ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைக்க எய்ம்ஸ் யோசனை!  | Measure BP at least thrice, say researchers

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (15/04/2019)

ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைக்க எய்ம்ஸ் யோசனை! 

த்த அழுத்த பரிசோதனையின்போது, ஒருமுறை மட்டுமே பரிசோதித்துவிட்டு `ரத்த அழுத்தம் வந்து விட்டது' என்று முடிவு செய்யக்கூடாது... மூன்று முறை ஆய்வு செய்து அதன் சராசரி அளவை வைத்து முடிவு செய்வதே சரியானது என்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences) மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. `இதனால் ரத்த அழுத்தத்தில் பாதிப்பு இல்லாமலேயே மாத்திரை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்' என்று அறிவுறுத்தியுள்ளது அந்த மருத்துவமனை.

ரத்த அழுத்தம்

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையும் (PHFI - Public Health Foundation of India) இணைந்து, ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டன. 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு முறை மட்டும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டவர்களில் 16.5 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தாக முடிவுகள் வந்துள்ளன. அதே நபர்களிடம் இரண்டாம், மூன்றாம் முறை எடுத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது 10.1 சதவிகிதம் பேருக்கு மட்டுமே உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ஜெனரல் ஆப் ஹூமன் ஹைப்பர்டென்சன் (Journal of Human Hypertension) என்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

ரத்த அழுத்த பரிசோதனை

``பெரும்பாலான மருத்துவர்கள், ரத்த அழுத்த பரிசோதனைக்காக வருபவர்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சையளிக்கிறார்கள். அது தவறு. மூன்று முறை ஆய்வுசெய்து அதன் சராசரியைக் கொண்டே நோயின் தன்மை குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் துணைத் தலைவரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் துரைராஜ் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

``இதன்மூலம் அவசியமில்லாமல் ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் காக்கலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க