தமிழகத்தில் திட்டமிட்டு சித்த மருத்துவம் அழிக்கப்படுகிறதா?- கொதிக்கும் மருத்துவர்கள்! | "A conspiracy against Siddha medicine in Tamilnadu" says the Doctors

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (24/04/2019)

கடைசி தொடர்பு:10:43 (24/04/2019)

தமிழகத்தில் திட்டமிட்டு சித்த மருத்துவம் அழிக்கப்படுகிறதா?- கொதிக்கும் மருத்துவர்கள்!

``சிக்குன் குன்யா, டெங்கு போன்ற பாதிப்புகளின்போது சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவத்தின்மீது கவனம் செலுத்தும் அரசாங்கம், அதன்பிறகு சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை. அரசு அறிவிக்கும் திட்டங்கள்கூட முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை"

தமிழகத்தில் திட்டமிட்டு சித்த மருத்துவம் அழிக்கப்படுகிறதா?- கொதிக்கும் மருத்துவர்கள்!

``மிழர்களின் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பது ஏன்?", ``ஆயுர்வேத மருத்துவத்துக்கு அளிக்கும் முக்கியத்துவம் சித்த மருத்துவத்துக்கு ஏன் இல்லை..." - சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வேதனையுடன் முன்வைத்த கேள்விகள் இவை. சித்த மருத்துவத்தின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, இந்தக் கேள்விகளை முன்வைத்தனர் நீதிபதிகள். 

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

``இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்றும், சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் போதுமான நிதியை மத்திய - மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். அத்துடன், இந்த வழக்கில் மத்திய அரசாங்கத்தின்கீழ் வரும் ஆயுஷ் துறையின் செயலாளரை, பிரதிவாதியாகச் சேர்த்து சித்த மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்கள். 

`நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் நாங்கள் பல ஆண்டுகளாக முன்வைக்கும் கோரிக்கைகள்தான்' என்கிறார்கள் சித்தமருத்துவர்கள். சித்த மருத்துவத்தின் தாய் வீடான தமிழகத்திலேயே சித்த மருத்துவர்களை பராமுகமாகப் பார்க்கும் இந்த நிலை மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர்கள் குமுறுகிறார்கள்.

``சிக்குன் குன்யா, டெங்கு போன்ற பாதிப்புகளின்போது சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவத்தின்மீது கவனம் செலுத்தும் அரசாங்கம், அதன்பிறகு சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை. அரசு அறிவிக்கும் திட்டங்கள்கூட முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை" என்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கச் செயலாளரும், சித்த மருத்துவருமான வேலாயுதம், இந்த நிலைகுறித்து வேதனையுடன் பேசினார். 

சித்த மருத்துவமனை

``தேசிய ஊரக சுகாதார இயக்க (National Rural Health Mission) திட்டத்தில் ஆங்கில மருத்துவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் சித்த மருத்துவர் வேலாயுதம்தருகிறார்கள். ஆயுஷ் மருத்துவர்கள் (ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி) குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ. மற்றும் ரயில்வே மருத்துவமனைகளில் சித்த மருத்துவத்துக்கு மிகக் குறைந்த இடங்களே இருக்கின்றன. ஆனால், அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படவில்லை. சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை. 

ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சித்த மருத்துவம் படித்து முடிக்கிறார்கள். அதன்படி, தற்போதுவரை சுமார் 6 ஆயிரம் மருத்துவர்கள் படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறார்கள். சித்த மருத்துவம் படித்த பட்டதாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துள்ளனர். 

சித்த மருத்துவர்களைக் கட்டுப்படுத்தும் `தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில்' பெயரளவில்தான் செயல்படுகிறது. இதற்கென நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்கவேண்டும். அதற்கு மத்திய அரசைப் போல தமிழக அரசும் தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும்" என்கிறார் வேலாயுதம். 

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

தமிழகத்தில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, சென்னையை அடுத்த தாம்பரத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. அடுத்தாக, பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி. இவை மட்டுமே தனியாக சித்த மருத்துவத்துக்கென உள்ள அரசுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களாகும். இந்த மருத்துவமனைகள் கூட முறையான பராமரிப்பின்றி இருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. சித்த மருத்துவத்திற்கெனச் செயல்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதா, தனியாக பல்கலைக்கழகம் அமைக்கவேண்டியதின் அவசியம் குறித்தும் மருத்துவச் செயற்பாட்டாளரும், சித்த மருத்துவருமான மணிசங்கரிடம் பேசினோம்.

