`ஜிகா வைரஸ் இல்லை, இந்தியா செல்லலாம்!'- சுற்றுலாப் பயணிகளுக்குத் தடையை விலக்கியது அமெரிக்கா | US relaxes travel warnings to India on Zika Virus cases

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:19:30 (02/04/2019)

`ஜிகா வைரஸ் இல்லை, இந்தியா செல்லலாம்!'- சுற்றுலாப் பயணிகளுக்குத் தடையை விலக்கியது அமெரிக்கா

ஜிகா வைரஸ், கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவை அச்சுறுத்தியதை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டங்களில், `ஜிகா வைரஸ்' தீவிர பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தைச் சுற்றிய பகுதிகளிலும், ஜெய்ப்பூர், போபால் போன்ற இடங்களிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. மூன்று மாத காலகட்டத்தில், ஏறத்தாழ 153 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் கடைசியில், ஜிகா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, யாருக்கும் ஜிகா வைரஸ் இருப்பதாகப் பதிவுசெய்யப்படவில்லை.

ஜிகா வைரஸ்

ஆனால், டிசம்பர் மாதத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவைச் சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச்  (CDC) சேர்ந்தவர்கள், இந்திய எல்லைக்குள் கர்ப்பிணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். கர்ப்பிணிகள் மட்டுமன்றி, தேனிலவு செல்லும் பெண்களும்கூட சுற்றுலா மற்றும் வேறு காரணங்களுக்காக இந்தியா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. குறிப்பாக, ராஜஸ்தான் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்தக் கண்டிப்பான எச்சரிக்கை, இந்திய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சுகாதார ஆய்வகத்தைச் சேர்ந்தவரும், மருத்துவ ஆய்வகத்தின் (Indian Council of Medical Research - ICMR) பொது இயக்குநருமான பல்ராம், சி.டி.சி-யை கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். எச்சரிக்கைப் பட்டியலை திரும்பப்பெற வேண்டும் அல்லது அதில் ஏதேனும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று  அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தொடர் விவாதங்களையடுத்து, நேற்றைய தினம் அமெரிக்காவின் சி.டி.சி அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடு' என்ற பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டு, 'கடந்த கால பாதிப்புகள்' பட்டியலின் கீழ் அப்பாதிப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ஜிகா தொடர்பான எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொசு

புனேயைச் சேர்ந்த தேசிய `வைராலஜி' ஆணையத்தில், ஜிகா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து கருவைப் பாதிக்கும் `மைக்ரோசெபலி' (Microcephaly) என்ற பாதிப்பு குறித்தும், அதைத் தடுப்பது குறித்தும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக, இந்திய மருத்துவ ஆய்வகம் (ICMR) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க