ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்... பெற்றோர், மாணவர் செய்ய வேண்டியது என்ன? - மனநல ஆலோசகர் தரும் டிப்ஸ்! | Plus two results ... what do parents and students should do? Tips from a Mental Health adviser!

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (18/04/2019)

கடைசி தொடர்பு:12:45 (19/04/2019)

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்... பெற்றோர், மாணவர் செய்ய வேண்டியது என்ன? - மனநல ஆலோசகர் தரும் டிப்ஸ்!

ஒருவேளை தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். இழக்கப்போவது ஒன்றுமில்லை. மாணவர்களைத் தோல்வியிருந்து வெளியே கொண்டுவந்து, நேர்மறையான எண்ணங்களை நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்... பெற்றோர், மாணவர் செய்ய வேண்டியது என்ன? - மனநல ஆலோசகர் தரும் டிப்ஸ்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ப்ளஸ் டூ தேர்வு முடிவு என்பது மாணவர்களின் வாழ்வில் முக்கியத்துவமானது. எனவே, இயல்பாகவே இந்த நேரத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பதற்றத்தில் இருப்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றால், விரும்பிய கல்லூரியில் விரும்பிய துறையில் படிக்கலாம். மகிழ்ச்சிதான். 

ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால்? அதையும் இயல்பாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அதிக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தேர்வு முடிவுகளை எளிதாகவும் சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தேவை. 

மாணவர்கள்

தேர்வு முடிவுகளால் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடப் பெற்றோர், மாணவருக்கான ஆலோசனைகளை வழங்குகிறார் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி. 

“பொதுவாகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளின்மீது வைக்கும் அதீத எதிர்பார்ப்புகளே மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக் காரணம். எல்லாக் குழந்தைகளும் முன்னணி மாணவர்கள் (Toppers) அல்ல என்னும் யதார்த்தத்தைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளின் முந்தைய மதிப்பெண்கள் சராசரியாக எவ்வளவு, அவர்களது தனிப்பட்ட ஆர்வம், பலம், பலவீனம் பற்றியெல்லாம் பெற்றோருக்குத் தெளிவு இருக்க வேண்டும். 

மாணவர்

உறவினர் பிள்ளைகளுடனோ, நண்பர்களின் குழந்தைகளுடனோ, அவர்களது வகுப்பு நண்பர்களுடனோ ஒப்பீடு செய்யக் கூடாது. `என் பிள்ளை இவ்வளவு மார்க் எடுத்திருக்கான்னு எப்பிடி வெளியே சொல்றது’ என்பதுபோன்ற வசனங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். தங்களது கௌரவம், பெருமை எல்லாம் பிள்ளையின் மதிப்பெண்ணில் இல்லை என்ற தெளிவு பெற்றோருக்கு இருக்க வேண்டியது அவசியம். 

`நல்லாதான் படிச்சான். நல்ல மார்க் வரும்னு சொன்னான். இவ்ளோ கம்மியா வரும்னு நினைக்கல’ என்று வருந்துவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. திரும்பத் திரும்ப புலம்புவதால் நடந்ததை மாற்றவும் முடியாது. இப்படிப் பேசுவதால் உங்களது பிள்ளையின் மனதில் `பெற்றோருக்கு நம்மால்தான் அவமானம்’ என்ற எண்ணத்தை உருவாக்கும். அது ஆபத்தான முடிவுகளை நோக்கி அவர்களை நகர்த்தக்கூடும். எனவே, அப்படிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

மாணவி

ஒருவேளை தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். இழக்கப்போவது ஒன்றுமில்லை. மாணவர்களைத் தோல்வியிருந்து வெளியே கொண்டுவந்து, நேர்மறையான எண்ணங்களை நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. பெற்றோரும் மாணவரும் `அடுத்து என்ன செய்வது?’ எனத் தீர்வுகளை நோக்கிச் சிந்திப்பதும் செயல்படுவதும் நல்ல பலன்களைத் தரும். 

ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களின் நிறை மற்றும் குறைகள் சரியாகத் தெரிந்திருக்கும். எனவே பெற்றோர், ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். நினைத்த கல்லூரியில் நினைத்த படிப்பை படிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம், மாணவரின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வேறு எந்தெந்த துறைகளில் படிக்க வைக்கலாம் எனத் திட்டமிடலாம்.  

தேர்வு முடிவுகள் குறித்த பயம்

மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிஇன்று பல்வேறு துறைகளில் பலவிதமான படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஆகவே எந்தப் படிப்பைப் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது பற்றி தொழில்முறை ஆலோசகரிடம் (Career counsellor) பேசி முடிவெடுக்கலாம். 

சென்ற தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் வாழ்க்கை பற்றிய பார்வை வேறுமாதிரி இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். `நன்றாகப் படித்து, விருப்பமான வேலைக்குப் போக வேண்டும்... கைநிறைய சம்பாதிக்க வேண்டும்’ என்று சென்ற தலைமுறையினர் சிந்தித்தார்கள். ஆனால், இன்றைய தலைமுறையோ `வாழ்க்கையை நிறைவாக மனதுக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்துவிட வேண்டும்’ என்றே ஆசைப்படுகின்றனர். `வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதுதான் வெற்றி...' என்ற தெளிவு கொண்டிருக்கின்றனர் புதிய தலைமுறையினர். 

கல்லூரிப் படிப்பு என்பது பெற்றவர்களின் திணிப்பாக இல்லாமல் மாணவர்களது விருப்பமாக இருக்க வேண்டும். மதிப்பெண்களோடு இந்த வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்ற நேர்மறை எண்ணத்தைப் பெற்றோர்தான் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்ல முடியும். அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்க முடியும்.

தேர்வு எழுதும் மாணவிகள்

மாணவர்களுக்கான ஆலோசனைகள்!

* மாணவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறையான எண்ணங்கள் எளிதாகப் புகுந்துவிடும். நினைத்த மதிப்பெண்கள் வராதபோது அதிக வருத்தமும் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வருவது இயல்பானதுதான். அந்த வருத்தத்தில் உறைந்துபோகாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்று அடுத்தகட்டம் நோக்கி நகர்வதே புத்திசாலித்தனம்.

* `எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, எனக்கு அதிர்ஷ்டமில்லை’ என்பதுபோன்ற சுய பச்சாதாபம் வேண்டாம். மாறாக, `நான் படித்ததற்கு ஏற்ற மதிப்பெண் கிடைத்திருக்கிறது’ என்று நேர்மறையாகச் சிந்தியுங்கள். 

* மாணவர்கள் தங்களது வருத்தங்கள், எண்ணங்களைப் பெற்றோர் அல்லது உற்ற நண்பர்கள் அல்லது புரிதலுள்ள உடன்பிறந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அது உங்களுடைய வருத்தத்திலிருந்து வெளிவர உதவியாக இருக்கும்.

மாணவி

* அதேபோல, மாணவர்கள் மாற்றத்துக்குத் தயாராகும் பரந்த மனதுடன் இருப்பதும் அவசியம்.

* ஒருவேளை குறைந்த மதிப்பெண்களாலோ, தேர்வில் தோல்வியடைந்திருந்தாலோ அதைக் கண்டு கலக்கமடையாதீர்கள். இதனால் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அப்போது மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள். வெற்றி என்பது மதிப்பெண்ணில் அல்ல... அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது” என்கிறார்  ஜான்ஸி ராணி. 

மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டால் உடனே தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண் 'சிநேகா தற்கொலை தடுப்பு மையம்' : 044 - 24640500, 044- 24640600


டிரெண்டிங் @ விகடன்