"பிற கட்சியினர் எங்களை கிள்ளுக்கீரையாகவே நினைக்கிறார்கள்!" - கமிலா நாசர் #LetsRelieveStress | Kameela Nazar speaks about her stress relief techniques

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (04/04/2019)

கடைசி தொடர்பு:18:06 (04/04/2019)

"பிற கட்சியினர் எங்களை கிள்ளுக்கீரையாகவே நினைக்கிறார்கள்!" - கமிலா நாசர் #LetsRelieveStress

எங்களது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறோம். அதுதான் எங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. அந்த சவாலை நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால், அதுதான் எனக்கு மனஅழுத்தத்தைத் தருகிறதே தவிர, மற்றபடி எனக்கு வேறு எதுவும் மனஅழுத்தம் தருவதில்லை!

2019 நாடாளுமன்றத் தேர்தல்... இன்னும் சில நாள்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அனைத்துக்கட்சியினரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். தகிக்கும் வெயில், பலமுனைப் போட்டி என சவால் நிறைந்த இந்த நேரத்தில் வேட்பாளர்களுக்கு மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடும் கமிலா நாசர், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னையில் களமிறங்கியிருக்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு நடுவே, ஓர் ஓய்வான சூழலில் அவரிடம் பேசினோம்.  

கமிலா நாசர்

``மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து 13 மாதங்கள் ஆகும் சூழலில், முதலில் நாங்கள் சந்திக்கும் தேர்தல் இது. தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆனாலும், இந்தத் தேர்தலை நாங்கள் நேர்மையாகச் சந்திக்கிறோம். 

கடந்த 60 வருடங்களாகத் தமிழக மக்கள் வேறொரு சூழலில் மூழ்கியிருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறோம். மற்ற கட்சியினர் ஏதேதோ வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். நாங்கள் அப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளைச் சொல்லவில்லை. ஏழு வாக்குறுதிகளை மட்டுமே முன்வைத்திருக்கிறோம். முதலில், தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுத்து, `வரும் ஐந்தாண்டுகளில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வசதியைச் செய்து கொடுப்போம்’ என்று கூறியிருக்கிறோம். அதேபோல `ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’ தருவதாகக் கூறியிருக்கிறோம். இப்படியாக எங்களது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறோம். அதுதான் எங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. அந்த சவாலை நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால், அதுதான் எனக்கு மனஅழுத்தத்தைத் தருகிறதே தவிர, மற்றபடி எனக்கு வேறு எதுவும் மனஅழுத்தம் தருவதில்லை!

கமிலா நாசர்

எனது கட்சியின் ஏழு வாக்குறுதிகளை எப்படி எளிதாக எடுத்துச் செல்லலாம் என்பதுகுறித்து திட்டமிட்டுச் செயலாற்றுகிறோம். மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிக்கச் செல்லும்போது, தண்ணீர் பிரச்னை முக்கியமான ஒரு பிரச்னையாக இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களது எல்லா வேலைகளையும் தவிர்த்துவிட்டு, குடங்களுடன் தண்ணீருக்காகத் தவிப்பதைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பொருளாதார வசதி உள்ளவர்கள் லாரிகள் மூலம் நீரைக் கொண்டுவந்து தங்கள் வீட்டு குடிநீர்த்தொட்டிகளில் நிரப்பிக்கொள்கிறார்கள். ஆனால், வசதியற்றவர்கள் என்ன செய்வார்கள்?

இதன் அடிப்படையில் அனைவருக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எங்களது வாக்குறுதியை நிறைவேற்ற அறிவியல்பூர்வமான குழு ஒன்று வேலைசெய்துகொண்டிருக்கிறது. அவர்கள் நீர் ஆதாரம் குறித்தும் ஆய்வு செய்துவருகிறார்கள். ஆக, அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு மனஅழுத்தம் தருவதாக இருக்கிறது. மக்களிடமிருந்து எப்படி ஓட்டுகளைப் பெறப்போகிறோம் என்பது எங்களுக்கு மன அழுத்தத்தைத்  தரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது.

கமிலா நாசர்

இன்றைக்குத் தண்ணீர் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து நிற்கிறது. குளியல் அறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது குழாயில் தண்ணீர் வராமல்போனால், உங்கள் நிலைமை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் என வீட்டின் அனைத்து உறுப்பினர்களுமே இதனால் சிரமத்துக்குள்ளாவார்கள். ஆகவேதான் எங்களது வாக்குறுதியில் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்துவைப்போம் என்பதை பிரதானமாகச் சொல்லியிருக்கிறோம். மக்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற கட்சியினர், எங்கள் கட்சியைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள். அவர்கள் மக்களின் தேவைகள் குறித்துப் பேசுவதில்லை. இந்தத் தேர்தல் முடியட்டும். தண்ணீர் பற்றாக்குறை... எவ்வளவு பெரிய பிரச்னையாக மாறப்போகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

கமிலா நாசர்

சென்னையின் கழிவுநீர் கால்வாய்கள் 80 சதவிகிதம் தூர்வாரப்படாமல் இருக்கின்றன. மழைக்காலங்களில் அந்தக் கால்வாய்களின் நிலைமை மோசமாகும். கடந்தகால வெள்ளத்தின்போது சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்க இவைதான் காரணம். இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்க கூவம் ஆற்றை மீட்டெடுக்க உள்ளோம். இதற்கு மக்கள் மற்றும் அரசின் ஆதரவு தேவை. அப்படியானால்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும். அதேபோல, போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. அதற்கும் சரியான தீர்வு காண்போம்” என்கிறார் கமிலா நாசர்.

பிரசாரத்தின்போது கமல் உடன்

`தேர்தல் நேரத்தில் உணவுக் கட்டுப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி?’ என்ற கேள்விக்கு``உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. அந்தந்த இடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றைச் சாப்பிடுவேன். மக்கள் சேவைக்காகக் களத்தில் இறங்கியிருக்கிறேன். கடும் வெயிலாக இருந்தால் பெரும்பாலும் வெளியே செல்வதைத் தவிர்க்கிறேன். ஏனென்றால். அப்போது மக்களும்கூட வெளியே வருவதை விரும்ப மாட்டார்கள். அந்த நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் கட்சிக்காரர்களும் சிரமப்படுவார்கள். ஆகவே, வெயில் சற்று குறைந்ததும் பிரசாரத்துக்குச் செல்கிறேன். தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதாலும், வெயில் காலம் என்பதாலும் தேவையான அளவு தண்ணீரையும் இளநீரையும் குடித்து பிரசாரம் செய்துவருகிறேன்” என்றார் கமிலா நாசர்


டிரெண்டிங் @ விகடன்