`கோடையில் குளிர்பானங்கள் அருந்துவதில் கவனம்!' - உணவு பாதுகாப்பு அலுவலர் அடுக்கும் காரணங்கள் | Be careful while taking cool drinks in summer, says FSO

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (18/04/2019)

கடைசி தொடர்பு:18:10 (18/04/2019)

`கோடையில் குளிர்பானங்கள் அருந்துவதில் கவனம்!' - உணவு பாதுகாப்பு அலுவலர் அடுக்கும் காரணங்கள்

மிழகத்தில், தேர்தல் பிரசார அனல் ஓய்ந்துள்ள நிலையில், கோடை அனல் வாட்டிவதைக்கிறது. அதில் இருந்து தப்பிக்க, மக்கள் பெரும்பாலும் நாடிச் செல்வது குளிர்பானக்  கடைகளைத்தான். காரணம், கோடையில் உடலுக்கு அதிகம் தேவைப்படுவது நீர்ச்சத்தும், உப்புச்சத்தும்தான்.  தாகம் தீர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில், தூய்மையின்றி விற்கப்படும் பழச்சாறுகளையும் பாட்டிலில் அடைப்பட்டுள்ள தண்ணீரையும் வாங்கிப் பருகுகிறோம். இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குளிர்பானங்கள்

இதற்கான வழிமுறைகளை நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகனிடம் கேட்டோம்.  அவர் கூறிய ஆலோசனைகள்...

* நீர் மூலம் பரவும் கிருமிகள், ரசாயனக்  கலவைகள், உணவில் கலக்கப்படும் நிறமூட்டிகளால் ஏற்படும் நோய்களில் இருந்து 
நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உரிமம், பதிவுச் சான்று பெற்ற கடைகளில் மட்டுமே உணவுப்  பொருள்களை வாங்க வேண்டும். விற்கும் இடம் தூய்மையாகவும், பழச்சாறு தயாரிப்பவர்கள் தங்களது கைகளைத்  தூய்மையாகவும் வைத்திருக்கிறார்களா என கவனிக்க வேண்டும்.

 

fruits

*குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிக்கப் பயன்படும் பழங்கள், பால், தண்ணீர் போன்ற மூலப்பொருள்கள் தரமானதாகவும், 
கூழ், மோர், பால் போன்றவை துருப்பிடிக்காத பாத்திரத்திலும் வைக்கப்பட வேண்டும்.  பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் நன்னீரில் தயாரிக்கப்பட்டதாக  இருக்க வேண்டும்.

 

குளிர்பானங்கள்

* ஈக்கள், பூச்சிகள் மொய்க்காமல், தூசி படாதவாறு மூடிவைக்கப்பட்டுள்ள  பழங்கள், பழச்சாறு, பழத் துண்டுகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டும். பழங்களை  சூரியஒளி படுமாறு வைத்தால் தரமும், சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும்.  எனவே, பழங்களை குளிர்பதனப் பெட்டி அல்லது குளிர்ந்த நீரில் வைத்திருக்க வேண்டும்.  

*குடிநீர், பழச்சாறு, குளிர்பானங்கள் அமைக்கப்பட்டுள்ள பாட்டில்களில் உணவு பாதுகாப்பு உரிம எண், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி,  தயாரிப்பாளரின் முகவரி போன்றவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். பழச்சாறு, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் தரமானதாக இருக்க வேண்டும்.

* பழச்சாறு, குளிர்பானங்களில் உபயோகிக்கும் சர்க்கரை, சர்க்கரைப் பாகு போன்றவற்றைக் கை படாமல் கரண்டியால் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். பழச்சாறு பிழியப்  பயன்படுத்தும் மிக்ஸி, வடிகட்டி போன்றவை துருப்பிடிக்காமல் தூய்மையாக இருக்க வேண்டும்.

குளிர்பானங்கள்* பழரசம், குளிர்பானத்தைப் பாத்திரத்தில் இருந்து கை படாமல் எடுக்க, நீளமான கரண்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.  கரும்புச்சாறு எடுக்கப் பயன்படும் கரும்பின் தோல் சீவப்பட்டு, நுனிகள் வெட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.

*பழரசங்கள் கண்ணாடி டம்ளர் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் ஆன டம்ளர்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.  அழுகிய பழங்களைப் பயன்படுத்தக் கூடாது.  சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நீலம் மற்றும் ஊதா நிறங்களைச் சேர்க்கக் கூடாது. .

மேலும், உணவு விற்பனை தொடர்பான புகார்களை 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறை ஆணையரக எண்ணிற்குத் தெரிவிக்கலாம்'' என்றார்.