சர்க்கரை நோயாளிகள் விரதத்தின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! #Video | Can you fast if you have diabetes?

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (21/04/2019)

கடைசி தொடர்பு:15:31 (23/04/2019)

சர்க்கரை நோயாளிகள் விரதத்தின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! #Video

சர்க்கரை நோயாளிகள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டும்; ஒருவேளைகூட மாத்திரை சாப்பிட மறக்கக்கூடாது எனப் பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் விரதம் இருந்தால் அவர்களின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா? 

சர்க்கரை நோயாளிகள் விரதத்தின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! #Video

விரதம் என்பது, ஒவ்வொரு மதத்துக்கேற்ப மாறுபட்டாலும், அனைத்து மதங்களாலும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை. பாரம்பர்ய மருத்துவம் தொடங்கி நவீன மருத்துவம் வரை விரதமிருப்பது உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளைப் போக்கும் ஒரு சிகிச்சை முறை என்றே சொல்கின்றன. நல்ல உடல்நிலையில் இருப்பவர்களுக்கு இது சாத்தியமாகலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் விரதமிருக்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டும்; ஒருவேளைகூட மாத்திரை சாப்பிட மறக்கக்கூடாது எனப் பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் விரதம் இருந்தால் அவர்களின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா? 

விரதம்

``சர்க்கரை நோயாளிகள் விரதமிருக்கலாம் என்றோ அல்லது கூடாது என்றோ பொதுவாக கூறிவிட முடியாது. நோயாளிகளின் தன்மைகளைக் கொண்டே தீர்மானிக்க முடியும்..." என்கிறார் சர்க்கரை நோய் நிபுணர் நந்திதா அருண்.சர்க்கரை நோய் நிபுணர் நந்திதா அருண்

``சர்க்கரை நோயாளிகள் நீண்ட நாள்கள் தொடர்ச்சியாக விரதமிருப்பது நல்லதல்ல. `டைப் 1' சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோயால் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு செயலிழந்தவர்கள், டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள், சர்க்கரை நோய் பாதித்த கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், சர்க்கரை நோயால் கண் விழித்திரை, ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்பாடற்ற தன்மையில் உள்ள சர்க்கரை நோயாளிகள்... இவர்கள் அனைவரும் விரதம் இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.

பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

உணவுக் கட்டுப்பாடு அல்லது மாத்திரைகள் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் விரதம் மேற்கொள்ளவேண்டும். ஆனால், அவர்கள் சில நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றவேண்டும். 

* விரதத்துக்கு முன்பும், பிறகும் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குளுக்கோமீட்டர்

* குளூக்கோ மீட்டர் உதவியுடன் சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதிக்கவேண்டும். விரதம் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மில்லி கிராமுக்கும் குறைந்தாலோ, 300-க்கும் அதிகமாகச் சென்றாலோ உடனடியாக விரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் விரதமிருக்கும்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டால் மிகவும் ஆபத்து. படபடப்பு, அதிக வியர்வை, இதயம் விரைவாகத் துடிப்பதுபோன்ற உணர்வு, உடல் நடுக்கம் போன்ற தாழ்நிலை சர்க்கரையின் அறிகுறிகள் தென்பட்டால் விரதத்தை உடனடியாக முடித்துவிட்டு மருத்துவரை அணுக வேண்டும். 

* விரதத்தின்போது அதிகம் சோர்வடைந்தால், டீ, காபி குடிப்பதற்குப் பதிலாக அதிகமாகத் தண்ணீர் குடிப்பது அல்லது இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றையும் அருந்தலாம். 

* சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால், உடலில் விரைவில் டிஹைட்ரேஷன் ஏற்படலாம். எனவே போதுமான அளவு நீர் அருந்தவேண்டும். 

உணவு நேரம்

* விரதத்தை முடித்ததும் பழங்கள், எண்ணெய் இல்லாத காய்கறி சாலட், அவரை வகைகள், முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் மிகுதியாக உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். 

* செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்து, சர்க்கரை இல்லாத பானம், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் அதிகம் அருந்தவேண்டும்.  

* மாத்திரைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி விரதம் இருக்கலாம். இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகள் விரதத்துக்கு ஏற்றார்போல இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். 

* மிகவும் கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்த்து மிதமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

* ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவரின் ஆலோசனையுடன் திட்டமிட்ட உணவு முறை, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள கொழுப்பற்ற உணவை உட்கொள்வது, பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்வது அவசியம். முக்கியமாக, மருத்துவரின் அறிவுரையை மீறி விரதம் இருக்கக் கூடாது." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்