சிசேரியன் பிரசவத்தில் அதிகரிக்கும் சிக்கல்கள் - ஓர் அலசல்! | Cesarean delivery is more complicated than Vaginal Birth

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (03/04/2019)

கடைசி தொடர்பு:14:36 (03/04/2019)

சிசேரியன் பிரசவத்தில் அதிகரிக்கும் சிக்கல்கள் - ஓர் அலசல்!

"சிசேரியன் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. பல நேரங்களில், கர்ப்பிணிகளின் உயிரைக் காப்பாற்றும் சிகிச்சையாகவே அது உள்ளது. ஆனாலும், சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் சிறந்தது என்ற சிந்தனை தவறு. அதை முன்மொழியவே நாங்கள் விரும்புகிறோம்!’’ - ஆய்வாளர்கள்.

சிசேரியன் பிரசவத்தில் அதிகரிக்கும் சிக்கல்கள் - ஓர் அலசல்!

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கவே பெண்கள் சிசேரியனை நாடுகிறார்கள். இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் சிசேரியன் செய்துகொள்ளும் பெண்கள் மத்தியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், சிசேரியன் செய்துகொள்ளும் கர்ப்பிணிகளே பிரசவத்தின்போதும், அதற்குப் பின்னான காலங்களிலும் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், 35 வயதைக் கடந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, ஏற்படும் ரத்தப்போக்கும் நுரையீரலில் ஏற்படும் ரத்தக்கட்டும் சுகப்பிரசவம் செய்துகொள்பவர்களைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. `பிரான்ஸ் தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை ஆராய்ச்சி மையம்' (The French National Institute of Health and Medical Research) சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்து நடத்திய மருத்துவர் கேத்தரின் இதுகுறித்து கூறும்போது, "எங்கள் ஆய்வின் முடிவு, சிசேரியன் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. பல நேரங்களில், கர்ப்பிணிகளின் உயிரைக் காப்பாற்றும் சிகிச்சையாகவே அது உள்ளது. ஆனாலும், சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் சிறந்தது என்ற சிந்தனை தவறு. அதை முன்மொழியவே நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். 

கர்ப்ப காலம்

இந்த ஆய்வு குறித்து மகப்பேறு மருத்துவர் மீனாவிடம் பேசினோம். 

"இந்த ஆய்வு, சரியான முடிவுகளையே தந்துள்ளது. எந்த வயதுள்ள கர்ப்பிணியாக இருந்தாலும், சுகப்பிரசவமே சிறந்ததாக மீனா, மகப்பேறு மருத்துவர்இருக்கும். மகப்பேறு மருத்துவர்களான நாங்கள், கர்ப்பிணிகளைச் சுகப்பிரசவத்தை நோக்கித்தான் தயார்படுத்துவோம். சூழல் காரணமாக மட்டுமே, கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படும். எந்தெந்த சூழல்களில் சிசேரியன் பரிந்துரைக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

* குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்

* குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் சிசேரியன் பரிந்துரைக்கப்படும். சர்க்கரை நோய் பாதிப்புள்ள தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை 4.5 கிலோ எடையில் இருந்தால் சிசேரியன்தான் சிறந்த வழி. சர்க்கரைப் பாதிப்பு இல்லாத தாயின் வயிற்றில் 5 கிலோ எடையுள்ள குழந்தை இருந்தால் சிசேரியன் செய்வோம்.

* சர்க்கரைநோய் இருக்கும் கர்ப்பிணிகளுக்கும், ரத்த அழுத்தப் பிரச்னையை மாத்திரை, மருந்துகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையிருக்கும் கர்ப்பிணிகளுக்கும் பெரும்பாலான நேரங்களில் சிசேரியன்தான் பரிந்துரைக்கப்படும். 

* குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைந்துபோகும் சூழலில் சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.

* தாயின் வயிற்றில் குழந்தை மலம் கழித்துவிட்டால் சிசேரியன் பரிந்துரைக்கப்படும்

* தாய்க்குக் கருப்பை வாய் சிறிதாக இருந்தால், குழந்தை வெளியே வரமுடியாமல் திணறும். அந்தச் சூழலில் சிசேரியன் பரிந்துரைக்கப்படும். 

மருத்துவர் - கர்ப்பிணி

* சுகப்பிரசவத்துக்குக் கர்ப்பிணிகள், மனதளவில் மிகவும் பயந்து காணப்படும் சூழல் ஏற்பட்டால் சிசேரியன் பரிந்துரைக்கப்படும். இது, `டோகோபோபியா' (Tokophobia) எனப்படும். பயம் அதிகமாக இருப்பதால், `சிசேரியன் டெலிவரி ஆன் மெட்டர்னல் ரெக்வஸ்ட்' (Ceserian Delivery on Maternal Request) என்ற அடிப்படையில் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.

