3 பேருக்கு சிறுநீரகம் கிடைத்த சம்பவம்! - உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அரிய முயற்சி | 3 renal failure patients skip long wait, exchange donor kidneys happened in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (03/05/2019)

கடைசி தொடர்பு:19:50 (03/05/2019)

3 பேருக்கு சிறுநீரகம் கிடைத்த சம்பவம்! - உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அரிய முயற்சி

சிறுநீரகம் செயலிழந்த மூன்று நோயாளிகள், தங்களின் குடும்பத்தார் தானமளித்த சிறுநீரகம் பொருந்தாமல், தங்களுக்குள்ளாக மாற்றிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

சிறுநீரகம்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான முப்பது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ``சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் படவேண்டும்'' எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அந்தப் பெண், சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதற்காக, பதிவு செய்திருக்கிறார். 2017 - ம் ஆண்டில், பதிவு செய்தவருக்கு தற்போது வரை சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பெண்ணின் சகோதரி அவருக்குச் சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், தானமளிக்க முன்வந்த சகோதரியின் சிறுநீரகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பொருந்தாது எனக் கைவிரித்துள்ளனர். 

2018 - ம் ஆண்டு. அதே மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம் இதேபோல் நடந்தது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வந்த ஒருவருக்கு, அவரது சகோதரி சிறுநீரக தானமளிக்க முன்வந்து, அது பொருந்தாமல் போனது. அப்போதுதான், மேற்கண்ட இரு தரப்பினரும் பரஸ்பரம் சிறுநீரகத்தை மாற்றிக்கொள்ள, மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, மருத்துவப் பரிசோதனைகளும் தொடங்கின. ஆனால், அந்த முயற்சியும்  பலனளிக்கவில்லை.

பாதிப்பு

2019- ம் ஆண்டு. சிறுநீரக பாதிப்பின் காரணமாக அதே மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக வந்தார் ஒருவர். டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த அவருக்கு, அவரின் மனைவி சிறுநீரக தானமளிக்க முன்வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் சிறுநீரகம் அவரின் கணவருக்குப் பொருந்தாமல் போனது.

ஒட்டு மொத்தமாக மூன்று  பேருக்கு சிறுநீரகம் செயலிழந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தானமளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் பொருந்தவில்லை. இந்த நிலையில்தான் மருத்துவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, மூன்று வழி சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து, கடைசியாகச் சிகிச்சைக்கு வந்தவரின் மனைவியின் சிறுநீரகத்தை, இரண்டாவதாக வந்தவருக்கும், அவர் சகோதரரின் சிறுநீரகத்தை, முதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கும் பொருத்தியிருக்கிறார்கள். பின்னர், முதலில் பாதிக்கப்பட்டு வந்த பெண்ணின், சகோதரியுடைய சிறுநீரகத்தை கடைசியாகச் சிகிச்சைக்கு வந்தவருக்குப் பொருத்தியிருக்கிறார்கள்.

உறுப்புதானம்

இந்த அறுவை சிகிச்சைக்காக நான்கு மருத்துவக் குழுக்கள் தயாராக இருந்திருக்கிறார்கள். அதில் இரண்டு குழுக்கள், சிறுநீரகத்தை வெளியில் எடுக்கும் அறுவை சிகிச்சையையும், மீதமுள்ள இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார்கள். காலை 7  மணியிலிருந்து 11 மணி வரை இந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மூன்று பேரின் உடல்நிலையும் தற்போது முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

சிறுநீரக தானம் பொதுவாக இறந்தவர்களிடமிருந்தும், மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தும் பெறும் நடைமுறைதான் சட்டபூர்வமான நடைமுறை. ஆனால், தற்போது செய்யப்பட்டுள்ள `மூன்று வழிச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை'  சிறப்பு அனுமதி பெற்று செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க