இது பேச வேண்டிய நேரம்... சுகாதாரத்துறையைக் கைகழுவுகிறதா அரசு...? | When will we achieve Medicine for Poor people too

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (05/04/2019)

கடைசி தொடர்பு:13:08 (06/04/2019)

இது பேச வேண்டிய நேரம்... சுகாதாரத்துறையைக் கைகழுவுகிறதா அரசு...?

"கார்ப்பரேட் மருத்துவமனைகள் அவர்களது பல ஆண்டுக்கால சேமிப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பறித்துக்கொள்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை."

இது பேச வேண்டிய நேரம்... சுகாதாரத்துறையைக் கைகழுவுகிறதா அரசு...?

க்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசு, தன் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். அந்த வசதிகளில் முக்கியமானது சுகாதாரம். இன்றைய சூழலில் நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை அல்லது தேவைப்படும் நேரத்தில் கிடைக்கவில்லை. சுகாதாரம் கிடைக்காதபோது, அந்நாட்டின் சமூக நலன் சார்ந்த குறியீடுகள் பாதிக்கப்படும். இது நாட்டின் அனைத்து வளர்ச்சியையும் மறைமுகமாகப் பாதிக்கும். 

தனியார் மருத்துவமனை

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் சுகாதாரம் குறித்து நாம் பேச வேண்டியிருக்கிறது. புதிதாக அமையவிருக்கும் அரசு மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தேர்தலில் போட்டியிடும் அனைவருமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதாக உறுதியளிக்கின்றனர். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் சுகாதாரம் தொடர்பான வாக்குறுதிகளைத் தரவில்லை. மக்களும் சுகாதாரம்பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதேவேளையில், இந்திய சுகாதாரத்துறை மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது என்பதை மக்களும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்  

ஓர் அரசானது, தனது வருடாந்தரப் பட்ஜெட்டில் குறைந்தபட்ச தொகையை மக்களின் சுகாதாரத்துக்காக ஒதுக்க வேண்டும் என்பது நியதி. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சுகாதாரத்துறைக்கு போதுமான அளவு நிதி ஒதுக்குவதில்லை. இதனால் அரசு சார்ந்த சுகாதாரச் சேவை மையங்களில், மக்கள்தொகைக்கு ஏற்ப தரமான சேவைகள் கிடைப்பதில்லை. இதனால் மக்கள், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளைத் தேடிச்செல்கின்றனர். இதை சில மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யும்படி சொல்கின்றனர். அவசியம் இல்லாவிட்டாலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கின்றனர். சிலரை நீண்ட நாள்கள் உள்நோயாளிகளாகவே வைத்திருக்கின்றனர். இதனால், ஆகும் மருத்துவச் செலவுகளால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். 

மருத்துவமனை

கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஒருமுறை உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவது என்பது, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உறிஞ்சிவிடுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில், நடுத்தர மக்கள் தங்களது பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை. ஒரு சில அறக்கட்டளைகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் சில தனியார் மருத்துவமனைகளும் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு ஏற்றாற்போல் இருக்கின்றன. ஆனாலும், அவற்றில் சாதாரண சிகிச்சைகள் மற்றும் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைக்கான வசதிகள் மட்டுமே உள்ளன. இதய நோய், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்று நோய்களுக்கான சிகிச்சைகளுக்குப் பெரிய மருத்துவமனைகளையே நாடும் நிலைமை உள்ளது. 

பண வசதி படைத்தவர்கள் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் இல்லை. ஏழைகள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். நடுத்தர மக்கள் எங்கே செல்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகள் அவர்களது பல ஆண்டுக்கால சேமிப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பறித்துக்கொள்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 

சில மாநிலங்களில், அரசின் சார்பில் அமல்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கைகொடுக்கின்றன. ஆனாலும், இந்தத் திட்டம் எல்லா அத்தியாவசிய நோய்களுக்கும் கிடைப்பதில்லை. அநேகமாக அறுவைசிகிச்சை தொடர்பான நோய்களுக்கே பொருந்துகிறது. இதிலும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை அரசு நேரடியாக நடத்தாமல், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தது. லாபம் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் நுழையவில்லை. இதே திட்டத்தை அரசே நேரடியாக, தனது ஆள் பலம் மூலம் நிர்வகித்திருந்தால், லாபம் கிடைக்கும் தொகையை வைத்துக்கொண்டு அதிகப்படியான நோய்களை இத்திட்டத்தில் கொண்டு வரலாம். இதன்மூலம் அரசு வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கலாம்

இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் அதிக நிலப்பரப்பு கிராமப்புறங்களில் உள்ளன. ஆனால், 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் உள்ளனர். இதுபோக அரசு மற்றும் தனியார் உயர் சிகிச்சை சேவைகளும், நகர்ப்புறத்தில் குவிவதால் ஆரோக்கியத்துக்காகக் கிராம மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், மருத்துவச் சேவை பெறுவதற்காகக் கடன்காரர்களாக மாறுகிறார்கள். இப்படித் தங்கள் தகுதிக்கு மீறிய மருத்துவச் செலவுகளால் மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்படுவதைப் பற்றி அரசியல்வாதிகளோ சட்டம் இயற்றும் அரசு ரீதியான அமைப்புகளோ கண்டுகொள்வதில்லை. 

