இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலுக்குள் காத்திருந்த ஆச்சர்யம்! அதிர்ந்துபோன ஆராய்ச்சி மாணவர்கள் | Surprise bound inside 99 year old woman's body

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (13/04/2019)

இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலுக்குள் காத்திருந்த ஆச்சர்யம்! அதிர்ந்துபோன ஆராய்ச்சி மாணவர்கள்

டமேற்கு பசிபிக் பகுதியைச் சேர்ந்த ரோஸ் மேரி பென்லி என்ற மூதாட்டி 2017-ம் ஆண்டு தனது 99-வது வயதில் உயிரிழந்தார். அவரின் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம்செய்தனர் உறவினர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ் மேரியின் கணவர் ஜிம் உயிரிழந்தபோது, அவரது உடலும் மருத்துவக் கல்லூரிக்கு தானமளிக்கப்பட்டது.

ரோஸ் மேரி உடலில் ஆச்சர்யம்

PC: Daily Mail

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானம் வழங்கப்பட்ட ரோஸ் மேரியின் உடல் மருத்துவக் கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.  உடற்கூறு ஆராய்ச்சி செய்வதற்காக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அண்மையில்தான் அவரது உடலை எடுத்தனர். ரோஸ் மேரியின் உடலை உடற்கூறு செய்து பார்த்த மருத்துவ மாணவர்கள் அதிர்ந்து போனார்கள். 

`சிட்டஸ் இன்வெர்சஸ்' (situs inversus) என்ற மிகவும் அரியவகை பிரச்னையால் ரோஸ் மேரி பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளான (Abdominal organs) வயிறு, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்து உறுப்புகளும் இடம்மாறி இருந்திருக்கிறது. அதாவது இடது பகுதியில் இருக்க வேண்டிய உறுப்புகள் வலதுபுறமாகவும், வலது புறம் இருக்க வேண்டிய உறுப்புகள் இடதுபுறமாகவும் மாறி இருந்திருக்கின்றன. இதயம் மட்டும் இடதுபுறமே இருந்திருக்கிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான அனைத்து உறுப்புகளும் இடம் மாறியிருந்தாலும் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் 99 வயது வரை ஆரோக்கியமா வாழ்ந்துள்ளார்.

மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி

ரோஸ் மேரியும் அவரது கணவரும் இணைந்து விவசாயப் பண்ணை மற்றும் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் தேவாலய இசைக்குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.

உடற்கூறு

 

``ரோஸ் மேரியின் உடலை ஆராய்ச்சி செய்ததன் மூலம் உடற்கூறில் இருக்கும் மாறுபாடுகளைப் பற்றி அறிய முடிந்தது. இவ்வளவு பெரிய மாறுபாடுகள் இருந்தும் அவர் எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது வியப்பாக இருக்கிறது. ரோஸ் மேரியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. இந்த அனுபவம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதலாக உதவும்" என்கிறார் அவரது உடலில் அதிக ஆராய்ச்சி மேற்கொண்ட இரண்டாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவரி வாரன் நீல்சன்.

'ஐந்து கோடி பேரில் ஒருவருக்கு இதேபோன்று உள்உறுப்புகள் இடம்மாறி இருக்க வாய்ப்புள்ளது' என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையின் விந்தையை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ரோஸ் மேரியும் சான்றாகி இருக்கிறார்!