`ஸ்மார்ட்போனை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?’ - ஆய்வு சொல்லும் 4 காரணங்கள்!  | 4 triggers can control the itch of turning back to your phone

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (06/05/2019)

கடைசி தொடர்பு:19:55 (06/05/2019)

`ஸ்மார்ட்போனை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?’ - ஆய்வு சொல்லும் 4 காரணங்கள்! 

`ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுவதற்கு நான்கு முக்கியமான தூண்டுதல்களே காரணம்' என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இதைத் `தொடக்கத்திலேயே கண்டறிந்தால், ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதைத் தவிர்க்கலாம்' என்றும் அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன்

நான்கு வகை தூண்டல்கள் என்னென்ன?

* தேவையில்லாத நேரங்களில் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். உதாரணத்துக்குப் பேருந்து, ரயில் நிலையங்களில் நண்பன் அல்லது உறவினர்களுக்காகக் காத்திருப்பது.

* அலுவலகத்தில் ஒரேமாதிரியான வேலைகளைத் திருப்பி திருப்பிச் செய்யும்போதும், மனச்சோர்வை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வதற்கு முன்பும், பின்பும் ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்ப்பது அதிகரித்திருக்கிறது. 

* சமூகத்தில் மோசமான நிகழ்வுகள் ஏற்படும்போது அது குறித்த செய்தியை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும்போது அதிக நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவழிக்கின்றனர்.

* ஒருவரிடமிருந்து தனக்கு தகவல் வரும் என்ற எதிர்பார்ப்பு. உதாரணத்துக்குக் காதலன்/காதலியிடமிருந்து வரும் தகவல்களுக்காக. 
இவையெல்லாம் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதற்கான தூண்டல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் அடிமை - ஆய்வில் தகவல்

ஆராய்ச்சியில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர் அலெக்சிஸ் கினிக்கர், ``கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோரைத் தொடர்ந்து கண்காணித்தேன். அப்போது அவர்கள் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுவதைக் கவனித்தேன். அத்துடன் அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடினேன்” என்கிறார். இவர், அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் இன்ஃபர்மேஷன் ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும் அவர், `` `ஸ்மார்ட்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களே. இது, உங்களுக்கு எந்தளவுக்கு உபயோகமாக இருந்தது?’ என்று பயனாளர்களிடம் கேட்டால், அவர்களில் பெரும்பாலானோர் `ஒன்றுக்குமே உதவவில்லை. நேர விரயமே ஆனது’ என்றே கூறினர்'' என்றார். 

ஸ்மார்ட்போன் அடிமை - ஆய்வு

`ஸ்மார்ட்போன்களில் ஏன் அதிக நேரம் செலவிடுகின்றனர்' என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வயது வித்தியாசமின்றி எல்லா வயதினரும் மேலே குறிப்பிடப்பட்ட நான்குவகை தூண்டல்களால்தான் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிறார்கள் என்பதைக் கண்டறிந்தனர்.