குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைப் போக்க பால், முட்டை அவசியம் தேவை!- ஆய்வில் தகவல் | Adding egg or milk can reduce stunting in young children

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (03/04/2019)

கடைசி தொடர்பு:17:50 (03/04/2019)

குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைப் போக்க பால், முட்டை அவசியம் தேவை!- ஆய்வில் தகவல்

ந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட 38 சதவிகிதக் குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். தினந்தோறும் அவர்கள் உட்கொள்ளும் கோதுமை, அரிசி, சோளம் போன்ற தானிய வகை உணவுகளே இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியக் குழந்தைகள், தானிய வகை உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துகள் கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல் `லைசின்' போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்களும் குறைந்த அளவிலேயே குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. புரதச் சத்துகள் அதிகம் உள்ள பால், முட்டை ஆகியவற்றைத் தினமும் உட்கொள்வதால், இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதுடன், வளர்ச்சிக் குறைபாடுகளையும் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தைகள் வளர்ச்சி

பெங்களூரைச் சேர்ந்த செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகள் தினமும் உண்ணும் உணவு மற்றும் அவற்றின் அளவுகளைக் கணக்கிட்டு ஆய்வுசெய்தனர். அப்போது, குழந்தைகளுக்குக் கிடைக்கும் புரதச்சத்து பெரும்பாலும் பாசிப்பயற்றிலிருந்தே அதிகம் கிடைப்பதாகக் கண்டறிந்தனர். ஆனால், பாசிப்பயற்றில் காணப்படும் புரதம், முட்டையைப் போன்று எளிதில் செரிமானமாகி உடலால் கிரகிக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். 

‘1 - 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதிக புரதச் சத்துகள் நிறைந்த பால் மற்றும்  முட்டைகளைத் தானிய உணவுகளுடன் சேர்த்து உட்கொள்கின்றனர். இதனால், வளர்ச்சிக் குறைபாட்டுப் பிரச்னை 10 சதவிகிதமாகக் குறைகிறது’ என்று ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். தினமும் 200 மி.லி பால் அல்லது தயிர், பால் பவுடர், மோர் போன்ற பால் பொருள்கள், ஒரு முட்டை, 45 கிராம் பருப்புப் பொருள்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் வளர்ச்சிக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம். 

பால்

“மூன்று வயதுக்கு முன்பே வளர்ச்சிக் குறைபாடு ஏற்படத்தொடங்கிவிடுகிறது. புரதம் மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய அமினோ அமிலங்கள் உள்ள பால் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருள்களை அதிகம் உண்பதன்மூலம் வளர்ச்சிக் குறைபாடு பிரச்னையைக் குறைக்கலாம். அமினோ அமிலம் மற்றும் புரதச்சத்து குறைபாடு மட்டுமல்லாமல் மரபுப் பிரச்னை, வறுமை மற்றும் சுகாதாரப் பிரச்னைகளும் வளர்ச்சிக் குறைபாடுகளுக்குக் காரணமாகின்றன” என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க