``பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளைச் சாப்பிட்டால்..!''- எச்சரிக்கும் ஆய்வு | Poor diet leads you to death

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (08/04/2019)

``பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளைச் சாப்பிட்டால்..!''- எச்சரிக்கும் ஆய்வு

சரியான உணவுமுறையைப் பின்பற்றாததால் ஐந்தில் ஒருவர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது `லேன்செட்' மருத்துவ இதழ். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமான `குளோபல் பேர்டன் ஆஃப் டிசிஸ்' நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

டயட்

சரியான உணவுமுறை இல்லாததால் ஏற்படும் இறப்பு விகிதங்களின் அடிப்படையில் இந்தியா 118-வது இடத்தில் இருக்கிறதாம். 195 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக உணவுமுறை சார்ந்த இறப்பு விகிதம் கொண்ட நாடாக உஸ்பெகிஸ்தானும், மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட நாடாக இஸ்ரேலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 140-வது இடம்.

``பதப்படுத்தப்பட்ட அசைவ வகைகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை உண்பதால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த நோய்களின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை  2017-ம் ஆண்டில் ஒரு கோடியே பத்து லட்சத்தைத் தொட்டுள்ளது" என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உணவுமுறை

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை உணவுகளான பால், நட்ஸ், பழங்கள் மற்றும் தானிய வகைகள் உட்கொள்வது குறைந்தும் துரித உணவுகள்  பதப்படுத்தப்பட்ட ‌அசைவ உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வது மிகுந்தும் காணப்படுவதே இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் வெளியான ஓர் ஆய்வில் சரியான உணவுப்பழக்கம் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், தானியம், கிழங்கு வகைகளைச் சாப்பிடும் அளவை இரட்டிப்பாக்குவதும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளையும், உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையும் பாதியாகக் குறைப்பதுமே சிறந்த உணவுமுறை என்கிறது அந்த ஆய்வு.