`யானைக்கு முத்தம் கொடுக்கணும்!’ - இளைஞரின் விசித்திர ஆசையால் ஏற்பட்ட விபரீதம் | young man tries to kiss a jungle elephant ends in hospital

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (03/05/2019)

`யானைக்கு முத்தம் கொடுக்கணும்!’ - இளைஞரின் விசித்திர ஆசையால் ஏற்பட்ட விபரீதம்

திரைப்பட கதாநாயகன்போல் யானைக்கு முத்தம் கொடுக்க விரும்பிய இளைஞர்,  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலூர் என்ற பகுதியில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனப்பகுதியும் ஆகும்.

யானைக்கு முத்தம்


அப்பகுதியில் வனத்தில் வசிக்கும் ஆறு யானைகள் சேர்ந்த கூட்டம்  ஒன்று, கடந்த ஒரு வாரமாக குடியிருப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மாந்தோப்பு, வாழைத்தோப்பு, வெள்ளரிக்காய் தோட்டம் ஆகியவற்றில் புகுந்து நாசம் செய்துவருகின்றன. யானைகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து யானைகளை விரட்ட முயன்றுவருகின்றனர்.

அந்த யானைக் கூட்டம் கட்டேரி, அரலேரி என்ற இரண்டு கிராமப் பகுதிகளில் சமீபத்தில் சுற்றித் திரிந்தன. அந்த யானைகளை வேடிக்கைபார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் திரண்டனர். யானைகளைத் தங்கள் செல்போனில் படம்பிடிக்கத் தொடங்கினர். சிலர் செல்ஃபி எடுக்க முயன்றனர். யானைகள் அங்கு முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினரும் அப்பகுதிக்கு வந்தனர். 
ஆனால், மக்கள் கூட்டத்தைப் பார்த்த யானைகள் பதற்றமடைந்து, அங்கும் இங்கும் ஓடத்தொடங்கின. ஒரு கட்டத்தில், அங்கு கூடியிருந்த மக்களை ஆவேசமாகத் துரத்த ஆரம்பித்தன. இதனால், கூடியிருந்த கூட்டம் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. 

யானை


"யானைகள் துரத்தியதால் மக்கள் ஓடத்தொடங்கினர். அப்போது முகம் முழுவதும் காயத்துடன் ராஜூ என்ற இளைஞர் ஓடி வருவதைப் பார்த்தோம். அவர் பேசும் நிலையில் இல்லை என்பதால், அப்போது அவரிடம் எதுவும் கேட்கவில்லை. உடனே மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தோம். யானை துரத்தியதால் தப்பித்து ஓடும்போது யூக்கலிப்டஸ் மரத்தில் வேகமாக மோதியதால், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

 'அந்த இளைஞர் மது போதையில் இருந்துள்ளார். ஒரு கன்னட திரைப்படத்தில், கதாநாயகன் யானைக்கு முத்தம் கொடுக்கும் காட்சியைப் பார்த்துள்ளார். அதைப்போல தானும் யானைகளுக்கு முத்தம் கொடுக்கப்போவதாக தனது நண்பர்களிடம் போதையில் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். அதற்காக யானைகளிடம் நெருங்கிச் சென்றபோது, யானைகள் துரத்தத் தொடங்கியுள்ளன. தலை தெறிக்க ஓடிவந்து மரத்தில் மோதியிருக்கிறார்' என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
இத்தனை களேபரங்கள் நடந்தாலும், யானைகளைக் காட்டுக்குள் திரும்பி அனுப்பும் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. யானைகள் இப்போதும் அந்தப் பகுதியில்தான் வலம் வந்துகொண்டிருக்கின்றன.