ஆண்டுக்கு 7 லட்சம் பேரை பலிவாங்கும் `மருந்து எதிர்ப்புத் திறன்'... தீர்வு என்ன? | Drug resistance kills 7 lakh people in a year

வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (02/05/2019)

கடைசி தொடர்பு:10:21 (02/05/2019)

ஆண்டுக்கு 7 லட்சம் பேரை பலிவாங்கும் `மருந்து எதிர்ப்புத் திறன்'... தீர்வு என்ன?

`நோய்களின் பட்டியலில் இடம்பெறாத, மருந்து எதிர்ப்புத் திறன் (Drug-resistance) என்ற நிலையால் உலக அளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் காசநோய்க்கான மருந்து எதிர்ப்புத்திறனால் மட்டும் 2.30 லட்சம் பேர் இறக்கின்றனர்'

ஆண்டுக்கு 7 லட்சம் பேரை பலிவாங்கும் `மருந்து எதிர்ப்புத் திறன்'... தீர்வு என்ன?

யிர்க்கொல்லி நோய்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நோய்களின் பட்டியலில் இடம்பெறாத ஒரு விஷயத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். ஐ.நா சபையின் `ஆன்டி-மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்' என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தரும் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

மருந்து எதிர்ப்புத் திறன்


`நோய்களின் பட்டியலில் இடம்பெறாத, மருந்து எதிர்ப்புத் திறன் (Drug-resistance) என்ற நிலையால் உலக அளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் காசநோய்க்கான மருந்து எதிர்ப்புத்திறனால் மட்டும் 2.30 லட்சம் பேர் இறக்கின்றனர்' என்கிறது அந்த அறிக்கை. `2050-ம் ஆண்டு மருந்து எதிர்ப்புத்திறனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு கோடியாக அதிகரிக்கும். இந்தப் பிரச்னையால் 2030-ம் ஆண்டு 2.4 கோடி பேர் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்' என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 

காசநோய்


பொதுவான சில நோய்களான மூச்சுக்குழாய் தொற்று, பால்வினைத் தொற்றுநோய்கள், சிறுநீர்ப் பாதை தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருந்து எதிர்ப்புத் திறன் உருவானதால் அந்த நோய்களைக் குணமாக்கமுடியாத நிலை அதிகரித்துவருகிறது. எனவே, அனைத்து நாடுகளும் மருந்து எதிர்ப்புத் திறன் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி, தேசிய அளவில் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மருந்து எதிர்ப்புத் திறன் என்றால் என்ன, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியுமா?' என்பதுகுறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராமன்ஜெயராமனிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார் 
``சாதாரணக் காய்ச்சல் முதல் காசநோய், ஹெச்.ஐ.வி வரை, அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளுக்கும் `ஆன்டிபயாடிக்' அல்லது `ஆன்டிவைரல்' மருந்துகள் கொடுக்கப்படும். இந்த மருந்துகள் சம்பந்தப்பட்ட நோய்க்குக் காரணமான நோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். அந்த மருந்தைச் சாப்பிட்டால் நோய் குணமாவதுடன் கிருமி அழிந்துவிடும். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துக்கு நோய்க் கிருமி கட்டுப்படாமல், அதன் தீவிரம் அதிகரித்து, நோய் குணமாகாத தன்மையே `மருந்து எதிர்ப்புத் திறன்' (Drug Resistance)என்று அழைக்கப்படுகிறது.
நோயாளிகள் `ஆன்டிபயாடிக்' மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்துக் கடையில் கேட்டு வாங்கிச் சாப்பிடுகின்றனர். சிலர், அந்த மருந்துகளை இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பிடுவதும், திடீரென நிறுத்துவதுமாக இருக்கின்றனர். இதுபோன்ற பழக்கமுடையவர்களுக்கு மருந்து எதிர்ப்புத் திறன் அதிகமாக ஏற்படும். மருந்தைப் பாதியில் நிறுத்துவதால் நோய்க் கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும். ஒரு மருத்துவரிடம் சென்று குணமாகவில்லை என்றால் வேறொரு மருத்துவரிடம் செல்வது, அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுவது என்று மாற்றிக்கொண்டே இருந்தாலும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும்.
`ஆன்டிபயாடிக்' மருந்துகள் என்றால் ஒரு கோர்ஸ் முழுமையாக எடுக்கவேண்டும். சாதாரண நோய்த்தொற்று என்றால் ஐந்து முதல் 15 நாள்கள் எடுக்கவேண்டும். காசநோய் என்றால் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து மருந்து எடுக்கவேண்டும். மருத்துவர்களும் நோயாளிகளின் நோய்த் தன்மையை முழுமையாக ஆராயாமல், எடுத்தவுடன் `ஆன்டிபயாடிக்' மருந்துகளைக் கொடுக்கக்கூடாது. வைரஸ் கிருமித் தொற்றுக்கு `ஆன்டிபயாடிக்' மருந்துகள் தேவையா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து வழங்கவேண்டும்.

நோய்த்தொற்று

தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்குவதாலும் நோய்க் கிருமிகள் மீது அந்த மருந்துகள் வேலை செய்யாமல் போய்விடும். தேவையென்றால் பரிசோதித்துப் பார்த்து, அதன் முடிவின் அடிப்படையில் கொடுக்கவேண்டிய மருந்துகளைத் தீர்மானிக்கவேண்டும்.
நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக எடுக்கவேண்டும். மாறாக, மருத்துவரைக் கட்டாயப்படுத்தி `ஆன்டிபயாடிக்' மருந்துகளைப் பரிந்துரைக்கச் சொல்லக்கூடாது. மருந்து எதிர்ப்புத் திறன் உடலில் உருவாகிவிட்டால், அவர்களுக்கு மேலும் வீரியமுள்ள மருந்து கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, மருந்து எதிர்ப்புத் திறனுக்கு அதிக வீரியமுள்ள மருந்துகள் கண்டுபிடித்து அவற்றை அதிக அளவில் தயாரிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், அந்த அளவுக்கு ஆராய்ச்சிகளும், புதிய மருந்துகளைத் தயாரிப்பதும் குறைவாகவே நடக்கின்றன. அதேநேரம், மருந்து எதிர்ப்புத் திறனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதிய மருந்துகள் கிடைக்காததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

மருத்துவர் பரிந்துரைச் சீட்டு


வளர்ந்த நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் ஒரு தலைவலி மாத்திரையைக்கூட சுயமாக மருந்துக்கடைகளில் வாங்கமுடியாது. கடுமையான  சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நிலை நம் நாட்டிலும் உருவாக்கப்படவேண்டும். அதிக மக்கள்தொகை இருக்கும் பகுதிகளில் நோய்த்தொற்று விரைவாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவிவிடும். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மருந்துக்கடைகளில் சுயமாக மருந்து வாங்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அவசியம் அமல்படுத்தவேண்டும்" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்