கருத்தரிப்பு மையத்தில் முறைகேடு: 49 குழந்தைகளுக்குத் தந்தையான நெதர்லாந்து டாக்டர்! | fertility doctor secretly fathered 49 children

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (15/04/2019)

கருத்தரிப்பு மையத்தில் முறைகேடு: 49 குழந்தைகளுக்குத் தந்தையான நெதர்லாந்து டாக்டர்!

நெதர்லாந்து நிஜிமெகன் நகரைச் சேர்ந்தவர்  ஜான் கர்பத். இவர் ஒரு கருத்தரிப்பு மையம் நடத்திவந்தார். குழந்தை இல்லாத தம்பதியர் பலர் இவரது மையத்துக்கு சிகிச்சைக்காக வந்தனர். உயிரணு தானம்மூலம் பல பெண்களுக்கு சிகிச்சை அளித்தார்.

 டாக்டர்

இதனால், பலருக்கு தாய்மைப்பேறு கிட்டியது. இந்த நிலையில், ஜான் கர்பத்தின் மருத்துவமனையில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன.  அவரிடம் சிகிச்சைபெற்று குழந்தை பெற்ற பல பெண்கள்,  தங்களின் குழந்தை டாக்டர் ஜான் கர்பத்தின் சாயலில் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில்,  டாக்டர் ஜான் கர்பத்  தானமாகப்  பெறப்பட்ட மற்றவர்களின் உயிரணுக்களைப்  பயன்படுத்தாமல்,  தனது உயிரணு மூலம் பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது தெரியவந்தது. இந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து, 2009-ம் ஆண்டு அந்த கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது. இதற்கிடையே, டாக்டர் கர்பத்  2017-ம் ஆண்டில் இறந்தார். அப்போது அவரின் வயது 89. 

டொச்டெர்


இந்நிலையில், டாக்டர் கர்பத்தின் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். டாக்டரின் மரபணுவை எடுத்து சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, டாக்டரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் மரபணுச் சோதனை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, 49 குழந்தைகளின் மரபணுக்களை, டாக்டரின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்கள் அனைவரும் டாக்டர் கர்பத்தின் வாரிசுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பெற வந்த பெண்களுக்குத் தெரியாமலேயே தனது உயிரணுவைச் செலுத்தி டாக்டர் முறைகேடு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.