கரு முட்டை, விந்தணுவைச் சேமித்து விரும்பும்போது குழந்தை பெறலாம்... ஐ.வி.எஃப். சிகிச்சையில் புதிய மைல்கல்! | A new method in IVF technology gains positive response from women

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (26/04/2019)

கடைசி தொடர்பு:19:24 (26/04/2019)

கரு முட்டை, விந்தணுவைச் சேமித்து விரும்பும்போது குழந்தை பெறலாம்... ஐ.வி.எஃப். சிகிச்சையில் புதிய மைல்கல்!

"பெண்களின் கரு முட்டையையும் ஆண்களின் விந்தணுவையும் சேமித்துப் பதப்படுத்தி, பிறகு அவர்கள் விரும்பும்போது ஐ.வி.எஃப் மூலம் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதியமுறை நடைமுறைக்கு வந்துள்ளது."

கரு முட்டை, விந்தணுவைச் சேமித்து விரும்பும்போது குழந்தை பெறலாம்... ஐ.வி.எஃப். சிகிச்சையில் புதிய மைல்கல்!

மீபகாலமாகக் குழந்தையின்மை ஒரு சிக்கலாக உருவெடுத்துவருகிறது. வேலை மற்றும் பொருளாதாரச் சூழலைக் காரணம்காட்டி குழந்தை பெறுவதைப் பல பெண்கள் தள்ளிப்போடுகின்றனர். ஆனால், அவர்கள் விரும்பும்போது குழந்தை பெற நினைத்தால் அவர்களது உடல் ஒத்துழைப்பதில்லை. பெண்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களது உடலில் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதேபோல, ஆணின் விந்தணு உற்பத்தியிலும் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு அதுவும் கரு உருவாவதில் சிக்கலைத்தரும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் சிறந்த தீர்வைக் கண்டறிந்துள்ளது நவீன மருத்துவம்.

செயற்கை கருத்தரிப்பு

பெண்களின் கரு முட்டையையும் ஆண்களின் விந்தணுவையும் சேமித்துப் பதப்படுத்தி, பிறகு அவர்கள் விரும்பும்போது ஐ.வி.எஃப் மூலம் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதியமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

அதாவது, காலம் தாழ்த்தி குழந்தை பெற விரும்பும் பெண்கள், தங்களின் இளமைக் காலத்தில், உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே தங்களது கரு முட்டையைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஆண்களும், அவர்களது விந்தணுவைச் சேமித்துவைக்கலாம். பிறகு, காலம் கழித்து பாதுகாப்பாகவும் முறையாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இத்தகைய புதிய முறைக்குப் பெண்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

கரு முட்டையைச் சேமித்து வைக்க விரும்பும் பெண்கள் குறித்து லண்டனைச் சேர்ந்த ராயல் கல்லூரியின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன் முடிவில், 50 சதவிகித பெண்கள் இந்த முறையை வரவேற்பது தெரியவந்துள்ளது. சரிபாதி பெண்கள் தங்களது கரு முட்டையைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஆய்வின்போது, 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 25 சதவிகிதம் பேர் தங்களது கருத்தரிக்கும் திறன் குறித்து அச்சப்படுவது தெரியவந்தது. அவர்களுக்கு, கரு முட்டையைச் சேமித்து வைக்கும் முறை மிகவும் உதவியாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில், ஐந்து பெண்களில் மூன்று பேர் இந்த முறையைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

கருத்தரித்தல்

"இயற்கையாகக் கருத்தரிக்க முடியாத பெண்கள் முதல் தாமதமாகக் குழந்தை பெற விரும்பும் பெண்கள் வரை அனைவருமே அவர்கள் விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஏதுவான சிகிச்சைகளும் வழிமுறைகளும் நவீன மருத்துவத்தில் உள்ளன. ஐ.வி.எஃப் சிகிச்சையின்போது ஏற்படும் ஒரு சில கருச்சிதைவு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் நவீன வழிமுறைகள் உதவுகின்றன" என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் எரிகா பட்டேல். அதுகுறித்து அவர் விளக்கமாகக் கூறினார்.

"ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையின்போது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் கரு முட்டையும் சேகரிக்கப்படும். பின்னர் அவை உடனடியாக ஆய்வுக்கூடங்களில் வைத்து கரு உருவாக்கப்படும். முழுமையாகக் கரு உருவானதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையின் உள்ளே கரு செலுத்தப்படும். ஆனால், செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வருபவர்களில், பலர் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றனர். சமீபத்திய தரவுகள், கருத்தரிப்பு மையங்களை நாடுபவர்களின் சராசரி வயது 37 என்கிறது. செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வருபவர்களில் சிலருக்கு, முந்தைய காலங்களில் தொடர்ச்சியாகக் கரு, கலைந்துகொண்டே இருந்திருக்கும். கரு கலைவதற்கு தாயின் கர்ப்பப்பை பலவீனமும் தந்தையின் விந்தணுத் தன்மை குறைபாடும் காரணமாக இருந்திருக்கும். இத்தகைய காரணங்களை ஐ.வி.எஃப் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்னரே அறிந்து, அவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். 

கருத்தரித்தல்

ஐ.வி.எஃப் சிகிச்சையின்போது தாயின் வயிற்றின் உள்ளே கரு உட்செலுத்தப்படும்போதுகூட தாய் மற்றும் குழந்தையின் உடல்நலனை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை இந்த சிகிச்சை முறையில் இவை சாத்தியமில்லாமலிருந்தது. ஆனால், நவீன முறைகளில் அவை சரி செய்யப்பட்டுள்ளன. அதேபோல அடிப்படையாகவே, காலம் தாழ்த்தி கருவுறும் பெண்களுக்கு, அவர்களது கரு வளர்ச்சியில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். செயற்கைக் கருத்தரிப்புக்காக வரும் பெண்களுக்கு வயது அதிகமாக இருக்கும் என்பதால் தாயும் சேயும் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கும் நவீன முறைகள் உதவுகின்றன. 

நவீன பரிசோதனை முறைகள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

* `டி.என்.ஏ ஃப்ராக்மென்டேஷன்' (DNA Fragmentation): மகப்பேறு மருத்துவர் எரிகா பட்டேல்

இது ஆண்களுக்கான பரிசோதனை. அப்போது, ஆணின் விந்தணுவில் உள்ள டி.என்.ஏ தன்மை பரிசோதிக்கப்படும். டி.என்.ஏ நன்றாக இருந்தால் மட்டுமே கரு ஆரோக்கியமாக உருவாகும் என்பதால், தந்தையால் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்க இது உதவும்.

* `எண்டோமெட்ரியல் ரெசிப்டிவிடி அரே' (ERA - Endometrial Receptivity Array)

இது பெண்களுக்கான பரிசோதனை. கர்ப்பப்பையின் தன்மையும் கர்ப்பப்பையில் கரு பதியும் விதமும் கண்காணிக்கப்படும். இந்தப் பரிசோதனையின்போது, கர்ப்பப்பையின் சுவர் பகுதி (Uterus Lining) பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின் முடிவில், கர்ப்பப்பையின் தன்மையையும் எந்த நேரத்தில் கருவை கர்ப்பப்பையின் உள்ளே வைக்கலாம் என்பதையும் கணிக்கலாம். எனவே, சரியான நேரத்தில் கருவை உள்ளே செலுத்தலாம். அதன்மூலம், கரு கலைவதை எளிதாகத் தவிர்க்கலாம்.  

* `ப்ரி-இம்ப்ளான்டேஷன் ஜெனிடிக் டயாக்னோசிஸ்' பி. ஜி.டி. பரிசோதனை (Pre-Implantation Genetic Diagnosis - PGD) 

கர்ப்பகாலத்தின்போது கருவின் உடல் வளர்ச்சியில் பாதிப்புள்ளதா என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். செயற்கைக் கருத்தரிப்பில் ஈடுபடுபவர்களின் சிசுக்களுக்கு, அவை உருவாக்கப்படும்போதே அதன் தன்மைகள், பி.ஜி.டி பரிசோதனை மூலம் கண்டறியப்படும். 

