இருபாலினத் தன்மை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை!- நீதிமன்றம் சொல்வது என்ன? | transgender surgery verdict

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (24/04/2019)

கடைசி தொடர்பு:15:15 (24/04/2019)

இருபாலினத் தன்மை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை!- நீதிமன்றம் சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், திருநங்கையைத் திருமணம் செய்தார். இதை இந்து திருமண சட்டப்படி பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார்.

நீதிமன்றம்

அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், ``திருநங்கைகளின் உரிமையை நிலைநாட்ட திருமணத்தைப் பதிவுசெய்ய வேண்டும். அதேபோல திருநங்கைகளை அவரது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டும். மேலும், இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் விருப்பப்படி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவறானது. எனவே, அதற்குத் தடை விதித்து தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும்'' என்றார்.

இந்தத் தீர்ப்பு குறித்து முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானுவிடம் கேட்டோம். ``இது ஒரு குழப்பமான தீர்ப்பு. புரிந்துகொள்ளமுடியவில்லை. பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது,  திருநங்கைகள் வழக்கமாகச் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையல்ல. இது உறுப்பு ஓட்டிப் பிறக்கும் (intersex) குழந்தைகளுக்கானது. தற்போது பல பெற்றோர் குழந்தைகளுக்கு விவரம் தெரியாதபோதே, அவர்கள் விருப்பப்படி அறுவை சிகிச்சை மூலம் அவர்களின் உறுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றுகின்றனர். அவ்வாறு செய்வது தவறு.  நீதிமன்றம்

அவர்களுக்கு 14 வயதுக்குப் பிறகுதான் ஹார்மோன் வளர்ச்சி அடையும். அதன் பிறகுதான் (அதாவது 18 வயதுக்கு மேல்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பெற்றோர் அவர்கள் விருப்பத்துக்கு அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. அந்தக் குழந்தை வளர்ச்சி அடைந்தபிறகு, தாங்கள் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும். 

அந்த உரிமையில் யாரும் தலையிடக் கூடாது. இந்தக் கருத்தை வலியுறுத்தியே  இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது வரவேற்கக்கூடியதே.

மேலும் திருநங்கைகள் திருமணத்தைப் பதிவு செய்ய கர்நாடகாவில் சட்டம் உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் குழப்பம் நீடிக்கிறது. 2014-ல் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தெளிவான தீர்ப்பு அளித்துள்ளது. அதை இன்னும் அமல் செய்யாததுதான் பிரச்னையாக உள்ளது'' என்றார்.