புதுச்சேரியில் பெண் நிர்வாகி புகைபிடித்த விவகாரம்! - கமலுக்குச் சென்ற புகார் கடிதம் | social activist's condemns Kamal's makkal needhi maiam campaign issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (04/04/2019)

புதுச்சேரியில் பெண் நிர்வாகி புகைபிடித்த விவகாரம்! - கமலுக்குச் சென்ற புகார் கடிதம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அனைத்துக்கட்சியினரும் அனல்பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தலைவர்களின் பிரசாரம் காமெடியாக அமைந்து சமூக வலைதளங்களில் ஹிட் அடிக்கின்றன. சில பிரசாரங்கள் விவாதங்களைக் கிளப்பிவிடுகின்றன. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற பிரசாரத்தில் நடைபெற்ற சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கண்டனக் குரல்களும் எழும்பியுள்ளன.

மநீம பெண் நிர்வாகி சிகரெட் பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து பாண்டிச்சேரியில் திங்கள்கிழமை பிரசாரம் நடைபெற்றது. கமல் பங்கேற்ற அந்தப் பிரசாரத்துக்காகத் தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பிரசாரத்தின் இறுதி நிகழ்வாக கமல் பேசுவதற்காக மைக்கைப் பிடித்தார். அந்தச் சமயத்தில் பிரசாரத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் பெண் நிர்வாகி ஒருவர் மேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்தார். கமல் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கிருந்த ஒருவரிடம் 'தான் சென்றுவருவதாக' சைகையின் மூலம் தெரிவித்துவிட்டு, வேகமாகச் செல்கிறார். நேராக மேடையின் பின்புறம் சென்று அமர்ந்து சிகரெட் பிடிக்கிறார் அந்தப் பெண். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுபோன்ற பொதுநிகழ்வில் பொதுவெளியில் புகைபிடிப்பது தவறு என்று சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிகரெட்

இந்த விவகாரம் தொடர்பாகப் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் பாண்டிச்சேரி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த விவகாரம் தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில், 'நீங்கள் பங்கேற்ற பிரசார மேடையின் பின்புறம் பிரசார ஒருங்கிணைப்பாளரான பெண் புகைபிடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. பிரசாரத்தைப் பார்க்க வந்த பலரும் மேடையின் பின்புறம் சென்று புகைபிடித்துள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற பகுதி புகைபிடிக்கும் பகுதி (Smoking Zone) போன்று மாறியுள்ளது. 

சிகரெட்

பிரசாரம் நடைபெறும் இடம் என்பது சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடம் அல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பொது நிகழ்வு.  எனவே, நீங்கள் நடிக்கும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்ப்பதுபோல, உங்கள் தேர்தல் பிரசாரம் நடைபெறும் இடங்களையும் புகையிலை தடைசெய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்க வேண்டும். உங்கள் பிரசார ஒருங்கிணைப்பாளர்களையும் அதைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துங்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.