``நல்லா எழுதினோம்... மார்க் வரல!'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்! | plus two students calling 104 help line for getting lowest mark

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (19/04/2019)

கடைசி தொடர்பு:20:15 (19/04/2019)

``நல்லா எழுதினோம்... மார்க் வரல!'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்!

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 91.3 சதவிகித மாணவ-மாணவியர் தேர்வில் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்று மாணவர்கள் பதற்றத்தோடு இருப்பார்கள். அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்கி நல்வழிப்படுத்த அரசு சார்பில், 104 என்ற உதவி அழைப்பு எண் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

மாணவர்களுக்கான ஆலோசனை மையம் 104

மாணவர்கள் தங்களுடைய உடல் மற்றும் மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு 104 எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். தேர்வுக்கு முன்னும், தேர்வு எழுதும்போதும், தேர்வு முடிவுகளின்போதும் என மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் கல்வித் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கே மாணவர்களுக்கு மனநல மற்றும் கல்வி ஆலோசனைகள் வழங்கும் விதமாக 14417 உதவி அழைப்பு எண் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இந்த மையத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஜோசப்பிடம் பேசினோம்.“கல்வி வழிகாட்டி மைய சேவை, 2018 மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்டது. 14417 உதவி அழைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு, தெளிவு பெறலாம். அந்த வகையில் தொடங்கியதிலிருந்து 1,62,000 அழைப்புகள் இதுவரை வந்துள்ளன.  

மாணவர்கள்

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பொதுவாக விரக்தி மனநிலையில் இருக்கும் மாணவர்களின் அழைப்புகளே எங்களுக்கு அதிகமாக வரும். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற அழைப்புகள் ஐந்து மட்டுமே வந்திருக்கின்றன. அவர்களுக்கு உரியமுறையில் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறோம். 

தற்போது 91.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதற்காகக் கவலைப்படுகின்றனர். தாங்கள் சரியாக எழுதியும் மதிப்பெண்கள் வரவில்லை என்று சில மாணவர்கள் குறைபட்டுக்கொண்டனர். அவர்களை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். 

பிளஸ் டூ ரிசல்ட் - மாணவர்கள்

'அடுத்து என்ன படிக்கலாம்?’ என்கிற கேள்வியுடைய அழைப்புகளே அதிகமாக மாணவர்களிடம் இருந்து வந்திருக்கின்றன. வழக்கமாக பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்துத்தான் அதிகம் விசாரிப்பார்கள். ஆனால், தற்போதைய மாணவர்களின் மனநிலை மாறியிருப்பதைக் கவனித்தோம். இந்த இரு படிப்புகள் தவிர்த்து மேலும் பல படிப்புகள் குறித்து மாணவர்கள் அலசி பார்ப்பதை காணமுடிந்தது. மேற்கொண்டு அவர்கள் என்ன படிக்கலாம் என்பது பற்றி உரிய ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் பிரான்சிஸ் ஜோசப்.