும்.

உணவு

உணவியல் நிபுணர் மேனகாநாற்பது வயதுக்குமேல் மறதி, மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதேபோல காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். 

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தில் நிறைய வகைகள் உள்ளன. குறிப்பாக, `ஏ.எல்.ஏ' (ALA- alpha- linolenic acid), `இ.பி.ஏ' (EPA-  eicosapentaenoic acid), டி.ஹெச்.ஏ (DHA-Docosahexaenoic Acid) இவை மூன்றும் மூளையின் வளர்ச்சிக்கு உதவக்கூடியவை. குழந்தை பிறந்து ஐந்து வயது வரைக்கும் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அந்தச் சமயத்தில் சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டியது அவசியம். தாய்ப்பாலில் இ.பி.ஏ,  டி.ஹெச்.ஏ சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால், கர்ப்ப காலத்திலேயே தாய்மார்கள் இ.பி.ஏ, டி.ஹெச்.ஏ உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இத்தகைய சத்துள்ள உணவுகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது, எதிர்காலத்தில் குழந்தைக்கு மனநலன் தொடர்பான பிரச்னைகள் உருவாவதைத் தடுக்கமுடியும்.

ஸ்ட்ராபெரி

`சைக்யாட்ரிக் டிஸ்ஆர்டர்', `பைபோலார் டிஸ்ஆர்டர்' உள்ளிட்ட மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இ.பி.ஏ, டி.ஹெச்.ஏ சத்துகளின் குறைபாடு இருக்கும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் மனநல மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவதுடன், ஒமேகா 3 சத்துகளை அளிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மனநலப் பிரச்னைகளை சரிசெய்யலாம்.  

கடல் உணவுகளில் இ.பி.ஏ, டி.ஹெச்.ஏ. கொழுப்பு அமிலம் அதிகம் உண்டு. கடல்பாசியில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. கடல்பாசிகளை மீன்கள் உட்கொள்வதால் அவற்றின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நன்றாக உறைந்துவிடும். மீன்களை உட்கொள்ளும்போது நமக்கும் ஒமேகா 3 கிடைக்கும். அதேபோல, ஏரி, குளங்களில் உள்ள மீன்களிலும் ஒமேகா 3 அதிகம் உள்ளன. 

ஆரஞ்சு

கேரட், வாழைப்பழம், ஆப்பிள், கீரை வகைகள், முட்டைகோஸ், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகை பழங்கள், வெள்ளரிக்காய், வெண்ணெய் பழம் (அவகேடோ) உள்ளிட்டவற்றை உட்கொள்ளும்போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். மூளையில் ஹேப்பி ஹார்மோனான செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கச்செய்யும். எனவே, ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கக்கூடிய பழங்களைச் சாப்பிடுவதே நல்ல மனநலத்துடன் வாழ்வதற்கான வழி”என்கிறார் மேனகா. 


டிரெண்டிங் @ விகடன்