சிரிக்கும்போது கன்னம் சிவக்கிறதா... ரோஸாசியா சருமப் பாதிப்பாக இருக்கலாம்! | Symptoms causes and treatment for Rosacea

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (15/04/2019)

கடைசி தொடர்பு:13:45 (15/04/2019)

சிரிக்கும்போது கன்னம் சிவக்கிறதா... ரோஸாசியா சருமப் பாதிப்பாக இருக்கலாம்!

நமது சருமத்தின் இரண்டாவது அடுக்கில் ரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன. அவை சிலருக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விரிவடையும். அப்படி விரிவடையும் ரத்தக்குழாயின் வழியாக ரத்தம் அதிகமாகச் செல்லும். அதிகமாக ரத்தம் செல்லும்போது வெளித்தோற்றத்தில், அதாவது சருமப் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பாகத் தெரியும்.

சிரிக்கும்போது கன்னம் சிவக்கிறதா... ரோஸாசியா சருமப் பாதிப்பாக இருக்கலாம்!

மிழக இளைஞர்களை 'பிரேமம்' கொள்ளவைத்த நடிகை அவர். அவர் சிரிக்கும்போது, ஏற்கெனவே ரோஸ் நிறத்தில் இருக்கும் அவரது கன்னம் மேலும் ரோஸ் ஆகும். அவருக்கு மட்டுமல்ல... சிரிக்கும்போது அழும்போதும் சிலரது கன்னம் இப்படி நிறமாற்றத்துக்குள்ளாகும். அந்த நிறமாற்றம் சிலரது அழகுக்கு அழகூட்டலாம்; சிலரது அழகைக் குறைக்கலாம். ஆனால், அது ஒரு சருமப் பிரச்னை என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. 'அப்படி நிறம் மாறக் காரணம், `ரோஸாசியா' (Rosacea) என்ற ஒரு வகை சருமப் பாதிப்புதான்' என்கிறது மருத்துவ உலகம்.

ரோஸாசியா பாதிப்பு


`ரோஸாசியா' என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், அதற்கான சிகிச்சைகள் என்னென்ன? 
சருமநோய் நிபுணர் தினேஷ் பொன்ராஜிடம் கேட்டோம். 

"நமது சருமத்தின் இரண்டாவது அடுக்கில் ரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன. அவை சிலருக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விரிவடையும். அப்படி விரிவடையும் ரத்தக்குழாயின் வழியாக ரத்தம் அதிகமாகச் செல்லும். அதிகமாக ரத்தம் செல்லும்போது வெளித்தோற்றத்தில், அதாவது சருமப் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பாகத் தெரியும். இதுதான் `ரோஸாசியா' என்று கூறப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்னை அல்ல, உள்ளே இருக்கும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்னை. 

`ரோஸாசியா' நோய் வருவதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை. நோய்த்தொற்று அல்லது டாக்டர் தினேஷ் பொன்ராஜ்மரபணு ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், காரணத்தைக் கண்டறிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. கன்னம், மூக்கின் நுனிப்பகுதி, முகவாய் ஆகிய இடங்களில் `ரோஸாசியா' ஏற்படலாம்.

`ரோஸாசியா'வில் நான்கு நிலைகள் உள்ளன.

1.சருமம் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவது.

2. இளஞ்சிவப்பு நிறத்துடன் உள்ளே சீழ் நிறைந்த பருக்கள் உருவாவது.

3. சருமத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் தடிமனாக மாறுவது.

4.  சருமம் மட்டுமன்றி கண்களில் உள்ள ரத்தக்குழாய்களும் விரிவடைந்து கண்களிலும் சிவப்பு நிறம் தெரிவது.

ஆண், பெண் இருவருக்குமே `ரோஸாசியா' பிரச்னை ஏற்படலாம். இது அழகு, தோற்றம் சார்ந்த விஷயம் என்பதால் இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் சிகிச்சைக்காக மருத்துவர்களை நாடுகின்றனர். அடர் நிறமாக இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஆனால், அவர்களது நிறத்தின் காரணமாக அது வெளியே தெரியாது. மாநிறம் மற்றும் வெளிர் நிறத்தில் இருப்பவர்களுக்கு வெளியே தெரியும்.  

