கோடை வெப்பத்தை எதிர்கொள்ள `சன் ஸ்க்ரீன்' பயன்படுத்தலாமா... மருத்துவர்கள் சொல்வது என்ன? | Story about how to face skin problems during summer

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (26/04/2019)

கடைசி தொடர்பு:13:39 (26/04/2019)

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள `சன் ஸ்க்ரீன்' பயன்படுத்தலாமா... மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சருமம் வறட்சி அடையும்போது அதன்மீது கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். அதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும்.

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள `சன் ஸ்க்ரீன்' பயன்படுத்தலாமா... மருத்துவர்கள் சொல்வது என்ன?

`அக்னி நட்சத்திரம்' வருவதற்குள்ளேயே வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களில் சதமடிக்கும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிப்படுகின்றனர். பொதுவாக கோடைக்காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், சருமப் பிரச்னைகளே அதிகமாக உண்டாகும்.

கோடைக்காலத்தில் சரும பராமரிப்பு

சருமப் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்குகிறார் சரும மருத்துவர் நரசிம்மலு. 

``கோடைக்காலங்களில் அதிக வெப்பம் காரணமாக உடலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் வியர்க்குரு தோன்றும். இவை சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள போதுமான அளவு தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் இளநீர் அருந்தலாம். நீர்மோர் சாப்பிடுவதாலும் வியர்க்குரு பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். பருத்தி ஆடைகளை அணிவது மற்றும் வசிக்கும் இடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்வதால் வியர்க்குரு பிரச்னையிலிருந்து விடுபடலாம். 

கோடை

படர்தாமரை

கோடைக்காலத்தில் ஏற்படும் உபாதைகளில் படர்தாமரையும் முக்கியமானது. சருமத்தில் எங்கெல்லாம் மடிப்பு ஏற்படுகிறதோ அங்கே பூஞ்சைகள் (Fungus) உருவாவதால் வரக்கூடியதே படர்தாமரை எனும் பாதிப்பு. தலை, உள்ளங்கை, உள்ளங்காலைத் தவிர உடலின் எந்த இடத்தையும் பாதிக்கும் படர்தாமரை எரிச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அந்த இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. படர்தாமரை ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய சரும மருத்துவர் பரிந்துரைக்கும் களிம்புகளைப் (Oinment) பயன்படுத்தவேண்டும். மருந்துக் கடைகளில் விற்பதை வாங்கிப் பயன்படுத்தினால் சருமம் பாதிப்படைவதுடன், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

சருமம்

வேனல் கட்டி

வெயில் காலங்களில் அதிகப்படியான வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாத சூழல் சருமத்துக்கு ஏற்படும்போது உருவாவது வேனல் கட்டி. அதிக வெப்பத்தால் உடலிலிருந்து நீர் அதிகமாக வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் முகம் உள்ளிட்ட சில பகுதிகளில் வேனல் கட்டி உண்டாகும். வேனல் கட்டி காரணமாக காய்ச்சல் ஏற்படும். சரும மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். 

வேனல் கட்டி

சரும வறட்சி 

கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சருமம் வறட்சி அடையும்போது அதன்மீது கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். அதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதன் மூலம் சருமம் பளபளப்பாவதுடன் வெயிலிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். இதுதவிர பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அருந்துவதும் நல்லது. 

சரும பாதுகாப்பு

சருமப் பாதுகாப்பு 

சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க, உடலில் வெயில்படும் இடங்களில் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது. சன் ஸ்கிரீனை அவரவர் சருமத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவேண்டும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்துக்கெனத் தனித்தனி சன் ஸ்க்ரீன்கள் உள்ளன. ஒவ்வொருவரின் சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன்களை சரும மருத்துவரிடம் ஆலோசித்து, தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம். அதேபோல சன் ஸ்க்ரீன் பயன்படுத்துபவர்கள் அதன் `எஸ்.பி.எப்' (SPF - Sun Protection Factor) அளவு 30 இருக்கிறதா என்று பரிசோதித்து பயன்படுத்தவேண்டும். 

தண்ணீர்

சருமப் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க, கடைப்பிடிக்க வேண்டியவை!

* தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் சுகாதாரமான தண்ணீரை அருந்தவேண்டும். 

* பருத்தி ஆடைகளை அணியவேண்டும். இத்தகைய ஆடைகள் வியர்வையை உறிஞ்சுவதுடன், நம் உடலை காற்றோட்டமாக வைத்திருக்கும். 

* உடல் அதிகம் வியர்க்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

* கூடுமானவரை வசிப்பிடம் மற்றும் வேலை பார்க்கும் இடம் குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. 

பழரசம்

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதேபோன்று, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பானங்களை அருந்தலாம்.

* கோடை வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, சன் கிளாஸ், முழுக்கைச் சட்டை அணிவது நல்ல பலனைத் தரும்” என்கிறார் நரசிம்மலு. 


டிரெண்டிங் @ விகடன்