இப்படியான சூழல்கள் உருவாகும்போது, மருந்துகள் மூலம் இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து சுகப்பிரசவம் செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவோம். அப்படியும் குழந்தை வெளிவராத சூழலில் சிசேரியன் பரிந்துரைக்கப்படும். மருத்துவத்தில் இதை, பெயிலியர் டு புராக்ரஸ்' (Failure to progress - FTP)' அல்லது `பெய்ல்டு இன்டக்‌ஷன் ஆப் லேபர்' (Failed Induction of labor) எனச் சொல்வோம். இந்தச் சூழலில் குழந்தையைப் பாதுகாப்பாக வெளியே எடுப்பதற்காக சிசேரியன் செய்யப்படும். 

சிசேரியனைவிட சுகப்பிரசவமே சிறந்தது... ஏன் தெரியுமா? 

சிசேரியன் செய்யும்போது, கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது `அனஸ்தீசியா காம்பிளிகேஷன்' (Aneasthesia Complication) ஏற்படலாம். அதனால் ரத்தப்போக்கு அதிகமாகலாம். ரத்தப்போக்கு அதிகமாகும்போது, புதிதாக ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும். அப்படியும் பிரச்னை சரியாகாவிட்டால், தாய் - சேயின் நலன் மிகவும் பாதிக்கப்படும். சுகப்பிரசவத்தில் இந்தச் சிக்கல் இருக்காது.

சிசேரியன் செய்தால், சில தினங்கள் படுக்கையில் இருந்தபடி குளூக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கும். நார்மல் டெலிவரி செய்துகொண்டவர்களைப்போல, பிரசவித்த இரு தினங்களில் எழுந்து நடக்கவோ, அன்றாடப் பணிகளை இயல்பாகச் செய்யவோ முடியாது. 

பிரசவம்

உடல் எடை அதிகமாக இருந்து சிசேரியன் செய்துகொண்டவர்கள் படுத்தே இருப்பதால் உடலின் ஏதேனும் ஒருபகுதியில் ரத்தக்கட்டு ஏற்படலாம். மூளை முதல் கால் வரை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் அத்தகைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

குழந்தை பிறந்தவுடன் கர்ப்பப்பை சுருங்காமல்போனால் ரத்தப்போக்கு அதிகமாகிவிடும். உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும். அப்போதும் ரத்தம் நிற்காவிட்டால், கர்ப்பப்பையை நீக்க வேண்டியிருக்கும். கர்ப்பப்பை தொடர்பான இத்தகைய சிக்கல் மட்டும் சுகப்பிரசவத்தின்போதும் ஏற்படலாம். ஆனாலும், சுகப்பிரசவத்தைவிட சிசேரியனில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் சிக்கல் அதிகம்.

ஏற்கெனவே உடலில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களாக இருந்தால், மீண்டும் அறுவைசிகிச்சை (சிசேரியன்) செய்யும்போது உறுப்புகளுக்குள் தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆனால், சுகப்பிரசவம் மேற்கொள்ளும்போது தொற்றுப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சிசேரியன் குழந்தை பிறப்பு

சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களுக்கு உணவில் எந்த மாற்றங்களும் இருக்காது. அதனால் தாய்ப்பால் சுரப்பதிலும், எந்தவிதமான சிக்கலும் இருக்காது. ஆனால், சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு  நரம்பு மூலம் மருந்துகள் ஏற்றப்படுவதால் தாய்ப்பால் சுரப்பு தாமதமாகும். தாய்ப்பால் சுரப்பு அதிகரித்தால்தான், கர்ப்பப்பை வேகமாகச் சுருங்கும்.கர்ப்பப்பை சுருக்கம் எந்த அளவுக்கு விரைந்து நடக்கிறதோ, அந்தளவுக்கு விரைவாக அவர்களால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். 

சிசேரியன் செய்வதால் குழந்தைக்கு வரும் சிக்கல்கள்:

சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அதனால், `ஸ்டீராய்ட் ஹார்மோன்' சுரப்புகள் (Steroid Hormones) சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு அழுத்தம் மிகக் குறைவாகவே தரப்பட்டிருக்கும். அதனால், `டிரான்சியன்ட் எக்யூப்மென்ட் ஆப் நியூபார்ன்' (Transient Equipment of newborn) எனச் சொல்லப்படும் சுவாசம் தொடர்பான சிக்கல்கள் வரக்கூடும். சில நிமிடங்களில் இது சரியாகிவிடும் என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை...'' என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்