``சித்த மருத்துவம் பல்வேறு மருத்துவ முறைகளுக்குத் தாய். சித்த மருத்துவத்துக்கெனத் தனியாக பல்கலைக்கழகம் கிடையாது. சித்த மருத்துவப் படிப்பு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. பல்கலைக்கழகங்கள் இருந்தால்தான் இந்தத் துறையால் தன்னிச்சையாகச் செயல்படமுடியும். சித்த மருத்துவ மாணவர்கள் பலர் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை விலங்குகளில் `கிளினிக்கல் டிரையல்' செய்யச் சித்த மருத்துவத்துக்கு அனுமதி இல்லை. அந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி உலகளவில் புகழ்பெற்ற மருத்துவ இதழ்களில் வெளியிடவும் வழியில்லை. பல்கலைக்கழகங்களில் அதற்கான வழிமுறைகளை உருவாக்கினால்தான் அவையெல்லாம் சாத்தியமாகும். அதற்குச் சித்த மருத்துவத்துக்குத் தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

சித்த மருத்துவம்

ஆங்கில மருத்துவத்தில், `இந்த நோய்க்கு இதுதான் மருந்து' என்று எல்லோருக்கும் பொதுவாகத் தரப்படுகிறது. சித்த மருத்துவத்தில் ஒருவரின் வாதம், பித்தம், கபம் அடிப்படையில் ஆளுக்கு ஆள் மருந்துகள் வேறுபடும். அதனால், சித்த மருத்துவச் சிகிச்சைக்கு அதிக சித்த மருத்துவர் மணிசங்கர்எண்ணிக்கையிலான மருந்துகள் வாங்கவேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் குறைவான சித்த மருந்து வகைகளே வாங்கப்படுகின்றன. 

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சித்த மருத்துவர்கள், `உதவி மருத்துவ அலுவலர்' (Assistant Medical Officer) என்ற பெயரில்தான் இறுதிவரை பணியாற்ற வேண்டியுள்ளது. `மருத்துவ அலுவலர்' என்ற பணி நிலைகூட இல்லை. ஒருசிலருக்கு மட்டுமே, `மாவட்ட மருத்துவ அலுவலர்' (District Siddha Medical Officer) என்ற பதவி உயர்வு கிடைக்கிறது. இதுவும் சித்தமருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதுபோன்று சித்த மருத்துவர்கள் அனுபவிக்கும் வேதனைப் பட்டியல் நீள்கிறது. அரசின் மெத்தனமான  போக்கால் சித்த மருத்துவம், தாய் மடியிலேயே மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது" என்கிறார் மணிசங்கர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகளிடம் கேட்டோம். 

``தமிழகத்தில்தான் சித்த மருத்துவம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மற்றபடி சித்த மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் பலவும் அடிப்படை ஆதாரமற்றவை. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது. அதோடு இ.எஸ்.ஐ (தொழிலாளர் ஈட்டுறுதி கழகம்) அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. தேசிய கிராமப்புறச் சுகாதார திட்டத்தின்கீழ் சித்த மருந்தகங்கள் உள்ளன. மருத்துவமனையின் தேவைக்கேற்ப இன்னமும் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ (தொழிலாளர் ஈட்டுறுதி கழகம்) மருத்துவமனைகள் என ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனைகளில் 1,545 சித்த மருத்துவ இடங்களில் 40 இடங்களே காலியாக இருக்கின்றன. அதிலும், பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட இடங்கள். மற்றபடி அவ்வப்போது சித்த மருத்துவ இடங்களை நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறோம். கூடுதல் இடங்களை உருவாக்குவது அரசு எடுக்க வேண்டிய முடிவு. தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திலும் சித்த மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். எண்ணிக்கையை படிப்படியாகத்தான் உயர்த்த முடியும். அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கத் தடையாக இருப்பதே அவர்கள் தொடர்ந்த வழக்குதான். நீதிமன்ற தடை ஆணை நீக்கப்பட்டால் அவர்களுக்கான பணி உயர்வுகள் கிடைக்கும். இதில் அரசின் தவறு எதுவுமில்லை. நீதிமன்றம் கேட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க இருக்கிறோம்" என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்