பல் மருத்துவர்கள் பொது மருத்துவம் பார்க்க அனுமதி... சாதக/பாதகங்கள் என்ன..?! ஓர் அலசல் | What are pros and cons of Dentists being permitted to practice general medicine

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (27/04/2019)

கடைசி தொடர்பு:16:48 (27/04/2019)

பல் மருத்துவர்கள் பொது மருத்துவம் பார்க்க அனுமதி... சாதக/பாதகங்கள் என்ன..?! ஓர் அலசல்

இந்தியாவில் மொத்தமுள்ள 494 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, ஆண்டுதோறும் 63,250 பேர் மருத்துவர்களாக வெளியேறுகிறார்கள். 23,729 முதுகலை மருத்துவ இடங்கள்தான் இந்தியாவில் இருக்கின்றன.

பல் மருத்துவர்கள் பொது மருத்துவம் பார்க்க அனுமதி... சாதக/பாதகங்கள் என்ன..?! ஓர் அலசல்

'பல் மருத்துவம் படித்தவர்கள், கூடவே ஆறு மாத பிரிட்ஜ் கோர்ஸ் படித்துவிட்டு பொது மருத்துவம் பார்ப்பது மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க உதவுமா என்பது குறித்து விவாதிக்க வரும் 22-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்' என்று கடந்த 9-ம் தேதி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து (நிதி ஆயோக்), `டென்ட்டல் கவுன்சில் ஆப் இந்தியா'வுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி `டென்ட்டல் கவுன்சில் ஆப் இந்தியா'வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையை மத்திய அரசுக்கு முன்மொழிந்த `இந்தியன் டென்ட்டல் அசோஷியேஷன்' இதைப் பெரிதும் வரவேற்றுள்ளது. அத்துடன் நாடெங்கும் இருக்கும் பல் மருத்துவர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அதேவேளையில், `மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா', இந்த புதிய முறையை வரவேற்கவில்லை. அகில இந்திய மருத்துவர் சங்கமான, `இந்தியன் மெடிக்கல் அசோஷியேஷ'னும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளது. 

மருத்துவர்கள்

`நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுவதே முதலில் தவறான ஒரு தகவல்' என்கிறார் இந்திய மெடிக்கல் அசோஷியேஷன் தேசியத் துணைத்தலைவர் ஜெயலால்.

மேலும், தரவுகளோடு, சில சந்தேகங்களை எழுப்பினார் அவர்.

ஜெயலால்``இந்தியாவில் மொத்தமுள்ள 494 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, ஆண்டுதோறும் 63,250 பேர் மருத்துவர்களாக வெளியேறுகிறார்கள். 23,729 முதுகலை மருத்துவ இடங்கள்தான் இந்தியாவில் இருக்கின்றன. இவர்களைத் தவிர, கிட்டத்தட்ட 40,000 மருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இப்போதும்கூட 1,000 காலிப் பணியிடங்களுக்கு, கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் மருத்துவர் இல்லாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் எங்கேயும் இல்லை. வட இந்தியாவில் வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மருத்துவர்களை முறையாகப் பணி நியமனம் செய்யாமல் இருப்பதுதான் காரணமே தவிர, மருத்துவர்களின் பற்றாக்குறை அல்ல. 

ஏற்கெனவே, எம்.பி.பி.எஸ் முடித்த, மருத்துவர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்கினாலே மருத்துவர் பற்றாக்குறை வராது. மாறாக பி.டி.எஸ் முடித்தவர்களை, பொது மருத்துவம் பார்க்க அனுமதிப்பது என்பது வேண்டாத வேலை. இது பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஒரு செயல். அத்துடன் எம்.பி.பி.எஸ் படித்து வெளியே வருபவர்களுக்கு, இது புதிய சிக்கலை ஏற்படுத்தும்; ஏற்கெனவே பல மருத்துவர்கள் நிரந்தர வேலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். 

அறுவை சிகிச்சை

பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என மருத்துவத் துறையில் ஒவ்வொருவருமே குறிப்பிட்ட தேவைகளுக்காகத்தான் படிக்கின்றனர். பல் மருத்துவத்துக்கான தேவை இங்கே அதிகமாக இருக்கிறது. அவர்களுக்குப் பல் மருத்துவர்கள் சிகிச்சையளித்தால் போதும். அவர்கள் சார்ந்த துறைகளில் அவர்கள் வேலை செய்வதுதான் சரியாகவும், முறையானதாகவும் இருக்கும். அப்படி மருத்துவப் பற்றாக்குறை இருப்பதாக ஒரு விவாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும், மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களைத்தான் அதிகரிக்க வேண்டும். அத்துடன் தேர்தல் நேரத்தில் இதைச் செய்வதே தவறு. தொடர்ந்து இதற்கான முயற்சிகளை எடுத்தால், நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்'' என்றார் அவர். 

இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தபடி கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், `டென்ட்டல் அசோஷியேஷன் ஆப் மெட்ராஸி'ன்  செயலாளரும்,  `இண்டியன் டென்ட்டல் அசோஷியேஷன்' முன்னாள் தலைவருமான, ரங்கராஜனிடம் பேசினோம்,

மருத்துவர் பற்றாக்குறை

``நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. நகரங்களில்தான் போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. எம்.பி.பி.எஸ் படிப்பவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதில் பெரும்பாலும் பி.டி.எஸ் படிப்பவர்களும் படிக்கிறார்கள். முதல் மூன்று வருடம் இருவருமே ஒரே மாதிரிதான் படிக்கிறார்கள். அதனால் பல் மருத்துவம் படித்தவர்கள், கூடுதலாக ஒரு கோர்ஸ் முடித்து பொது மருத்துவம் பார்ப்பதில் தவறில்லை. அதேநேரம், மருத்துவர் தேர்வு முறையாக வெளிப்படையாக நடந்தால் நல்லது'' என்கிறார்.

இதற்கிடையே, `பல் மருத்துவர்கள் இதை வரவேற்பதற்கு அவர்களுக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியே முதன்மையான காரணம்' என்கிறார் பல் மருத்துவர் செந்தில் குமரன்.

``தமிழ்நாட்டில் வருடத்துக்கு 2,500 பேர் பல் மருத்துவம் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு 6,000, 7,000 சம்பளத்தில்தான் வேலை கிடைக்கிறது. 5 வருடம் மருத்துவம் படித்துவிட்டு இந்த நிலையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தப் புதிய முறை அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நாடெங்கும் பல்கிப் பெருகியிருக்கும் போலி மருத்துவர்களை ஒழிக்கவும் பயன்படும்'' என்கிறார் செந்தில் குமரன். 

மருத்துவம்

`பல் மருத்துவர்களின் இந்தக் குரல் நியாயம்தானா?' என்று சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்ரவீந்திரநாத்திடம் பேசினோம்,

``இதை வரவேற்க முடியாது. பல் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையே அதிகமாக இருக்கும்போது இது தேவையில்லாத வேலை. 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் பல் மருத்துவர்கள் இல்லை. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏராளமான பல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவை தவிர, ஈறு தொடர்பான பாதிப்புகள், பற்குழி பாதிப்புகள் பெரும்பாலானோருக்கு இருக்கின்றன. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அதிகமாகச் செலவு செய்து சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எனவே, பி.டி.எஸ் படித்தவர்களுக்கு, முறையான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித்தர வேண்டும்'' என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்