கருமுட்டை விந்தணு

பணி மற்றும் பொருளாதாரச் சூழல் அல்லது வேறு காரணத்தால் கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைப்பவர்களுக்கு, நவீன மருத்துவத்தில் இரண்டு முறைகள் உள்ளன. திருமணமானவர், ஆகாதவர் என்ற அடிப்படையில் அவை பிரிக்கப்படும். திருமணமாகாத பெண் என்றால் கரு முட்டையும் திருமணமாகாத ஆண் என்றால் அவரது விந்தணுவும் சேமித்து உறையவைக்கப்படும். இந்த முறை, 'விட்ரிஃபிகேஷன் க்ரையோபிரிசர்வேஷன்' (Vitrification Cryopreservation) எனப்படுகிறது. திருமணமானவர்கள் என்றால், கணவனின் விந்தணுவும் மனைவியின் கரு முட்டையும் தனித்தனியாக எடுக்கப்பட்டு, அவை `ஐ.வி.எஃப்' சிகிச்சைமுறை மூலம் உடனடியாகக் கருவாக உருவாக்கப்பட்டுவிடும். அந்தக் கரு, அப்படியே உறையவைக்கப்பட்டுப் பதப்படுத்தி வைக்கப்படும். பிறகு அந்தத் தம்பதி, எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள முன்வருகிறார்களோ, அப்போது பதப்படுத்தி வைக்கப்பட்ட கரு தாயின் உடலுக்குள் செலுத்தப்படும். 

கரு முட்டை மற்றும் விந்தணுவைப் பதப்படுத்தி, தாங்கள் விரும்பும்போது பயன்படுத்திக்கொள்பவர்கள், தங்களது 40 வயதுக்குள் அவற்றைப் பயன்படுத்திவிடுவது நல்லது. காலம் தாழ்த்தினால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டு தாய் - சேய் நலனில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், கவனம் தேவை. பெரும்பாலான நேரங்களில், அதிகபட்சம் 40 முதல் 50 சதவிகிதம் மட்டுமே ஐ.வி.எஃப் வெற்றி அடைகிறது. உலக அளவிலான தரவுகளைப் பார்க்கும்போது, மூன்றாவது தடவைதான் கரு முழுமையாக உருவாகிறது என்பதை அறியமுடிகிறது.  

கரு

கருவைச் செயற்கையாக உள்ளே செலுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொஞ்சம் தவறினாலும் `கர்ப்பப்பை உட்சரிவு' (Uterine Lining), `உட்செலுத்துதலுக்கான தடுப்பாற்றல் செயல்பாட்டுக் குறைவு' (Immunologic Implantation Dysfunction), `கர்ப்பப்பை மேற்பரப்பு காயம் அல்லது சிதைவு' (Surface Lesions) போன்றவை ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள், கரு பாதிப்பு அல்லது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு முறையும், எதனால் கரு தங்கவில்லை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் மட்டுமே அடுத்தமுறை கரு கலைவதைத் தடுக்க முடியும். இதற்கு, நவீன முறைகள் உதவிபுரிகின்றன. 

கரு கலைவதைத் தடுக்க, மற்ற முறைகளைவிட, `பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர்' (Blastocyst culture) என்ற நவீன முறை அதிகம் உதவுகிறது. `பிளாஸ்டோசிஸ்ட்' என்பது சினை முட்டை வளர்ச்சியில் ஒரு பருவம். பொதுவாக `ஐ.வி.எஃப்' சிகிச்சையின்போது கருவானது, கர்ப்பப்பைக்கு இரண்டு அல்லது மூன்றாவது நாளில் மாற்றப்பட்டுவிடும். அதுவே, 'பிளாஸ்டோசிஸ்ட்' நடைமுறையில், சினை முட்டைகள் ஐந்து நாள்கள் வரை ஆய்வகத்தில் நன்றாக வளர அனுமதிக்கப்படும். அதுவரை சினை முட்டைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, சிறந்த சினை முட்டை தேர்வு செய்யப்படும். பிறகு, அது தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும். இதற்கு முன்பு செய்யப்பட்ட ஐ.வி.எஃப் முறையைவிட இந்த `பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர்' முறையில் கரு கலைவது அல்லது கருவின் வளர்ச்சி சார்ந்த பாதிப்புகளை இவை பெருமளவில் தடுக்கின்றன" என்கிறார் எரிகா பட்டேல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்