கோடைக்காலத்தில் மனநிலையைச் சீராக வைத்துக்கொள்ள மனநல மருத்துவர் தரும் டிப்ஸ்! | 'Heat Stroke' caused by the increase in heat will affect the mood - Alert!

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:23 (08/04/2019)

கோடைக்காலத்தில் மனநிலையைச் சீராக வைத்துக்கொள்ள மனநல மருத்துவர் தரும் டிப்ஸ்!

வெப்பம் அதிகரிப்பதால் `ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்போது ஒருவிதமான குழப்பமான மனநிலைக்கேகூட போய்விட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதையெல்லாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படுவது அவசியம்.

கோடைக்காலத்தில் மனநிலையைச் சீராக வைத்துக்கொள்ள மனநல மருத்துவர் தரும் டிப்ஸ்!

கோடைக்காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக, அதிக வெப்பத்தின் காரணமாக, உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்துபோய் 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) ஏற்படலாம். உடல்நிலையில் மட்டுமல்ல... நம் மனநிலையிலும் வெயில் பல மாறுதல்களை ஏற்படுத்தும். 

மனநிலை

மனநல மருத்துவர் சரிதா``கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும். சீரான மனநிலையை வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்?” 

விளக்குகிறார் மனநல மருத்துவர் சரிதா. 

``கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்கும். இதனால் கோபம், வெறுமை, பதற்றம் போன்றவை ஏற்படும். மற்ற நேரங்களில் நிதானமாக ஒரு விஷயத்தைச் செய்வோம். ஆனால், கோடைக்காலத்தில் உடலின் வெப்பம் அதிகரிப்பதால் நிதானம் குறைய ஆரம்பிக்கும். ஒருவித படபடப்புடன், பக்குவமில்லாத குழப்பமான மனநிலை ஏற்படும். வெறுப்பு அதிகமாகும். நம்முடன் இருப்பவர்கள் ஏதாவது சிறிய தவற்றை நமக்கு இழைத்தால்கூட அதிகமான கோபம்வரும். மன்னிக்கக்கூடிய பக்குவமே குறைந்துபோய்விடும். இவையெல்லாம் வெயிலின் தாக்கத்தால் உருவாகக்கூடியவை!

மனநலம்

பொதுவாக, நம்முடைய மனநிலை என்பது காலநிலை மாற்றங்களுக்கேற்ப மாறக்கூடியதுதான். குளிர்காலத்தில் இருக்கும் மனநிலை கோடைக்காலத்தில் இருக்காது. அதனால்தான், மழைக்காலத்தில் பலர் கவிதைகள் எழுதுவதும், ரொமாண்டிக்கான மனநிலையில் சுற்றுவதுமாக இருக்கிறார்கள். அது மனநிலை மீது பருவங்கள் ஏற்படுத்துகிற பாதிப்புதான். குளிர் மற்றும் மழைக்காலங்களில் எந்தவொரு விஷயத்தையும் நிதானமாக, ரசித்துச் செய்வோம். எனவேதான், கோடைக்காலத்தில் நம்முடைய மனநிலை சீராக வைத்துக்கொள்ள மலைப்பிரதேசங்களைத் தேடிச் செல்கிறோம். 

கோடை

கோடைக்காலத்தில் நிதானம், பொறுமை, எதையும் யோசித்துச் செயல்படுகிற மனநிலை எல்லாவற்றிலும் மாற்றம் வரும். பதற்றம் அதிகமாகும். யோசிக்காமல் முடிவெடுப்போம். அது வேறுவிதமான பிரச்னைகளை உருவாக்கிவிடும். அப்படி வரும் பிரச்னைகள் மேலும் மனநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

சகிப்பு தன்மை, மன்னிக்கக்கூடிய மனப்பான்மை எல்லாம் குறைய ஆரம்பித்துவிடும். அதனால், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம்கூட நண்பர்கள், உறவினர்களிடையே மனக்கசப்பு உருவாகும். தூக்கமின்மை, பசியின்மை ஏற்படலாம்.  

வெப்பம் அதிகரிப்பதால் `ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்போது ஒருவிதமான குழப்பமான மனநிலைக்கே கூட போய்விட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதையெல்லாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படுவது அவசியம்.

பழச்சாறு

கோடையில் மனநிலை பாதிப்புகளை தவிர்க்க சில ஆலோசனைகள்!

* கோடைக்காலத்தில் வெளியில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். 

* கூடுமானவரை வேலைகளை உள்ளறையில் (Indoor) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்றாலும், சீக்கிரமே அறைக்குத் திரும்புவது நல்லது. 

* கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது அவசியம்.

பழங்கள்

* வெளியில் செல்ல வேண்டியிருப்பின் காலை அல்லது மாலையில் போய்வருவது நல்லது.

* நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம். அதேபோல, கோடையில் கிடைக்கும் பழங்களை உண்ணலாம். பழச்சாறுகளை அருந்தலாம். 

* வெப்பநிலையில் மாற்றம் என்பது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், பிறர் தவறு செய்யும்போது அவர்கள் மீது அதிகமான வெறுப்பு வராமல் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல, நமக்கு இருக்கும் மனநிலையைப்போலவே பிறருடைய மனநிலையும் இருக்கும் என்பதை அறிந்துகொள்வது முக்கியம்” என்கிறார் சரிதா.  


டிரெண்டிங் @ விகடன்