பிரச்னைகளை அதிகம் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதே இதற்கு முதன்மையான சிகிச்சையாகும். சில விஷயங்களைச் செய்யாமல் தடுத்தாலே பிரச்னை தீவிரமாகாமல் தடுத்துவிடலாம். சூடாகக் காபி, டீ அருந்துவது, மதுப்பழக்கம் போன்றவை ரோஸாசியாவைத் தீவிரப்படுத்தும். எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும். சூரிய ஒளியின் வெப்பம் ரோஸாசியாவைத் தீவிரப்படுத்தும் என்பதால் சூரிய ஒளியில் அதிகம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். மனஅழுத்தம், ஒவ்வாமையை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருள்கள் போன்றவை பிரச்னையைத் தீவிரப்படுத்தலாம்.  அதனால், ரோஸாசியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று முகத்துக்கு பிளீச், ஃபேஷியல் செய்யக் கூடாது. 

காய்கறிகள் பழங்கள்


மென்மையான கிளென்சரைக் (Cleanser) கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். கையை அழுத்தியபடி முகத்தைத் தேய்த்துக் கழுவக் கூடாது. இணையதளத்தில் தேடி சுயமாக மருத்துவம் செய்யக் கூடாது. அவை எல்லோருடைய சருமத்துக்கும் பொருந்தாது. ஒவ்வொருவரின் சருமமும் வெவ்வேறாக இருக்கும். 

முகத்தில் வந்துள்ளது சாதாரண பருவா அல்லது ரோஸாசியாவால் ஏற்பட்டுள்ள பருக்களா என்பதைக் கண்டறிய வேண்டும். இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு பிரச்னைகளுக்குமான சிகிச்சைகள் வேறுபடும். ரோஸாசியாவால் ஏற்பட்ட பருவாக இருக்கும்பட்சத்தில் சாதாரண பருவுக்கான சிகிச்சை அளித்தால், ரோஸாசியாவின் பாதிப்பு தீவிரமாகும். `ரோஸாசியா' தீவிரமானால் பருக்கள் கட்டியாக மாறி அதிக வலியை ஏற்படுத்தும். 

சூரிய ஒளி


சிகிச்சை என்ன?
ரோஸாசியாவைக் குணப்படுத்த முதற்கட்டமாக, ஆன்டி இன்பிளமேட்டரி களிம்புகள், கிளென்சர்கள் போன்றவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். 'இன்டென்ஸ் பல்ஸ் டை லேசர்' (Intense Pulse dye laser) என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டுவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதாவது, முகத்தில் காணப்படும் சிவப்பு நிறத்தைக் குறைப்பது அல்லது விரிவடைந்த ரத்தக்குழாய்களின் அகலத்தைக் குறைப்பது ஆகிய சிகிச்சைகள் செய்யப்படும். இதற்கு ஒரே அமர்வில் தீர்வு கண்டுவிட முடியாது. பல அமர்வுகள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். சருமம் தடிமனாக மாறி, அந்தப் பகுதி சற்று விகாரமாகத் தோன்றினால், சருமத்தைச் சீரமைக்கும் சிகிச்சை (Skin resurfacing) அளிக்கப்படும். இந்தப் பிரச்னை முதலில் வளரிளம்பருவத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிரச்னை வருவதும், போவதுமாக இருக்கும். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை புதிதாக ஏற்படாது.

தண்ணீர்


நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். அதிகமாக நீர் அருந்துவதும் இந்தப் பிரச்னையில் இருந்து நம்மைக் காக்கும். 

`ரோஸாசியா' என்பது சருமத்தை சேதப்படுத்தும் பிரச்னையோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோயோ அல்ல. முழுக்க முழுக்க அழகு சார்ந்த பிரச்னைதான். ரோஸாசியாவால் கன்னம் ரோஸ் நிறமாக இருப்பது ஒரு சிலருக்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனால் இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா என்பதை அந்த நபர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். ஒருவேளை அதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் கட்டாயம் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்