கோடையைச் சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு சில ஆலோசனைகள்! | Tips for pregnant ladies to tackle summer heat

வெளியிடப்பட்ட நேரம்: 02:28 (03/05/2019)

கடைசி தொடர்பு:07:52 (03/05/2019)

கோடையைச் சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு சில ஆலோசனைகள்!

கோடைக்காலத்தில் ஆடைகள் விஷயத்திலும் கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பருத்தி போன்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டும்.

கோடையைச் சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு சில ஆலோசனைகள்!

கோடைக்காலம் என்றால் எல்லாருக்குமே அலர்ஜிதான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்குள் போதும், போதுமென்றாகிவிடுகிறது. ஆனால், இந்தக் கோடைக்காலம் மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகளைத்தான் அதிகம் வதைக்கும். `வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு, கர்ப்பத்தில்கூட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கர்ப்பிணிகள் கோடையைக் கொண்டாடலாம். 

நீர்ச்சத்து

கோடையைச் சமாளிக்க கர்ப்பிணிகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமார்.

``கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  அதில் முக்கியமானவை சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் கருப்பைவாய் பகுதியில் தொற்று.  

சாதாரணமாகவே கர்ப்ப காலத்தில் கருப்பைவாய் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். கோடைக்காலத்தில் புழுக்கம் மற்றும் வியர்வையினால் அதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகம்.  எனவே, கோடையில் கர்ப்பிணிகள் ஒருநாளைக்கு குறைந்தது 3 முதல் 4 டாக்டர் காவ்யா கிருஷ்ணகுமார்லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி, எரிச்சல் உணர்வு தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதேபோன்று கருப்பை வாய்ப் பகுதியில் அரிப்பு, அதிக வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கோடையில் நீர்ச்சத்துள்ள தர்பூசணி, திராட்சை போன்ற பழங்கள், மஞ்சள் பூசணிக்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைதவிர, பச்சைக் காய்கறிகள், கீரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்தில் ஆடைகள் விஷயத்திலும் கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பருத்தி போன்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டும். உள்ளாடைகளையும் பருத்தியில் தேர்ந்தெடுத்து அணிவதால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கமுடியும். 

கர்ப்பிணிகள் குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. தாய் உட்கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் மட்டுமே கிரகிக்கப்பட்டு குழந்தைக்குச் செல்கிறது. அம்மா சாப்பிடும் உணவு அப்படியே குழந்தைக்குச் செல்லாது.

கர்ப்பிணி

கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்படுகிறது. ஐஸ்க்ரீமில் சர்க்கரை அதிகமாக இருக்கும், ஊட்டச்சத்துகள் எதுவும் கிடையாது. அதனால் அடிக்கடி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எப்போதாவது ஒருமுறை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் தவறில்லை.

கோடைக்காலம் என்பதால் முழு நேரமும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கிடையாது. தினமும் வெளிக்காற்றில் காலாற நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. காலை நேரத்தில் சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து, உடலுக்குப் போதுமானது என்பதால், காலை 7 முதல் 8 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் சீக்கிரமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடையைப் பயன்படுத்தலாம்.

ஏ.சி. அறைகள்

பொதுவாகவே கர்ப்பிணிகள் இரவு தூங்குவதற்கு சற்று சிரமப்படுவார்கள். கோடையில் ஏற்படும் புழுக்கத்தால் உறக்கம் இன்னும் பாதிக்கப்படலாம்.  அதனால் இரவு உறங்கச்செல்வதற்கு முன்பாக குளிக்கலாம்.  அல்லது எளிய மசாஜ் செய்துவிட்டுப் படுத்தால் நன்றாக உறக்கம் வரும்.

 

 

 

குழந்தை பிறந்த இளம் தாய்மார்களும் கோடைக்காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலில் அதிகம் இருப்பது, நீர்ச்சத்துதான். அதனால் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் இன்னும் கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது. 

குழந்தை பிறந்த உடன் தாய்மார்களுக்கு உணவு விஷயத்தில் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.  அது தேவையற்றது. எப்போதும் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதிக பழங்கள், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்