பஜ்ஜி, போண்டாவை காகிதத்தில் வைத்துச் சாப்பிடுபவரா நீங்கள்... உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை! | Health Hazards of Food enrolled by Paper Packaging

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:55 (10/04/2019)

பஜ்ஜி, போண்டாவை காகிதத்தில் வைத்துச் சாப்பிடுபவரா நீங்கள்... உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

எந்தப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் வீட்டிலிருந்து பையோ, பாத்திரமோ கொண்டு செல்லுங்கள். பிளாஸ்டிக், அச்சிடப்பட்ட காகிதங்களில் பேக் செய்யும் பழக்கத்தைத் தவிர்ப்போம்! 

பஜ்ஜி, போண்டாவை காகிதத்தில் வைத்துச் சாப்பிடுபவரா நீங்கள்... உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் உடல் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக அரசு அதைத் தடை செய்துள்ளது. பெரும்பாலான கடைகளில் இப்போது செய்தித்தாள்களில் உணவுப்பொருள்களை மடித்துக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 'பிளாஸ்டிக்கைப் போலவே அச்சிடப்பட்ட காகிதங்களில் பேக் செய்யப்படும் உணவுகளும் ஆபத்தானவைதான்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

எண்ணெய் பலகாரங்கள் -பஜ்ஜி

இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் சார்பில், 'அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருள்களை விநியோகிக்கக் கூடாது' என்று கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்படி விநியோகிக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம், இதுதொடர்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வுப் பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை.

அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருள்களை வைத்துப் பயன்படுத்துவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? குடல் இரைப்பை நிபுணர் ஜீவன் குமாரிடம் கேட்டோம். 

"அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவை மடித்துத் தருவதால், அதில் மை மற்றும் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் போன்றவை உடலுக்குள் செல்லும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதனால் உடனடி விளைவுகள் ஏற்படும். 

வயிற்று வலி

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மையில் காரியம், குரோமியம் மற்றும் கிராபைட் ஆகிய ரசாயனங்கள் இருக்கும். காரியம் உடலில் அதிகம் சேர்ந்தால் ஞாபகக்குறைபாடு சார்ந்த பல பிரச்னைகள் ஏற்படலாம். கிராபைட், உறுப்புகளில் தங்கிவிடும் தன்மை கொண்டது என்பதால், உள்உறுப்புகளில் பிரச்னை ஏற்படலாம். தவிர, செய்தித்தாள்களில் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருக்கும் என்பதால், அவை உணவுடன் கலந்து குடலுக்குள் சென்றுவிடும் வாய்ப்புகள் உண்டு. இதனால் தொற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம். குரோமியம், எலும்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.  

டீக்கடைகள், சாலையோரக் கடைகளில் எண்ணெயில் செய்த உணவுகளைப் பேப்பரில் மடித்துக் கொடுப்பார்கள். எண்ணெயின் தீமைகளோடு, அச்சு ரசாயனங்களும் சேரும்போது கூடுதல் பாதிப்புகள் ஏற்படும். எனவே, முடிந்தவரை வெளியிடங்களில் இப்படியான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பதுதான் நல்லது.

நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு, ஃபுட் பாய்சன் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். அதனால் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு, ஒவ்வாமை பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகளும் ஏற்படலாம். தொடர்ந்து, அச்சிடப்பட்ட காகிதங்களில் பேக் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். 

ஃபுட் பாய்சன்

சாப்பிட்டு முடித்ததும், பயன்படுத்திய செய்தித்தாளைக் கொண்டே சிலர் கை, வாயைச் சுத்தம் செய்வர். இதுவும் ஆபத்தானது. உடனடி ஒவ்வாமைகளை ஏற்படுத்திவிடும். சூடான உணவாக இருந்தால், காகிதங்களிலுள்ள ரசாயனங்கள் யாவும் எளிதில் கரைந்து உணவுப்பொருளோடு கலந்துவிடும். அது இன்னமும் ஆபத்து" என்கிறார் ஜீவன் குமார்.


அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள கன உலோகங்கள் (Heavy metals), வேதிப் பொருள்கள், உணவுப் பொருள்களில் கலப்பதாக இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய இரண்டு ஆய்வுகளில் ஏற்கெனவே தெரியவந்துள்ளது. எனவே எந்தப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் வீட்டிலிருந்து பையோ, பாத்திரமோ கொண்டு செல்லுங்கள். பிளாஸ்டிக், அச்சிடப்பட்ட காகிதங்களில் பேக் செய்யும் பழக்கத்தைத் தவிர்ப்போம்! 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்