கொசுவை விரட்ட இசையே போதும்! - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு | Music used as mosquito repellent

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:21:15 (05/04/2019)

கொசுவை விரட்ட இசையே போதும்! - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு

பல்வேறு விலங்குகளின் இனப்பெருக்கம், உயிர் வாழுதல், எண்ணிக்கையை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு ஒலி என்னும் விஷயம் முக்கியப் பங்குவகிக்கிறது.

ந்த சீசன் வந்தாலும் கொசுக்களை மட்டும் ஒழிக்கவே முடிவதில்லை. 'நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு...ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா...!' என்று வசனம் பேசாத குறையாக சவால்விடுகின்றன கொசுக்கள். கொசுக்களின் மூலம் பரவும் நோய்களால், ஆண்டுதோறும் அதிகரித்துவரும் உயிரிழப்புகள், கொசுக்கள் மீதான நம் பயத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. 'உலகப் போர்களில் மடிந்தவர்களைக் காட்டிலும் கொசுக்களால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

கொசுவை விரட்ட புதிய ஆய்வு

கொசுவத்தி, கொசுவிரட்டி திரவம் என எந்த அதிகாரத்தைப் பிரயோகித்தாலும், கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், இசையின்மூலம் எளிதாக கொசுவுக்கு தீர்வுகாண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'டப்ஸ்டெப்' (DubStep) என்ற இசையை ஒலிக்கவிடுவதன் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். டப்ஸ்டெப் என்பது 1990-களில் தெற்கு லண்டனில் தோன்றிய ஒருவகை எலெக்ட்ரானிக் இசையாகும்.

கொசுவிரட்டி

பல்வேறு விலங்குகளின் இனப்பெருக்கம், உயிர் வாழுதல், எண்ணிக்கையை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு, ஒலி என்னும் விஷயம் முக்கியப் பங்குவகிக்கிறது. பூச்சியினங்களைப் பொறுத்தவரை குறைந்த அலைவரிசை அதிர்வுகள், அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உதவிசெய்யும். அதேசமயம், சில சப்தங்கள் இணையிடம் இருந்து இனப்பெருக்கத்துக்காக வரும் சமிக்ஞைகளையும், இரை இருக்கும் இடத்தைக் கண்டறிவதையும் தடுக்கும். 

கொசுவர்த்தி

"டப்ஸ்டெப் இசை, மிக அதிக மற்றும் மிகக் குறைந்த அலைவரிசையைக் கொண்டுள்ளன. இந்த இசை ஒலிக்கும் நேரத்தில், பெண் கொசுக்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளும், மனிதர்களைக் கடிக்கும் செயல்பாடும் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. டப்ஸ்டெப் இசையை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தி, கொசுக்களை விரட்டுவதற்கான முழுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் " என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வு முடிவு, 'அக்டா டிராபிகா' என்ற சர்வதேச மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.