`திருமணம் செய்ய பெண் தேடித் தாருங்கள்!' - காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் | A young man lodged a complaint to find a girl for marriage

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (02/05/2019)

கடைசி தொடர்பு:19:48 (02/05/2019)

`திருமணம் செய்ய பெண் தேடித் தாருங்கள்!' - காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர்

த்தரப்பிரதேச மாநிலம் கயிரானா என்ற பகுதியைச் சேர்ந்த துணை மண்டல மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்துக்கு, வித்தியாசமான புகார் ஒன்று வந்தது. அந்தப் புகாரைக் கொடுத்தவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த அசீம் மன்சூரி என்ற இளைஞர்.  புகாரில், 'நான் திருமணம் செய்துகொள்ள பொருத்தமான ஒரு பெண்ணைத் தேடித் தாருங்கள்.  பெண் தேடுவதற்கு என் குடும்பத்தினர் எனக்கு உதவவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

பெண் தேடித் தரக்கோரி புகார் அளித்த இளைஞர்

PC:patrika.com

அந்த இளைஞருக்குத் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போவதற்கு  'சிறிய' காரணம் இருந்தது. புகார் கொடுத்த அசீமிற்கு 26 வயதுதான் என்றாலும், அவரது உயரம் 2 அடி 3 அங்குலம்தான். இவர் உயரம் குறைவாக இருப்பதால்தான் அவருக்கு பெண் கிடைக்கவில்லை.

புகாரையடுத்து, போலீஸார் அசீமின் வீட்டுக்குச் சென்றனர். இதுதொடர்பாகப் பேசிய அசீம், "போலீஸ் ஒரு குழுவாக வந்து என் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரண்டு மாதங்களுக்குள் ஒரு பெண்ணைத் தேடி எனக்குத் திருமணம் செய்துவைக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். அது முடியாத பட்சத்தில், பெண்ணைத் தேடுவதற்கு போலீஸாரே உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீஸார் கூறுகையில், "திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தைத் தன்னால் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை அசீமுக்கு நிறையவே இருக்கிறது. வரப்போகும் ரம்ஜான் நோன்பைத் தன் மனைவியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று கற்பனை செய்துவைத்திருக்கிறார்" என்கின்றனர்.

போலீஸார்

புகார் கொடுத்த அசீமின் அப்பா நசீம் மன்சூரி, அந்தப் பகுதியில் ஒரு மளிகைக் கடை நடத்திவருகிறார். மேலும், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக உதவும் தன்னார்வ அமைப்பு ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார்.  "எத்தனையோ குழந்தைகளுக்கு உதவியிருக்கிறேன். ஆனால், என் மகனின் திருமண விஷயத்தில் என்னால் எந்த உதவியையும் செய்யமுடியவில்லை. அசீமுக்கு 26 வயது ஆகிவிட்டாலும் அவனுக்குள் இன்னும் குழந்தை போன்ற அப்பாவித்தனம் இருக்கிறது. உயரம் குறைவு தவிர, மேலும் சில பிரச்னைகள் அசீமுக்கு இருக்கின்றன. அதனால்தான் பெண் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார், அசீமின் அப்பா.

கடந்த சில மாதங்களாகவே, அசீம் பெண் தேடும் படலத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.  டிசம்பர் மாதம், உறவினர் ஒருவர் திருமணத்துக்காக லக்னோ சென்ற அவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து, இதே புகாரைக் கொடுத்திருக்கிறார். அகிலேஷும் பெண்ணைத் தேடித்தருவதாக உறுதியளித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.