கேள்விக்குறியாகும் அப்பாவி இந்தியர்களின் ஆரோக்கியம்... 6 லட்சம் டாக்டர், 20 லட்சம் நர்ஸ் பற்றாக்குறை! | 6 lakhs doctors and 20 lakhs nurses shortage in India

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (16/04/2019)

கடைசி தொடர்பு:11:54 (16/04/2019)

கேள்விக்குறியாகும் அப்பாவி இந்தியர்களின் ஆரோக்கியம்... 6 லட்சம் டாக்டர், 20 லட்சம் நர்ஸ் பற்றாக்குறை!

நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது.

கேள்விக்குறியாகும் அப்பாவி இந்தியர்களின் ஆரோக்கியம்... 6 லட்சம் டாக்டர், 20 லட்சம் நர்ஸ் பற்றாக்குறை!

லக சுகாதார நிறுவனம், மருத்துவம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை உருவாக்கியிருக்கிறது. அவற்றின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும்; 500 பேருக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும். அந்தக் கணக்கின்படி பார்த்தால், இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் பற்றாக்குறையாக இருப்பது தெரியவந்துள்ளது. 

மருத்துவர்கள்


உலக அளவில், ஆன்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்தக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மற்றொரு புறம், ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத் திறனால் நோய்த்தொற்று ஏற்பட்டு 7 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமான அளவு இருந்தும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நிறையபேர் உயிரிழக்கிறார்கள். தகுதியான மருத்துவப் பணியாளர்கள் இல்லாததே இந்த இறப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த `டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி' (Disease Dynamics, Economics & Policy) என்ற மையம் இந்தியாவில் ஆய்வொன்றை நடத்தியது. அதில், இங்கு 6 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
``இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்ன,  இந்தப் பிரச்னைகளை எப்படி சரிசெய்வது?" ரவீந்திரநாத்
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.
``மக்கள் தொகையில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர், ஒரு மருத்துவருக்கு மூன்று செவிலியர்கள் என்ற விகிதத்தில் மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், இங்கு 10189 பேருக்கு 1 டாக்டர்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவு என்றால் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் வீதம் ஒரு நாளைக்கு 3 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். பொது வார்டுகளில் ஆறு நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மூன்று நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் இந்த விகிதத்தைப் பின்பற்ற முடியாததால் பற்றாக்குறை காணப்படுகிறது.

நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான செவிலியர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள். மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதித்து, மருந்துகளைப் பரிந்துரைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், அவர்களைப் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்வது செவிலியர்கள்தான். செவிலியர்கள் பற்றாக்குறையால் நோய்த்தொற்றுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுப்பதிலும் சுணக்கம் ஏற்படுகிறது. சரியான அளவில் மருந்துகளைக் கொடுக்காததால் ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத்திறன் உருவாகி, உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

ஆன்டிபயாடிக் மருந்துகள்


இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகளில் இந்திய மருத்துவர்களுக்கான தேவை குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்திய மருத்துவர்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. 
மருத்துவர்களைப் பொறுத்தவரை 70 சதவிகிதம் பேர் நகர்ப்புறத்தில்தான் பணியாற்றுகின்றனர், பணியாற்றவும் விரும்புகின்றனர். 30 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கிராமப்புறங்களில் பணியாற்றுகின்றனர். ஆனால், நமது நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றனர். 30 சதவிகிதம் பேர் மட்டுமே நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இந்த இடைவெளி நிச்சயம் குறைக்கப்படவேண்டும். 

செவிலியர்கள்


வருமானத்துடன் போதிய அடிப்படை வசதிகளும், போதுமான சலுகைகளும் அளிக்கப்பட்டால்தான் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் விரும்புவார்கள். கட்டாயத்தின்பேரில் அவர்களைப் பணியாற்ற வற்புறுத்தக்கூடாது. வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் விருப்பத்தின்பேரில் அவர்களைக் கிராமப்புறங்களுக்குச் செல்ல வைக்க வேண்டும்.
செவிலியர்களுக்கு அனைத்து நாடுகளிலும் தேவைகள் அதிகமாக உள்ளன. இதனால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான செவிலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். நமது நாட்டில் போதிய சம்பளமும், சலுகைகளும் வழங்கப்படாததால் வெளிநாட்டின்மீதான மோகம் அதிகமாக உள்ளது. செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அதை மாநில அரசுகளே வழங்க முன்வராதபோது, தனியார் மருத்துவமனைகள் எப்படி வழங்கும்? 

பற்றாக்குறை


மருத்துவத் துறையில் காணப்படும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரியை அரசே தொடங்க வேண்டும். உயிர் காக்கும் உன்னதப் பணியை சொந்த நாட்டிலேயே மேற்கொள்ளத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என்றார் அவர்.
மக்களின் ஆரோக்கியமே ஒரு நாட்டின் வளத்தைத் தீர்மானிக்கும். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றால் மருத்துவத் துறையில் காணப்படும் குறைபாடுகள் களையப்பட வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்