மருத்துவ சிகிச்சை

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுப்படி, இந்தியாவில் சுகாதாரத்துக்காக, தனது தகுதிக்கு மீறிச் செலவழிப்பது அதிகரித்து வருகிறது. சராசரியாக மொத்த வீட்டுச் செலவில் 10 சதவிகிதம் அல்லது வாழ்வாதார நுகர்வுச் செலவில் 22 சதவிகிதம் செலவழிக்கின்றனர். அநேகமாக 24 சதவிகித மக்கள் தங்கள் பொருளாதாரத் தகுதிக்கு மீறி அடிப்படை சுகாதாரத்துக்காகச் செலவு செய்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களது மற்ற அடிப்படை வாழ்வாதாரத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகாரபூர்வமான, அறிவியல் சார்ந்த இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகிப் பல வருடங்கள் ஆகியும், அரசு இந்த நிலையை மாற்றப் பெரிய ஆக்கபூர்வமான எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 

உலக சுகாதார அமைப்பு கேரளாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு முடிவைப் பார்ப்போம். `ஹார்ட் அட்டாக்' ஏற்படும் நோயாளிகளில் 84 சதவிகிதம் பேர், சுகாதாரச் செலவுகளால் கடன்காரர்களாக மாறுகிறார்கள். இதைச் சமாளிக்க அவர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பை நிறுத்துகிறார்கள். சிலர், தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றுகிறார்கள். 

பொதுவாகக் கேரள மாநிலம், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம். திட்டமிட்ட பொருளாதார வரவு - செலவு கொண்டவர்கள் அம்மாநில மக்கள். அம்மாநில ஆய்வின் முடிவே இப்படி இருந்தால், படிப்பறிவு குறைந்த, மிக மோசமான சமூக, பொருளாதார நிலைகளைக் கொண்ட மாநிலங்களில் இந்நிலை இன்னும் மோசமாகவே இருக்கும். 'ஒரு பெரிய நோய் வந்து, அதற்குச் சிகிச்சை பெற்று மீண்டு வருவதைவிட, அந்நோயால் முடிவை எட்டுவதே மேல்' என்னும் எண்ணம், மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோயோ அல்லது இதயம்,  சிறுநீரகம், ஈரல் அல்லது மூளை சம்பந்தமான நோய்களோ வந்தால், அவர்கள் உடல்ரீதியாகப் பாதித்ததைவிட,  தங்களது சேமிப்பு மற்றும் சொத்துகளை இழந்து மனநிம்மதியை இழந்து ஏற்படும் பாதிப்பே அதிகம்.

மருத்துவமனை

இந்தியாவில் சாமானிய மக்களும் மிக எளிதாகச் சுகாதார வசதிகளைப்பெறச் சுகாதாரம் சார்ந்த கொள்கையில் பெரும் மாற்றம் தேவை. தனியார்மயமான கல்வி மற்றும் மருத்துவத்தை, அரசு தனது கரங்களில் எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான, அதேநேரம் தரம் வாய்ந்த மருத்துவத்தை அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், உரிய நேரத்தில் உரியச் சேவை அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம் மக்களும் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கான சேவைகளைப் பெறுவதற்கு தயங்கக் கூடாது.

அரசு மருத்துவமனை என்றாலே அங்கு இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் சிலருக்கு உண்டு. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, 200 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் இத்தகைய பாரம்பர்யம் இல்லை. இந்த மருத்துவமனையைத் தமிழகம் முழுவதும் உள்ள மக்களைத்தவிர ஆந்திர மாநில மக்களும்கூடப் பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் நோயாளிகளில், பலர் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று நோயின் தீவிரம் அதிகரித்து மேல் சிகிச்சைக்காக வருபவர்களே. அதனால், மற்ற மருத்துவமனைகளை ஒப்பிடும்போது இங்கு இறப்பு விகிதம் அதிகமாகவே இருக்கும். மேலும், அரசு மருத்துவமனைகளில் எல்லா இறப்புகளும், பதிவாகி பதிவுத் துறையால் கண்காணிக்கப்படுகின்றன. இவை தனியார் மருத்துவமனைகளில் வெளிப்படையாக இல்லை. எனவே இறப்பு எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு, அரசு மருத்துவமனைகளின், சேவையைப் பெற பொதுமக்கள் அஞ்சக் கூடாது. இறப்பு விகிதாசாரம் என்பது மற்ற தனியார் மருத்துவமனைகளைவிட இங்கு குறைவாகவே இருக்கும்.  

தனியார் மருத்துவமனை

அரசின் சார்பில் தரப்படும் மருந்துகளும் மருத்துவம் சார்ந்த சேவைகளும் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வழிவகுக்க வேண்டும். `மருந்து விலைக் கட்டுப்பாடு சட்டம்' (DPCA ) என்னும் அத்தியாவசியமான மருந்துகளைக் கட்டுக்குள் வைக்கும் சட்டம் நடைமுறையில்  இருந்தாலும், அதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். மருந்துகளைப் போன்று மற்ற மருத்துவ சேவைகளான ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், மருத்துவம் சார்ந்த இதர சேவைகளின் கட்டணங்களைக் கட்டுக்குள் வைக்க முறைப்படுத்தப்பட்ட சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்களின் சுகாதாரம் நல்வாழ்வு மேம்பட்டு நாடு வளர்ச்சி அடையும். 


டிரெண்டிங் @ விகடன்